“என் மகனுக்குத் திருந்தி வாழ்வதற்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். அவன் செய்த தவறுக்காக அவனை மன்னித்துவிடுங்கள்” என்று மன்றாட்டமாக வேண்டுகிறார் மயூரனின் அம்மா ராஜினி.

329

 

பொதுமன்னிப்புக்கான இறுதி இரங்கல் கோரிக்கையும் இந்தோனேசிய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில் எதிர்வரும் சில வாரங்களுள் ஒரு நாளில் பாலித் தீவில் உள்ள மனித நடமாட்டம் தடைசெய்யப்பட்ட கடற்கரையொன்றில் மயூரன் சுகுமாரன்,

இதயப் பகுதியில் சிவப்பு நிறத்தில் துப்பாக்கியால் சுடுவதற்கான இலக்கு வரையப்பட்ட வெள்ளை நிற மேலாடைகள் அணிவிக்கப்பட்டுத் தனி கம்பங்களுடன் சேர்த்துக் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், பன்னிரு துணை இராணுவ பொலிசார் பத்து மீற்றர் தூரத்தில் வைத்துத் தமது துப்பாக்கிகளை இயக்குவதன் மூலம், மரண தண்டனையை நிறைவேற்றுவர்.

2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இந்தோனேசியாவின் பாலித் தீவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஹெரோயின் எனப்படும் போதைப் பொருளைக் கடத்த முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் (பின்னர் ஒட்டுமொத்தமாகப் ‘பாலி 9’ என அழைக்கப்பட்டார்கள்) இந்தோனேசிய நீதிமன்றம் மரண தண்டனையை விதித்தது. ஆறு வருடங்களாக இந்தோனேசிய உயர் நீதிமன்றம்வரை சென்று போராடியும் இந்தோனேசிய ஜனாதிபதியிடம் கருணை மனு சமர்ப்பித்தும் பலன் கிடைக்காத நிலையில், இவர்கள் பாலியில் உள்ள சிறையில் மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறார்கள்.

மயூரன் இலங்கைவாழ் தமிழர்களான சுகுமாரன் – ராஜினி தம்பதிகளுக்கு மூத்த குழந்தையாக 1981இல் இங்கிலாந்தில் பிறந்தார். 1984இல் பெற்றோருடன் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து அங்கேயே கல்வி கற்று வளர்ந்தவர். குங்ஃபூ போன்ற கொரிய தற்காப்புக் கலையில் வல்லவரான மயூரன், சிட்னி நகரில் இளைஞர்களுக்கு அதைப் பயிற்சி அளித்தும் வந்தார். தவறான போதனைகளும் இளம் வயதிற்குரிய சவாலை எதிர்கொள்ளும் மனப்பாங்கும்தான் மயூரனையும் அவரது ஏனைய நண்பர்களையும் இவ்வாறானதொரு சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபடவைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

மயூரனது குடும்பப் பின்னணியோ வளர்ப்பு முறையோ அவரை இத்தகைய செயலில் ஈடுபடுத்தியிருக்க முடியாது. அவர்மீது இதுவரை அவுஸ்திரேலியாவில் ஒரு சிறிய குற்றம்கூடப் பதிவாகியிருக்கவில்லை.

இன்று மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மயூரன் பாலித் தீவில் கைதுசெய்யப்படும்போது அவருக்கு வயது 24 மட்டுமே.

1973இலிருந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் முறை அவுஸ்திரேலியாவின் சட்டப் புத்தகத்தில் இருந்து முற்றாக நீக்கப்பட்டது. அத்துடன் மரண தண்டனைக்கு எதிரான தனது நிலைப்பாட்டைச் சர்வதேச மன்றங்களில் அவுஸ்திரேலியா தொடர்ந்து வலியுறுத்தியும் வந்துள்ளது.

மரண தண்டனையைச் சர்வதேசரீதியாக இல்லாதொழிப்பதை வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் 1990இல் ஏற்றுக்கொண்ட அவுஸ்திரேலியா, அத்தீர்மானத்தில் கையொப்பமிட்ட அனைத்து உறுப்பு நாடுகளும் தமது நீதி பரிபாலன முறையிலிருந்து மரண தண்டனையை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வந்துள்ளது.

1990களில் போதைப் பொருட்களுடன் மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட அவுஸ்திரேலியர்கள் இருவருக்கு மலேசிய நீதிமன்றம் விதித்த மரண தண்டனையிலிருந்து மன்னிப்பு அளிக்கும்படி, அந்நாளில் பிரதமராயிருந்த பாப் ஹாக் மலேசிய அரசாங்கத்தை மிக உருக்கமாக வேண்டினார். அவருடைய வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு, பின்பு அவர்கள் தூக்கிலிடப்பட்ட செயலைக் “காட்டுமிராண்டித்தனம்” என அவர் வர்ணித்து மலேசியரின் கோபத்துக்கு ஆளானார்.

2005இல், சிங்கப்பூரில் போதைப் பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட வான் ருவோங் ங்குயென் என்ற அவுஸ்திரேலியருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவரை மன்னிக்கும்படி அவுஸ்திரேலியப் பாராளு மன்றம் நிறைவேற்றிய வேண்டுகோள் தீர்மானத்தையும் புறக்கணித்து சிங்கப்பூர் அரசாங்கம் அவரைத் தூக்கிலிட்டது. அப்போதைய அவுஸ்திரேலியப் பிரதமராயிருந்த ஜோன் ஹவர்ட் ஐந்துமுறைக்கு மேலாக சிங்கப்பூர் பிரதமருக்குத் தனிப்பட்ட முறையிலான மன்னிப்பு வேண்டுகோளை விடுத்திருந்தார்.

இந்தப் பின்னணியிலேதான் மயூரன் சுகுமாரன் உட்பட்ட அவுஸ்திரேலிய பிரஜைகள் ஒன்பது பேர் போதைப் பொருட்களைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் பாலியில் கைதுசெய்யப்பட்டனர்.

இந்தோனேசிய பொலிசாருக்கு அவுஸ்திரேலிய மத்திய பொலிசார் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது மேற்கொள்ளப்பட்டது.

மயூரனின் தங்கையான பிருந்தா சுகுமாரன் அவுஸ்திரேலிய வானொலிக்கு அளித்த பேட்டியில், “இதனால் இவர்கள் எதைச் சாதித்துவிட்டார்கள்? அவர்களுடைய குற்றத்தை ஏன் அவுஸ்திரேலியாவில் விசாரித்துத் தண்டனை வழங்கியிருக்கக் கூடாது? தமது குடிமக்கள் தூக்கிலிடப்படுவார்கள் எனத் தெரிந்திருந்தும் ஏன் இவ்வாறு நடந்துகொண்டார்கள்?” என வினவினார்.

1970களில் வியட்நாமிய யுத்தம் முடிவுக்கு வரும் வேளைகளில் பல ஆசிய நாடுகளுக்கூடாகப் போதைப் பொருள் கடத்தப்படுவது அதிகரித்தது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் போதைப்பொருள் வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனையை 1975இல் அறிவித்தன. இத் தண்டனை முறை உடனடியாகவே மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பின்னர் வட ஆப்பிரிக்க நாடுகளுக்கும் (ஐரோப்பாவுக்கு மிக அண்மையில் இருப்பதால்) பரவியது.

எனினும் இன்றைய நிலையில் இருபத்தைந்துக்கு மேற்பட்ட ஆசிய நாடுகள் மரண தண்டனையைத் தமது சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றிவிட்டன. பிலிப்பீன்ஸ் மிக அண்மையாக – ஜூன் 2006இல்- மரண தண்டனையை இல்லாதொழித்ததால், 1200 வரையான மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த கைதிகள் உயிர் தப்பினார்கள்.

உலகிலேயே இன்று அதிகமான மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளாக சீனா, ஈரான், அமெரிக்கா, வியட்நாம், சூடான் ஆகியவை விளங்குகின்றன. உலகின் ஏனைய நாடுகளில் தூக்கிலிடப்படுவோரின் மொத்த எண்ணிக்கையைவிட அதிகமானோர் சீனாவில் மட்டும் தூக்கிலிடப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருட்கள் அதிகமாகப் புழக்கத்தில் இருப்பதாகக் கருதப்படும் லத்தின் அமெரிக்காவின் பல நாடுகள் இன்று மரண தண்டனையை முற்றாக ஒழித்துவிட்டன.

மார்ச் 2007இல் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சங்கத்தின் மூன்று வார மாநாட்டில், வன்முறை சம்பந்தப்படாத குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்ற வாதத்தைச் சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையில் வலியுறுத்தி, பிலிப் ஆல்ஸ்ரன் முன்வைத்தார்.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராக இருந்த ஆல்ஸ்ரன், நீதிக்குப் புறம்பான, விசாரணையின்றி மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான மரண தண்டனைகளைக் கண்டறிவதற்கான ஐ.நா.சபையின் விசேடத் தூதுவராகவும் பணியாற்றினார்.

போதைப்பொருள் கடத்தல் போன்ற பொருளாதாரக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை எதிர்த்து வாதிடுவதற்கான நல்ல சந்தர்ப்பம் அம்மாநாட்டில் அவுஸ்திரேலியாவுக்குக் கிடைத்திருந்தும், ஐ.நாவுக்கான அவுஸ்திரேலியப் பிரதிநிதி மரண தண்டனைக்கான தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதிலிருந்து விலகியே இருந்தார் என்றார் அவர். அதே காலப்பகுதியில் பதினொரு அவுஸ்திரேலிய பிரஜைகள் மரண தண்டனையை எதிர் நோக்கி வெளிநாட்டுச் சிறைகளில் காத்திருந்தனர்.

மரண தண்டனை என்னும் பெயரில் ஒரு மனிதனின் உயிரை அரசு பறிப்பதற்கான அதிகாரம் மிகவும் கொடூரமானது எனச் சமூக ஆர்வலர்களும் சிந்தனையாளர்களும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பிரச்சாரம்செய்து வருகின்றனர்.

ஒரு மனிதன் தவறிழைப்பதற்காகவே பிறப்பதில்லை எனவும் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் அவன் தவறிழைத்துவிட்டால், அத்தவறை நினைத்து வருந்தி அவன் திருந்தி வாழ்வதற்கான சந்தர்ப்பத்தைச் சமூகம் அவனுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வாதிடுகிறார்கள்.

“காட்டுமிராண்டித்தனமான ஒரு குற்றச்செயலைச் செய்த ஒருவரைத் தூக்கில் போடுவதன் மூலம், நாமும் பழிக்குப் பழி என்னும் காட்டுமிராண்டித்தனமான நிலைக்குத் தாழ்ந்துவிடுகிறோம்” என்கிறார் அவுஸ்திரேலிய அரசியல்வாதியான ஆண்ட்றூ பாட்லெட்.

அமெரிக்காவில் சிறுபான்மை இனத்தவர், மன நிலை பிறழ்ந்தோர், நீதிமன்றத்தில் தம்மைச் சரியான முறையில் காப்பாற்றிக்கொள்ளப் பண வசதியற்ற ஏழைகள் போன்றவர்களே அதிகளவில் தூக்குத்தண்டனைக்கு உள்ளாகிறார்கள்.

ஈரானில் பிராயமடையாத சிறுவர், சிறுமியரும் மரண தண்டனைக்கு ஆளாக்கப்பட்டுக் கல்லெறிந்து கொலைசெய்யப்படுகிறார்கள். அண்மையில் 16 வயது மட்டுமே நிரம்பிய ஒரு இளம் பெண், கற்பு நெறிக்கான ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடிக்கத் தவறியதால் கல்லெறிந்து கொல்லப்படும் மரண தண்டனைக்குள்ளானாள்.

இங்கிலாந்தில் கொலைக் குற்றஞ் சாட்டப்பட்டு, 1953இல் பெருந் தொகையான மக்களது எதிர்ப்பின் மத்தியில் டெரெக் பெண்ட்லி தூக்கில் தொங்கவிடப்பட்டபோது அவருக்கு 19 வயது. அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தவறானது என்றும் ஆனால் குற்றச் செயலில் அவர் பங்கெடுத்தமைக்காக அவருக்குப் பகுதி மன்னிப்பு (இறந்த பின்பு) வழங்குவதாயும் 1993இல் (சரியாக 40 வருடங்களின் பின்) அப்போதைய உள்துறை அமைச்சர் அறிவித்தார்.

1998இல் அப்பீல் நீதிமன்றம் பெண்ட்லி குற்றமற்றவர் எனத் தீர்ப்பு வழங்கியது. தவறான நீதிவழங்கலால் பறிக்கப்பட்ட உயிரை மீண்டும் கொண்டுவர முடியுமா? பிரிட்டனின் முன்னாள் உள்துறை அமைச்சரான மைக்கல் ஹவர்ட் பின்வருமாறு கூறுகிறார்: “நீதி விசாரணை என்பது தவறுகளின்றி, முற்று முழுதாகச் சரியானது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. அத்தகைய விசாரணையின் அடிப்படையில், அரசு ஒரு மனிதனின் உயிரைப் பறிப்பதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை”. ஹவர்ட் ஒரு தலைசிறந்த சட்ட வல்லுநரும்கூட.

மரண தண்டனைக் கைதியாக இருந்த வால்மீகி முனிவர் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னரே இராமாயணத்தை எழுதினார் எனவும் அவர் தூக்கிலிடப்பட்டிருந்தால் இன்றுவரை வணக்கத்திற்குரியவராக உள்ள இராமபிரானின் கதை எமக்குத் தெரிய வந்திருக்க முடியுமா என வினவுவோர் உண்டு.

ஒரு மனிதன் செய்த தவறுக்காக அவனை அழித்துவிடுவதன் மூலம், அவனிடமிருக்கக் கூடிய அனைத்து ஆளுமைகளையும் அழித்துவிடுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது அவர்களுடைய வாதம். காலத்திற்கொவ்வாத, மனிதத்தன்மை சிறிதுமற்ற இத்தகைய தண்டனை முறையை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசியெறிய வேண்டும் என லண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகை தனது தலையங்கத்தில் வலியுறுத்தி இருந்தது.

மயூரன் சிறைக்குள்ளே ஒரு முன்னுதாரணமான மனிதராக விளங்குகிறார் எனவும் அவர் செய்த தவறை மீண்டும் செய்யமாட்டார் எனத்தாம் முழுமனதுடன் நம்புவதாகவும் அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் எனவும் பாலியின் கெரபொக்கான் சிறைச்சாலையின் பிரதமப் பொறுப்பதிகாரி இந்தோனேசிய உயர் நீதிமன்றத்தில் வேண்டினார்.

ஆறு வருடங்களாக மிக மோசமான சுகாதார நிலைமை உள்ளதாகக் கருதப்படும் பாலிச் சிறையில் அடைபட்டுள்ள மயூரன், சிறைச்சாலைக்குள் ஒரு குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கைதிகளின் நலன்களைக் கவனிப்பது, சீர்திருத்த வேலைகளைக் கவனிப்பது என்பவற்றுடன் சககைதிகளுக்கு ஓவியம் வரையக் கற்றுக்கொடுக்கிறார்; தானும் ஓவியம் தீட்டுகிறார். பாலியின் தலைநகரத்தில் ஒரு ஓவியக் கண்காட்சியை ஏற்பாடு செய்து சிறைக்குள் வரையப்பட்ட ஓவியங்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருமானத்தில், போதைப்பொருள் பாவனையிலிருந்து மீள விரும்புபவர்களுக்கான உதவி நிலையம் ஒன்றை பாலியில் இயங்கச் செய்கிறார். “வாழ்க்கையின் நோக்கங்கள் எவை என்று புரிந்துகொள்ளாமல் வாழ்ந்தமைக்காக நான் கவலைப்படுகிறேன்; சிறை எனக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்துவிட்டது” என்கிறார் மயூரன். “எனது தவறுக்காக நான் இந்தோனேசிய மக்களிடமும் அவுஸ்திரேலிய மக்களிடமும் மன்னிப்பு கோருகிறேன்”.

“அவரைத் தூக்கிலிடுவதன் மூலம் அவர் மட்டும் இறக்கப்போவதில்லை” என்கிறார் மயூரனின் தங்கை பிருந்தா சுகுமாரன். “அப்பா, அம்மா, நான், தம்பி மற்றும் அவருடைய நண்பர்கள் அனைவரும் ஒரு நிரந்தரமான இழப்புடன் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம். அந்த இழப்பிலிருந்து எங்களால் என்றும் மீள முடியாது”.

“என் மகனுக்குத் திருந்தி வாழ்வதற்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். அவன் செய்த தவறுக்காக அவனை மன்னித்துவிடுங்கள்” என்று மன்றாட்டமாக வேண்டுகிறார் மயூரனின் அம்மா ராஜினி.

SHARE