எரிபொருள் விலையேற்றத்தை நியாயப்படுத்தும் எகிப்திய பிரதமர்

370
எகிப்து நாட்டில் முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆட்சி புரிந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2011ஆம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கி முகமது மோர்சி ஆட்சியைப் பிடித்தார். ஆனால் அவரது ஆட்சியும் ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்கவில்லை.

சென்ற வருடம் ஜூலை மாதம் அவரது பதவியிறக்கத்திற்குப் பின் இந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற்று அந்நாட்டின் ராணுவத் தளபதியாக இருந்த அப்டெல் படா எல் சிசி அதிபர் பொறுப்பை ஏற்றுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு நிலவி வரும் அரசியல் நெருக்கடிகளிலும், வன்முறைக் கலவரங்களிலும் மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலை முற்றிலும் மாறுபட்டுள்ளது.

இதனை ஸ்திரப்படுத்தும்பொருட்டு அங்கு இந்த மாத ஆரம்பத்தில் மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. தொடர்ந்து எரிபொருள் விலையேற்றம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் நேற்று அதிகாலையிலேயே புதிய கட்டண விகிதங்கள் அமல்படுத்தப்பட்டன.

இந்த அதிகப்படியான கட்டண உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் தங்கள் சீற்றத்தை பொது பேருந்துகளின் இயக்குனர்களிடம் வெளிப்படுத்த மற்றும் பலரோ பற்றாக்குறை கையிருப்பை எண்ணி தங்கள் வாகனங்களில் எரிபொருள் நிரப்பிக்கொள்ளும் பொருட்டு பெட்ரோல் நிலையங்களை முற்றுகை இட்டனர்.

80 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்ட இந்த விலை உயர்வு குறித்து தொலைக்காட்சி உரை ஒன்றில் அந்நாட்டின் பிரதமர் இப்ராஹீம் மஹ்லப் பேசினார். கடந்த பத்தாண்டுகளில் எரிபொருள் மாநியங்களுக்காக எகிப்து அரசாங்கம் செலவிட்ட தொகையானது 687 பில்லியன் பவுண்டுகளாக உயர்ந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற இந்தத் தொகை செலவிட்டிருக்கப்படலாம் என்று கூறிய பிரதமர் இதற்கு மேலும் மானியங்களை ரத்து செய்யாமல் இருப்பது குற்றமாகத் தோன்றும் என்றார்.  எகிப்தின் 86 மில்லியன் மக்கள் தொகை மதிப்பீட்டில் 26.3 சதவிகிதத்தினர் வறுமையில் வாழ்வதை அவர் குறிப்பிட்டார்.

அதுபோல் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 13.6 சதவிகிதமாக இருப்பதையும், அதாவது 20 லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்களில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தினராக உயர்ந்துள்ளதையும் அவர் தெரிவித்தார். எகிப்தில் அரசியல், பொருளாதார ,சமூக சீர்திருத்தங்கள் ஏற்படவேண்டும்.

கடன்சுமை பெருகியிருக்கும்போது இந்த நிலையை அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்லவேண்டுமா என்பது குறித்து யோசிக்கவேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு குறைக்கப்படும் பகுதி மானியங்களால் மிச்சப்படும் 51 பில்லியன் பவுண்டுகள் மக்களின் கல்வி, சுகாதாரம், ஓய்வூதியம் மற்றும் உயர்ந்துவரும் ஊதியங்களில் செலவிடப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

கடினமான மானியப் பிரச்சினையைத் தான் சமாளிக்கவேண்டும் என்று கூறிய அதிபர் சிசியும் சீரழிந்த நிலையில் இருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒவ்வொரு குடிமகனும் தியாகங்களை செய்யத் தயாராக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE