எம்.பி மீது தாக்குதல்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம்

71

 

இனவெறியர்கள் தாக்குதலை நடத்துகிறார்கள். அதுவும் ஓர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி மீது இந்த கொடூரத்தாக்குதலை இனவெறியர்கள் நடத்தியுள்ளனர் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு துணைப்பொதுச்செயலாளரால் இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த கண்டனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பற்ற நாடாக இலங்கை தொடருகிறது. இந்தியாவில் இந்துத்துவ மதவெறியர்கள் எப்படி பொலிஸார் இருக்கும் போதே சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துவார்களோ அப்படி கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது இனவெறிக்கும்பல்.

தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டின் நினைவையொட்டி, திருகோணமலையிலிருந்து செப்டம்பர் 15 முதல் எழுச்சி ஊர்தி பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து.

இந்த அமைப்பின் பொதுச்செயலாளரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள் அணிதிரண்டனர்.

நேற்று முன்தினம் திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்திப் பயணம் நேற்று மட்டக்களப்பு வாகரையில் நிறைவடைந்தது. மூன்றாவது நாளான இன்று திருகோணமலை மூதூர் கட்டைபறிச்சான் பிரதேசத்தில் ஆரம்பித்த ஊர்திப் பவனி அங்கிருந்து ஆலங்கேணி தம்பலகாமம் ஊடாக திருகோணமலை நகருக்குள் பிரவேசித்தது.

மக்கள் எழுச்சியுடன் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த கூடினர். 50 க்கும் மேற்பட்ட இராணுவ புலனாய்வாளர்கள் வருகைத்தந்து பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

கப்பல்துறை முக சந்திக்கருகில் ஊர்தி வாகனம் சென்று கொண்டிருந்த போது, திடீரென கல்வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சர்தாபுர சந்தியில் வாகனங்கள் மீதும் தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இவையெல்லாம் பொலிஸார் இருக்கும் போதே நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

கல்லெறிந்த அந்த இனவெறிக்கும்பல் நேரடியாக ஊர்தி அருகே வந்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை சூழ்ந்து கொலை வெறியோடு தாக்கினர்.

ஆனால், இனவெறியர்களின் தாக்குதலை பொலிஸார் வேடிக்கை பார்த்தனரே தவிர, தடுக்கக்கூட முயலவில்லை. பின்னர் பொதுமக்களும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிர்வாகிகளும் நாடாளுமன்ற உறுப்பினரை தாக்குதலிலிருந்து பாதுகாத்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

செல்வராசா கஜேந்திரன் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்திய அமைதிப்படையை கண்டித்தும் 5அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தியும் 1987 செப்டம்பர் 15 ஆம் திகதி தியாக தீபம் திலீபன் உண்ணாநிலைப்போராட்டத்தை துவங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பகுதிகளில் தியாக தீபம் திலீபன் நினைவை போற்றும் வகையில் இம்மாதிரியான ஊர்தி பயணத்தை ஒருங்கிணைப்பது வழக்கம்.

முறையான முன் அனுமதியோடு தான் நடத்தப்படுகிறது. ஆனாலும், இனவெறியர்கள் இத்தாக்குதலை தொடுத்திருப்பது கண்டனத்துக்குரியதாகும். இப்படி தாக்குதலை நடத்தி தமிழீழ உறவுகளை அச்சுறுத்த முடியாது.

நாடாளுமன்ற உறுப்பினர் மீதான இத்தாக்குதலை விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இன்னமும் தொடரும் இனவெறிப்போக்குக்கு எந்த தீர்வும் காணாமல், இனவெறி அரசுக்கு ஒத்துழைக்கும் இந்திய ஒன்றிய அரசின் போக்கும் பவுத்த இனவாதிகளுக்கு துணைபோவதாகவே அமைந்துள்ளது.

தொடரும் இத்தகைய இனவெறித்தாக்குதலை தடுத்து நிறுத்தும் பொறுப்பு சர்வதேசத்துக்கும் உண்டு. ஆகவே,இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு தீர்வு காண இந்தியாவும் தலையிட வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE