ஐ.நா.வின் உதவிகள் அரசு அனுமதியில்லாமல் வழங்கப்படமாட்டாது: ஆசாத்

497
சிரியாவில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ஐ.நா மனிதாபிமான உதவிகளைச் செய்துவருகின்றது. ஆனால் இந்த உதவிகள் அனைத்தும் சிரியா அரசின் அனுமதி பெற்ற பின்னரே அங்குள்ள மக்களைச் சென்று சேருகின்றது.

இந்த நடைமுறையை ஐ.நா.வின் மனிதாபிமானத் தலைவர் வலேரி அமோஸ் தொடர்ந்து விமர்சித்து வருகின்றார். ஏனெனில், அரசின் அனுமதியில் விநியோகிக்கப்படும் உதவிகள் போராளிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்குக் கிடைப்பதில்லை என்பது அவரின் குற்றச்சாட்டாகும்.

துருக்கியில் இருந்து ஜோர்டான் மூலமாகவும், ஈராக் மூலமாகவும் வரும் உதவிகள் பிரித்தளிக்கப்படும் பட்சத்தில் இதுவரை உதவி பெறாத 2 மில்லியன் மக்கள் இதன் பலனைப் பெறுவார்கள் என்று ஆஸ்திரேலியாவின் ஐ.நா தூதுவர் காரி குவின்லான் தெரிவிக்கின்றார்.

தற்போது அளிக்கப்படும் உதவிகளில் 90 சதவிகிதம் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளிலேயே வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். கடந்த பிப்ரவரி மாதம் ஐ.நா கவுன்சிலின் 15 உறுப்பினர்களும் சிரியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த மனிதாபிமான உதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஒரு வாக்கெடுப்பில் தீர்மானித்தனர்.

ஆனால், இந்தத் தீர்மானம் அங்கு செயல்பட்டுவந்த நடைமுறையை மாற்றவில்லை என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன. இப்போதும் ஐ.நாவின் இந்த புதிய திட்டத்தை எதிர்த்து சிரியாவின் ஐ.நா தூதுவர் பஷார் ஜாபரி ஐ.நாவின் பொது செயலாளர் பான்-கி-மூனுக்கும், பாதுகாப்பு கவுன்சிலுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இதில் டஜனுக்கும் மேற்பட்ட சிரிய மற்றும் அரபு வக்கீல்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சி குழுக்கள்’ அல்கொய்தா இணைந்த தீவிரவாதிகள் என அனைவரையுமே அரசு பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுகின்றது. அதனால் இவர்களுடன் இணைந்து அரசின் அனுமதி பெறாமல் அளிக்கப்படும் உதவிகள் சிரிய அரசு மற்றும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அரசியல் சுதந்திரம் மீதான தாக்குதலுக்கு ஒப்பாகும் என்று இந்த வக்கீல்கள் தங்களின் ஆட்சேபணைக் கடிதத்தில் கூறியுள்ளனர்.

SHARE