ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் எமது நாடு விழ முடியுமான இறுதிக்கட்டத்துக்கே விழுந்தது -விஜயதாச ராஜபக்ச.

41

 

தேசிய அடையாளம் மற்றும் நாட்டின் சட்டத்தின் ஆட்சி ஆகிய இரண்டு விடயங்களையும் பாதுகாத்துக்கொண்டால், இந்த நாடு சிங்கப்பூரையும் மிஞ்சிய நாடாக இருந்திருக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

நீதி அமைச்சின் கீழ் இருந்துவரும் தேசிய சமாதானம் மற்றும் நல்லிணக்க பணியகத்தின் ஊடாக செயற்படுத்தப்படுகின்ற மாவட்ட சகவாழ்வு சங்கம் அமைக்கும் செயற்பாடுகளின் மூன்றாவது கட்ட நிகழ்வு அம்பாறை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“இற்றைக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் எமது நாடு விழ முடியுமான இறுதிக்கட்டத்துக்கே விழுந்தது. இந்த நாட்டை பொறுப்பெடுக்க யாரும் இல்லாத அளவுக்கு நாடு சென்றது.

சர்வதேச நாணய நிதியம்
அந்த சந்தர்ப்பத்தில் எந்த இடையூறுகள் இருந்தபோதும் நாங்கள் இந்த நாட்டைப் பொறுப்பெடுத்து இதுவரைக்கும் நாட்டின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறோம்.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், அமெரிக்க அரச திணைக்களம் ஆகிய அனைத்தும் வீழ்ச்சியடைந்திருந்த நாடொன்று இந்தளவு குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்கு வருந்திருப்பதை கண்டதில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றன.

இதன் மூலம் இந்த நாட்டின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளன என்பது அல்ல. எமக்கு தீர்த்துக்கொள்ள இன்னும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்தும் செயற்படுத்துவோம்.

வடக்கில் இடம்பெற்ற யுத்தம்
அத்துடன் வடக்கில் யுத்தமொன்று இருந்தது. தெற்கிலும் யுத்தமொன்று இருந்தது. இவை அனைத்தின் மூலம் இந்த நாட்டுக்கு தலைமைத்துவத்தை வழங்கவிருந்த இளைஞர்களின் உயிர்களை இல்லாதொழித்தமை மாத்திரமே ஏற்பட்டது.

இதற்கு காரணமாக இரண்டு விடயங்கள் இருந்தன. ஒன்றுதான், நாங்கள் இலங்கையர் என மார்தட்டிக்கொண்டாலும் எமது நாட்டின் தேசிய அடையாளத்தை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. மற்றது, இந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்துள்ளமை.

இந்த இரண்டு விடயங்களையும் பாதுகாத்துக்கொண்டால், அரசியல்வாதிகளின் கற்பனைக் கதைகளை கேட்காமல் செயற்பட்டிருந்தால் இந்த நாடு சிங்கப்பூரையும் மிஞ்சிய நாடாக இருந்திருக்கும்.

மேலும், இந்த வருடத்தின் ஆரம்ப நாடாளுமன்ற அமர்வின்போது தேசிய ஐக்கியம் மற்றும் மறுசீரமைப்புக்கான சட்டமூலத்தை அனுமதித்துக்கொண்டோம்.

உற்பத்தி பொருளாதார முன்னேற்றம்
இந்த புதிய சட்டத்தின் கீழ் அரசியலமைப்பின் ஊடாக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் சகவாழ்வு சமூகம் ஒன்றை அமைத்து, அதன் தலைமைத்துவத்தை கிராமத்தின் மதத்தலைவர்களுக்கு, அதேபோன்று தலைமைத்துவம் வகிக்க முடியுமான நபர்களுக்கு வழங்குவோம்.

கிராமத்தின் முன்னேற்றத்துக்கான தேவையான தீர்மானங்களை எடுக்க அவர்களுக்கு முடியும். இந்த முறைமை முறையாக செயற்பட்டால் அரசியல்வாதிகளின் பின்னால் அடிமைகள் போன்று செல்வதற்கு யாருக்கும் தேவை ஏற்படாது.

அத்துடன் கிராமங்களின் நடவடிக்கைகளை இன, மத பேதங்கள் இன்றி, அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்வதன் மூலம் கிராமத்தின் பிரச்சினைகள் போன்று வீழ்ச்சியடைந்திருக்கும் உற்பத்தி பொருளாதாரத்தையும் முன்னேற்ற முடியும் என்றார்.

SHARE