எதிர்ப்புக்கள் மத்தியில் சிங்கள செயலாளர் கடமைகளில்-கல்முனை

676

 

கடந்த பல வருடங்களாக கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம்.எம்.நௌபல்- பெப்ரவரி மாதம் அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜ.எம்.ஹனீபா- இங்கு பதில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

கல்முனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட மொஹான் விக்ரம ஆராச்சி இன்று புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். கடந்த சில மாதங்களாக கல்முனை பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராக பணியாற்றி வந்த ஐ.எம்.ஹனிபாவிடம் இருந்து இவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் கல்முனை பௌத்த விகாராதிபதி ரன்முத்துகள சங்கரத்ன தேரரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. கல்முனை பிரதேச செயலகத்தின் வரலாற்றில் சிங்களவர் ஒருவர் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதற் தடவையாகும்.

இந்நிலையில் மகா ஓயா பிரதேச செயலாளராக கடமையாற்றிய மொஹான் விக்ரம ஆராச்சி கல்முனை பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நூறு வீதம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற கல்முனை பிரதேசத்திற்கு சிங்களவர் ஒருவர் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டதை ஊடகங்கள் மூலம் வன்மையாக ஆட்சேபித்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவுப் ஹக்கீம் இந்நியமனத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

அதேவேளை நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவை சந்தித்த அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்முனை பிரதேச செயலகத்திற்கான சிங்கள அதிகாரியின் நியமனத்தை வாபஸ் பெற்று விட்டு வழமை போன்று முஸ்லிம் பிரதேச செயலாளரை நியமிக்குமாறு வலியுறுத்தியிருந்தனர்.

எனினும் குறித்த சிங்கள பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பிரதேச செயலாளர் இன்று புதன்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்று பணியை ஆரப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

SHARE