ஐரோப்பாவில் விடுதலைப்புலிகளின் தடை நீக்கம் என்பதை தமிழ்த்தரப்புக்கள் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் – சிறிதரன்

392

நீண்டகால போராட்ட வரலாற்றில் விடுதலைப்புலிகளின் அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடைசெய்யப்பட்டிருந்தது. நேற்றைய தினம் இந்தத் தடையானது நீக்கப்பட்டுள்ள இந்நிலையில் தமிழ் மக்கள் அனைவரும் சந்தோஷப்படும் அதேவேளை இதைவைத்துக்கொண்டு அடுத்தகட்ட தமிழ்மக்களுக்கான விடுதலை நகர்வுகளை நகர்த்திச் செல்லவேண்டும். அமெரிக்கா உட்பட 57 நாடுகளும், 22 சர்வதேச அமைப்புக்களும் சமாதான ஒப்பந்த காலத்தில் விடுதலைப்புலிகளுடன் நெருங்கி நட்புறவுகளை வைத்திருந்தது மாத்திரமல்ல. யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்து சமாதானப்பேச்சுக்களில் ஈடுபட்டு நிரந்தர சமாதானத்தினை இலங்கையில் உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டன.
அதன் பின்னர் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளின் அதிகாரங்களினால் இச்சமாதானப் பேச்சுவார்த்தை குழப்பப்பட்டு மீண்டும் யுத்தம் ஆரம்பித்தது. அதாவது மாவிலாறில் ஆரம்பித்த யுத்தம் முள்ளிவாய்க்காலில் மௌனித்தது. ஆனாலும் விடுதலைப்புலிகளினுடைய செயற்பாடுகள் உலகளாவிய ரீதியில் நின்றுவிடவில்லை. தமிழ் மக்களின் விடிவுக்காக இறுதிவரை போராடிய குழுக்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் முக்கியத்துவம் பெற்றனர். பிரபாகரனின் இத்தகைய போராட்டத்தின் காரணமாக இன்று சர்வதேச ரீதியில் விடுதலைப்புலிகளுக்கான ஓர் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனை நாம் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு எமது அரசியல் நடவடிக்கைகளை தந்திரோபாயமாக மேற்கொள்வோமாகவிருந்தால் எஞ்சியிருக்கும் தடைச்சட்டங்களும் நீக்கப்பட்டு தமிழ் மக்களின் விடுதலைக்காக குரல்கொடுத்தவர்கள் விடுதலைப்புலிகள் எனவும், ஒரு இன அழிப்பை தடுத்து நிறுத்த செயற்பட்டவர்கள் என்றும் உலக நாடுகளினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு வடகிழக்கு இணைந்த ஆட்சிமுறைமை கொண்டுவரப்பட்டு தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழியமைக்கும் என்றார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.

SHARE