ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியாவின் நாடகம்

437

 

india-srilanka-Genocide-partners-610x2501

கடந்த காலங்களில் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டங்களில் கபடத்தனமான சூழ்ச்சிகளையும், சிறிலங்காவை காப்பாற்றும் தந்திரோபாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்த இந்தியா இம்முறை தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் நாடகம் ஒன்றை ஆடி முடித்திருக்கிறது.

ஐ.நா.மனித உரிமை பேரவையில் அமெரிக்கா பிரேரணை சமர்ப்பித்திருப்பதற்கு பதிலாக இந்தியாவே பிரேரணையை கொண்டு வரவேண்டும் என்றும் அதில் தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு, மற்றும் போர்க்குற்றத்திற்கான சர்வதேச விசாரணை வலியுறுத்தப்பட வேண்டும் என தமிழகத்தில் மாணவர்கள் உட்பட அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் அதனை சமாளிக்கும் வகையில் ஜெனிவாவில் இந்தியா அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருந்தது.

வாக்கெடுப்பு முடிந்த கையோடு புது கதை ஒன்றையும் இந்தியா கசிய விட்டிருக்கிறது. ஐநா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்தத் தீர்மானத்தில் இந்தியா 7 திருத்தங்களை முன்வைத்ததாகவும், ஆனால் அமெரிக்கா அவற்றை முறைப்படி நிராகரித்து விட்டதாகவும் இந்தியாவில் இருந்து வெளிவரும் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடாக செய்தி கசிய விடப்பட்டிருக்கிறது.

அமெரிக்கத் தீர்மானத்தில் 7 திருத்தங்களைச் செய்வதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டிருந்ததாகவும், இதனடிப்படையில் எழுத்து மூலம் இந்தியா முன்வைத்திருந்த குறித்தத் திருத்தங்களை அமெரிக்காவும், இணை அனுசரணை நாடுகளும் நிராகரித்து விட்டதாக இந்திய தரப்பு செய்திகளை பரப்பி வருகிறது.

ஜெனிவாவில் இருக்கும் இராஜதந்திரிகள் இந்த செய்தியை பார்த்து வேடிக்கையாக சிரித்திருப்பார்கள். ஏனெனில் இது ஐ.நா.மனித உரிமை பேரவையின் நடைமுறையை பற்றி சிறிதும் அறிந்திராதவர்கள் பேசுவதை போல அச்செய்தி அமைந்திருந்தது.

அமெரிக்கா தயாரித்த நகலில் திருத்தங்களையோ அல்லது புதிதாக சேர்ப்பதற்கோ எந்தவித முயற்சியும் செய்யவில்லை என்பதை மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் இராஜதந்திரிகள் அனைவரும் அறிவார்கள்.

இலங்கை தொடர்பாக அமெரிக்கா தயாரித்த நகலை அமெரிக்கா இம்மாதம் 7ஆம் திகதி ஜெனிவாவில் உள்ள உறுப்பு நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு வழங்கியிருந்தார்கள். அடுத்த நாள் மாலை 3மணிக்கு ஐ.நா.மனித உரிமை பேரவையின் 21ஆம் இலக்க மண்டபத்தில் உப குழு கூட்டம் ஒன்றிற்கும் அழைப்பு விடுத்திருந்தது.

அந்த கூட்டத்திற்கு இலங்கையின் பிரதிநிதி ஆரியசிங்க உட்பட அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் சமூகமளித்திருந்தார்கள். ஆனால் இந்திய பிரதிநிதி அதில் சமூகமளிக்கவில்லை. பாகிஸ்தான், சீனா, கியூபா, ரஷ்யா, தாய்லாந்து என இலங்கைக்கு ஆதரவான நாடுகளும் கலந்து கொண்டு தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தன.

அன்று மாலை ஜெனிவாவுக்கான இந்திய தூதுவர் மனித உரிமை பேரவை பிரதான கூட்டங்களுக்கு சமூகமளித்திருந்த போதிலும் அன்றுமாலை இடம்பெற்ற உப குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாது நளுவியிருந்தது.

அதன் பின்னர் 12ஆம் திகதி மீண்டும் ஒரு உபகுழுக்கூட்டத்தை கூட்டியிருந்தது. இதில் திருத்தப்பட்ட நகல் அக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உறுப்பு நாடுகளின் ஆலொசனைகளை அமெரிக்கா கோரியிருந்தது. சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகள் இந்த நகலை எதிர்த்திருந்தன. ஐரோப்பிய ஒன்றியம் உட்பட கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வரவேற்றிருந்தன. அன்றைய கூட்டத்திற்கு இந்திய பிரதிநிதி சமூகமளித்திருந்த போதிலும் எந்த கருத்தையும் தெரிவிக்காது மௌனமாக இருந்தார்.

இந்நிலையில் 14ஆம் திகதி அமெரிக்காவினால் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் 19ஆம் திகதி அமெரிக்காவுக்கு சில திருத்தங்களை செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. 21ஆம் திகதி மனித உரிமை சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

14ஆம் திகதி பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அப்பிரேரணையை சமர்ப்பித்த நாடு மட்டும் 19ஆம் திகதி மாலை வரை திருத்தங்களை செய்வதற்கே சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

அதுவரை மௌனமாக இருந்த இந்தியா முதல்தடவையாக 21ஆம் திகதி பிரேரணை சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே வாய் திறந்தது. அந்த சந்தர்ப்பத்தில் கூட வாய் மொழி மூலமான திருத்தங்களை செய்வதற்கு சந்தர்ப்பம் காணப்பட்டது. ஆனால் பிரேரணையில் திருத்தங்களை செய்வதற்கான சந்தர்ப்பத்தை கோர தவறிய இந்தியா தன்னுடைய கருத்தை மட்டும் தெரிவித்திருந்தது.

இவ்வாறு ஐ.நா.மனித உரிமை பேரவையில் கபட நாடகம் ஆடிய இந்தியா தமிழக மக்களை திருப்தி படுத்தும் வகையில் புதுக்கதை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 7 பிரேரணைகளை இந்தியா சமர்ப்பித்ததாகவும் அதனை அமெரிக்கா நிராகரித்து விட்டதாகவும் இந்திய அரசுக்கு சார்ப்பான பத்திரிகைகள் மூலம் செய்திகளை வெளியிட்டு வருகிறது.

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இந்தியாவின் கடந்த காலங்களை பார்த்தால் இந்த கபட நாடகத்தை புரிந்து கொள்ள முடியும்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற மனித உரிமை பேரவை கூட்டத்தில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுவிட்சர்லாந்து ஒரு பிரேரணையை கொண்டு வந்திருந்தது.

அந்த பிரேரணையை நிராகரிக்க செய்து சிறிலங்காவை பாராட்டும் தீர்மானம் ஒன்றை இந்தியாவே முன்னின்று கொண்டு வந்தது.

அதேபோல 2011ஆம் ஆண்டு இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மனித உரிமை பேரவையில் பிரேரணை ஒன்றை முன்வைக்க நடவடிக்கை எடுத்த போது அதனை தடுத்து நிறுத்தியது இந்தியா தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை தவிர்க்க முடியாத நிலையில் ஆதரித்திருந்தது.

இவ்வாறு காலத்திற்கு காலம் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் இந்தியா தற்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில் இலங்கை தொடர்பாக தாமும் பிரேரணைகளை முன்வைக்க முயற்சி செய்ததாக செய்திகளை கசிய விட்டு வருகிறது.

இந்தியாவுக்கு இவ்வாறான கபட நாடகம் என்பது புதியது அல்ல.

இரா.துரைரத்தினம்

SHARE