ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு! கூட்டமைப்பினரிடம் மோடி வலியுறுத்தல்

407

இலங்கை அரசாங்கம், தமிழ் சிறுபான்மையினரின் சமவுரிமை, இறைமை மற்றும் சுயமரியாதை என்பவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இன்று புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போது மோடி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

இலங்கையின் தமிழ் மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் சமவுரிமை, நீதி மற்றும் சுயமரியாதை என்ற அடிப்படையில் அவர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்று இந்திய பிரதமர் இதன் போது கோரியதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைந்து விட்டுக்கொடுப்புடன் அரசியல் தீர்வை காண முன்வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

இந்தியாவின் ஆதரவுடன் 1987ம் ஆண்டு இலங்கையின் அரசியலமைப்புக்குள் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று மோடி குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கையின் வடக்கில் புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும் என்று மோடி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் உறுதியளித்தார்.

இதற்கிடையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கையில் தற்போதைய நிலவரம் குறித்து இந்திய பிரதமருக்கு விளக்கமளித்துள்ளனர்.

இதேவேளை இந்திய அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில், இந்தியாவுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் விஜயம் இலங்கையின் ஏனைய கட்சிகளுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் ஒரு அங்கமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு! கூட்டமைப்பினரிடம் மோடி வலியுறுத்தல்

ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று என்று தம்மை சந்தித்த இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதன் பின்னர் இலங்கை தமிழர் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலையையே மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. இதனால் முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நிலைப்பாட்டைத்தான் ஈழப் பிரச்சனையில் பாஜக அரசும் கடைபிடிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் ஈழத் தமிழர் தரப்பாகிய இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழு நேற்று முன்தினம் டெல்லி வந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் 5 எம்.பிக்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்தித்துப் பேசினர். பின்னர் இன்று பிரதமர் மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பில் எம்.பிக்கள் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வராஜ், செல்வம் அடைக்கல்நாதன், சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அப்போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், அதிகாரப் பகிர்வு தொடர்பான தமிழர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் எடுத்துக் கூறினர்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஈழத் தமிழர்களுக்கு சுயமரியாதையுடனும் சமமாகவும் கண்ணியமாகவும் நீதியானதுமான ஒரு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

அது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான தீர்வாக இருக்க வேண்டும்.

இலங்கையின் 13வது அரசியல் சட்ட திருத்தத்தின் மூலம் இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் ஒரு அரசியல் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீடு கட்டுதல், மருத்துவமனைகள் அமைத்தல், உள்கட்டமைப்பு, வாழ்வாதார மேம்பாடு, மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கான இந்தியாவின் உதவிகள் தொடரும் என்றும் மோடி உறுதியளித்தார்.

இச்சந்திப்பின் போது பிரதமரின் முதன்மைச் செயலர் நிரிபேந்திர மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் சுஜாதா சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

 

SHARE