எமது தாயகத்தில் என்றுமில்லாதவாறு மது பாவனையும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் திட்டமிட்ட ரீதியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனவட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் புதிய கண்டுபிடிப்பு

346

 

“இன்று எமது தாயகத்தில் என்றுமில்லாதவாறு மது பாவனையும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் திட்டமிட்ட ரீதியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. எமக்குத் தெரியாமலேயே நாம் இவற்றுக்கு அடிமையான நிலையில் இவற்றிலிருந்து மீள முடியாமல் செல்லும் வழியறியாது சென்று கொண்டிருக்கிறோம். அண்மையில் எமது பிரதேசங்களில் நடைபெறும் சம்பவங்கள் இவற்றுக்கு உதாரணங்களாக இருக்கின்றன. இதையெல்லாம் கட்டுப்படுத்தி, எமது சிறார்களின்பாதுகாப்பை அனைவரும் சேர்ந்து உறுதிப்படுத்துவோம்.” – இவ்வாறு வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலையில் அண்மையில் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அஙகு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- நாம் எல்லோரும் நடந்த சம்பவங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றோம். உண்மையிலேயே இவ்வாறான சம்பவங்கள் இன்னும் ஒரு தடவை இந்த மண்ணிலே நடந்துவிடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் நாங்கள் உடனடியாகவே செயலில் இறங்க வேண்டிய அவசியமான, அவசரமான காலகட்டமாக இது காணப்படுகிறது. இதனால் தான் மிக அவசரமாக பாடசாலைகளில் இவ்வாறான விழிப்புணர்வு கருத்தரங்குகளை மாணவர் மத்தியிலே நடத்திட வேண்டும். சிறுவர் நலன் சார்ந்த துறையிலே பாண்டித்தியம் பெற்ற அறிவார்ந்த அங்கீகரிக்கப்பட்டவர்களைக் கொண்டு இவ்வாறான செயற்றிட்டங்களை நாங்கள் முன்னெடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றோம். குறிப்பாக அண்மையில் வடமாகாண கல்வியமைச்சர் த.குருகுலராசா தலைமையிலேயே இடம்பெற்ற கல்வி அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி தீர்மானத்துக்கு அமைவாக அனைத்துப் பாடசாலைகளும் இச்செயற்றிட்டத்தில் இணைந்து கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன.

அந்த வகையில்தான் இன்றைய தினம் இம்மானிப்பாய் மெமோறியல் பாடசாலையில் இக்கருத்தரங்கு இடம்பெறுகின்றது. இக்கருத்தரங்கில் பிரதேசத்துக்குப்பொறுப்பான காவல்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளமை சிறப்பானதாகும். குற்றமொன்று இடம்பெற்ற பின்னர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் பார்க்க, அக்குற்றம் இடம்பெறாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதே உண்மையான கவல்துறை நடவடிக்கையாகும். அச்செயற்பாட்டில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபடவேண்டுமென வலியுறுத்த விரும்புகின்றேன். பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பாக்கு விற்பனை, போதைப்பொருள் விற்பனை, நவீன தொடர்பு சாதனக்களைத்தவறாகப்பயன்படுத்தும் போக்கு, சிறுவர் , சிறுமியர் மீதான தொந்தரவுகள் என்பவற்றைக்கண்டறிந்து களையெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினர் மற்றும் காவல்துறையினர் அத்தனை பேருக்குமே உரியது.

நாம் அனைவரும் எமது பொறுப்பை உணந்து செயற்பட்டால் மாத்திரமே திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இந்த அனர்த்தத்திலிருந்து எமது தாயகச்சிறார்களை காப்பாற்ற முடியும். இச்செயற்றிட்டத்தை நாம் பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிப்பதன் காரணம் இந்த வயதில் இருப்பவர்களைத்தான் நன்மையோ தீமையோ மிகவும் இலகுவாக பழக வைக்க முடியும். ஆகவே தீமைகளிலிருந்து எமது எதிர்கால தலைமுறையை காப்பாற்றி நல்வழியில் நடைபோட வைக்க வேண்டுமானால் பாடசாலைகளே அதற்கான சிறந்த களங்கள் என நாம் கருதுகின்றோம்.

இன்றைக்கும் எம்மில் இருக்கக்கூடிய நல்ல பழக்கங்கள் எதுவானாலும் அது பாடசாலைகளில் இருந்து கற்றுக்கொண்டவையேயாகும். அதனால் தான் எமது இச்செயற்றிட்டத்தை நாம் பாடசாலைகளிலிருந்து தொடங்கியுள்ளோம். இன்றைய சீரழிவுச்செயற்பாடுகளும் பாடசாலைகளை நோக்கியே ஏவி விடப்பட்டுள்ளதும் இதற்கான ஒரு காரணமாகும்

SHARE