ஒட்டுசுட்டான் பிரதேசத்தை காப்பாற்ற முன்வருமாறு மக்கள் கோரிக்கை

154

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் நடைபெறும் கருங்கற்கள் அகழ்வை நிறுத்தி பிரதேசத்தை வறட்சியிலிருந்து காப்பாற்ற முன்வருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கையில்,

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் செயற்படும் இரண்டு கருங்கற்கள் அகழ்வு நிலையங்கள் சட்டத்திற்கு முரணாக அதிக ஆழத்தில் கருங்கற்கள் அகழ்வு செயற்பாடுகளை மேற்கொள்கிறது.

இதனால் கிணறுகளில் நீர் இல்லாது போவதுடன், கருங்கற்கள் அகழ்வு காரணமாக வெளியேறும் தூசுகளால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளன.

இது தொடர்பில் வட மாகாண முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரது கவனத்திற்கும் கொண்டு சென்ற போதிலும் எவ்வித பிரயோசனமும் அற்ற நிலையில் தற்போதும் கருங்கற்கள் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

நாளாந்தம் 100 டிப்பருக்கு மேல் இங்கிருந்து கருங்கற்கள் வெளியில் கொண்டு செல்லப்படுகிறன. இந்த அபாயகரமான நிலையை நீக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறித்த கருங்கற்கள் அகழ்வின் காரணமாக காடழிப்பு இடம்பெறுவதுடன், ஒப்பந்தம் செய்யும் போது அகழ்வு முடிய மீண்டும் குழிகள் மூடப்பட்டு மர நடுகை செய்யப்பட்டும் என கூறப்பட்டது.

ஆனால், இதுவரை ஒட்டுசுட்டானில் இவ்வாறாக நடைபெற்ற கிரவல் மற்றும் மண் அகழ்வின் பின்னர் அந்த இடங்கள் பாரிய குழிகளாக காணப்படுகின்றன.

எனவே இவ்வாறான செயற்பாடுகளை உடன் நிறுத்தி பிரதேசத்தின் வளங்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE