ஐ.நா விசாரணைக்குழுவை அனுமதிக்க கூடாது!- ஆளும் கூட்டமைப்பின் 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இந்தப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர்

486

ஐநா விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இன்று புதன்கிழமை  சபாநாயகரிடம் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கூட்டமைப்பின் 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இந்தப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர்.

இதன் மூலம், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும்  போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு, ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு இலங்கையில் விசாரணை நடத்த அனுமதிக்க கூடாது என இந்தப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிமை அன்று நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரேரணை மீதான விவாதம் நடத்துவதற்கான தினம் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேவேளை எதிர்வரும் 17ம் திகதி பாராளுமன்ற அமர்;வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அன்றைய வராத்திலேயே ஐநா விசாரணைக் குழுவுக்கு எதிரான பிரேரணை மீதான விவாதங்கள் இடம்பெறலாம் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையில் ஆளும் தரப்பும் ஜனாதிபதி மற்றும் அவரது ஆலோசகர்களும் இணைந்து உருவாக்கிய பொறியே ஐநா விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிப்பது குறித்த பொறுப்பை பாராளுமன்றிடம் ஒப்படைத்தமை என ஆளும் தரப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இந்தப் பிரேரனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்பிற்கு விட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர யாரும் பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க மாட்டார்கள்.

எதிர்வரும் குறுகிய காலத்தில் பாராளுமன்ற தேர்தலோ அல்லது ஜனாதிபதி தேர்தலோ வரவுள்ள நிலையில், பிரேரனையை எதிர்த்து வாக்களிக்க பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மைக் கட்சிகள் துணியப் போவதில்லை.

அத்துடன் ஆளும்தரப்புடன் உள்ள தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மலையக மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஐநா விசாரணைக் குழுவுக்கு எதிராகவே ஆளும் தரப்புடன் இணைந்து வாக்களிப்பர்.

இந்தநிலையில் நாட்டின் சட்டவாக்கத் துறையான பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகள் உள்ளிட்ட பெரும்பான்மைக் கட்சிகள் யாவும் இணைந்து சர்வதேச விசாரணையை தோற்கடித்த வரலாற்றுச் சாதனையை ஆளும் தரப்பு ஏற்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் முழு இலங்கையுமே ஐநாவின் விசாரணையை எதிர்ப்பதாக பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் ஐ.நா விசாரணைக் குழுவினால் இலங்கைக்குள் பிரவேசித்து விசாரணைகளை மேற்கொள்ள முடியாத நிலையை சர்வதேச அளவில் தெரியப்படுத்த ஆட்சியாளர் முனைவதாக தெரிவிக்கப்படுகிறது.

3354_content_p1_1

SHARE