காணியும் வீட்டுத்திட்டமும் வழங்கப்படாத நிலையில் முல்லைத்தீவு முத்தையன்கட்டு மக்கள் தொடர்ந்தும் பழுதடைந்த தற்காலிக வீடுகளிலேயே வசிப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முத்தையன்கட்டு ஜீவநகர் பகுதியில் நடைபெற்ற மக்கள் குறைகேள் சந்திப்பொன்றில் காணி வீட்டுத்திட்டம் ஏற்று நீர்ப்பாசனத்துக்கான வாய்க்கால் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு குறைகளை மக்களும் முன்வைத்திருந்தனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
கடந்த 2015-01-21 அன்று முத்தையன்கட்டு ஜீவநகர் 90 ஏக்கர் திட்ட மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஏற்பாடுசெய்திருந்தார்.
ஜீவநகர் அம்மன் கோயில் அருகாமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் கலந்து கொண்ட மக்கள் காணி, வீட்டுத்திட்டம், ஏற்று நீர்ப்பாசனத்துக்கான வாய்க்கால் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.
ஏறத்தாழ 30 வருடங்களுக்கும் மேலாக அவ்விடங்களில் வாழ்ந்துவரும், முத்தையன் கட்டு ஜீவ நகர் 90 ஏக்கர் திட்டத்தைச் சேர்ந்த 44 குடும்பங்களில் உள்ள மக்களே சுமார் 5 ஆண்டுகளாக இவ்வாறு இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர்.
குறைகேள் சந்திப்பின் நிறைவில் பழுதடைந்த நிலையில் உள்ள தற்காலிக வீடுகளுக்குச்சென்ற வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மக்களின் முறைப்பாடுகளை உறுதிசெய்திருந்தார்.
இவை தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மேற்படி 44 குடும்பங்களுக்கும் மத்திய வகுப்புத்திட்ட காணிகள் இன்னும் வழங்கப்பட வில்லை. 2010ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் அளவில் தற்காலிக வீடு என்று 6 மாத உத்தரவாதத்துடன் வீடு வழங்கப்பட்டதாகவும், இன்று நான்கரை ஆண்டுகள் கடந்து விட்டிருக்கின்றபோதிலும் இன்னும் காணியோ வீட்டுத்திட்டமோ வழங்கப்படவில்லை என்றும் மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.
நான்கரை ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் தற்காலிக வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளன. தகரங்கள் மற்றும் கிடுகுகள் கொண்டு கூரைகளை மீள அமைத்து சில வீடுகளில் மக்கள் தங்களின் சிறு பிள்ளைகளுடன் வாழ்வதை நேரில் கண்ணுற்றேன். இவ்வாறான தற்காலிக வீடுகளும் முன்னதாக மக்களிடம் இருந்து தலா 5500 ரூபா அளவில் அறவிடப்பட்டே கட்டிக்கொடுப்பதாகவும் மக்கள் தெரிவித்திருந்தனர்.
இது தவிர ஏற்று நீர்பாசனம் செய்யக்கூடிய வழிகள் இருந்தும் வாய்க்கால் புனரமைப்புக்கள் செய்யப்படாத நிலையால் தொழில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். கிராமத்தின் குறைகள் தொடர்பில் விரிவாக மக்களுடன் கலந்துரையாடியபின், அவை குறித்து உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தினேன்.. என்றார்.