எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் புதிய அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்- பிரதமர் ரணில்

413

 

ஜனாதிபதி பதவி மற்றும் அந்த பதவிக்குரிய அதிகாரங்களை நீக்குவது குறித்து அரசியலமைப்பு உருவாக்கல் குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவியையும் அதற்கான அதிகாரங்களும் நீக்கப்பட வேண்டும் என்பதே அரசியல் கட்சிகளில் நிலைப்பாடாக இருந்து வருகிறது.

உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதி பதவி மற்றும் அதற்குரிய அதிகாரங்கள் உள்ளடக்கப்படக் கூடாது என ஜே.வி.பி அரசியலமைப்பு உருவாக்கல் குழுவிற்கு அறிவித்துள்ளது.

தற்போதைய ஜனாதிபதி பதவி மற்றும் அதற்கான அதிகாரங்கள் அமுலில் இருந்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி பதவி ஒன்று அவசியமில்லை எனவும் ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசியமைப்பு உருவாக்கல் குழுக் கூட்டத்தில் இது சம்பந்தமாக பேசப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

புதிய அரசியலமைப்பின் மூலம் ஏற்படுத்தப்படும் பிரதமர் பதவி குறித்தும் இங்கு பேசப்பட்டுள்ளதுடன், தேர்தலுக்கு பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் புதிய அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என இதன் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

SHARE