எம்மைச் சீண்டுவது உங்களுக்கு நீங்களே புதைகுழி தோண்டுவதற்கு சமமானது என சேனா

429

 

11பொது பலசேனாவைக் குற்றம் சுமத்தி, எம்மைச்சீண்ட முயன்றால் விளைவு விபரீதமாகும். அது உங்களுக்கு நீங்களே புதைகுழி தோண்டுவதாகவே முடியும் என்று அரசு, எதிர்க்கட்சிகள், பொலிஸ் ஆகிய முத்தரப்புக்களையும் எச்சரித்திருக்கிறது பொது பலசேனா. பேருவளையிலும் அளுத்கமவிலும் அண்மையில் இடம்பெற்ற இன வன்முறைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும், சில வலிமையான வெளிநாட்டு இராஜதந்திரிகளும், தீவிரவாத முஸ்லிம் அமைப்புக்களும் மேற்கொண்ட சர்வதேச சதி நடவடிக்கைகளே காரணம் என்பது தெளிவானது என்றும் அந்த அமைப்புக் கூறியுள்ளது.


“இந்த மோதல்கள் குறித்து பகிரங்கமான கருத்துக்களைத் தெரிவிப்பதன் மூலம் ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவும் நேரடியாக அரசியலுக்குள் நாம் வருவதற்கு எம்மைத் தள்ளக்கூடாது.” என்றும் அந்த அமைப்பின் சிரேஷ்ட பொது பலசேனாநிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே கூறினார். பேருவளையிலும் அளுத்கமவிலும் பொது பலசேனா தலையிடாவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பது குறித்து யாரும் பேசுவதில்லை என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார். மத நிறுவனம் என்ற பெயரில் பயங்கரவாதிகளைப் பயிற்சியளித்து, பேணிப் பாதுகாத்து வளர்த்தெடுக்கும் மிகச் சூடான பிரதேசமாகவே பேருவளை இருந்தது என்றும் பொது பலசேனா தெரிவித்தது.


“அளுத்கமவில் இடம்பெற்ற சம்பவங்களுக்கும் விளைவுக்கும் மூலகாரணம் நாங்கள்தான் என்று கருதி, அதற்காக பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் வண. கலகொட அத்த ஞானசார தேரரைக் கைது செய்தால் அதன் மூலம் நீண்ட காலமாகத் தொடரும் பிரச்சினை தீர்ந்து விடும் என அரசு கருதுமானால், நல்லது, அப்படியே செய்யட்டும். ஆனால், நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்டடத்தையும் சிறைச்சாலையாகவும், ஒவ்வொரு தென்னை மரத்தையும் தூக்கு மேடைத் தூணாகவும் மாற்ற வேண்டியிருக்கும்” என்று பொது பலசேனாவின் கல்வி, ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட இணைப்பாளர் கலாநிதி சமீலா லியனகே சொன்னார். முஸ்லிம் தீவிரவாதம் காத்தான்குடி, கல்முனை, மட்டக்குளி, அக்ரைப்பற்று ஆகிய பகுதிகளில் பரவி வருகின்றது என்றும், ஹட்டன் பகுதியில் இந்துக்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்படுகின்றனர் என்றும் பொது பலசேனா குற்றம் சுமத்தியுள்ளது.

SHARE