ஒவ்வொரு கார்த்திகை மலரும் இங்கு மலரும் – “வாழ்வோம் – வளம் பெறுவோம்!” செயற்திட்ட நிகழ்வில் ரவிகரன்

361
வாழ்வாதார முயற்சிகள் செய்ய வலுவின்றி வாடும் ஒவ்வொரு கார்த்திகை மலரும் இங்கு மலரும். ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து என்று தம் பிள்ளைகளை தியாகித்து மாவீரர்களாக்கிய எம் மூத்த தலைமுறையினரையும் அரவணைப்போம் என்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
நாளாந்த வாழ்வை சவாலோடு எதிர்நோக்கும் தாயக மக்களுக்கான வாழ்வாதார உதவித்திட்ட நிகழ்வொன்றிலேயே ரவிகரன் மேற்படி தெரிவித்துள்ளார்.
“வாழ்வோம்-வளம் பெறுவோம்” எனும் செயற்திட்ட அடையாளத்துடன் முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் முன்னெடுப்பில் நடைபெற்ற, முதல் கட்ட நிகழ்வில் 51 பயனாளிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில், “வாழ்வோம்- வளம் பெறுவோம்” என்று பெயரிடப்பட்டு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் முன்னெடுப்பில் வாழ்வாதார உதவி வழங்கும் செயற்திட்டமொன்று இன்று காலை 9 மணியளவில் கள்ளப்பாடு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
அம்பலவன் பொக்கணை, முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல்,  செல்வபுரம், கோயில் குடியிருப்பு, கள்ளப்பாடு, தீர்த்தக்கரை, சிலாவத்தை, உப்புமாவெளி,கேப்பாப்பிலவு என 11 கிராமங்களிலிருந்து 51 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான வாழ்வாதார உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டிருந்தன.
தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பயனாளிக்கும் 20Kg பச்சை அரிசி மற்றும் 5Kg வறுத்த அரிசி மா என்று வழங்கப்பட்ட இச்செயற்திட்டம் மேலும் தொடர்ந்து பல ஈழத்து உறவுகளை வாழவைத்து வளம் பெறச்செய்யும் என வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாழ்வாதார உதவிகள் என்று நோக்கும் போது அவற்றை இரண்டுவகையில் வகைப்படுத்த வேண்டியுள்ளது. தொழில் முயற்சிகளை வழங்கி அதன் மூலம் வாழ்வாதார படிகளை மேம்படுத்தல் ஒரு வகை. வாழ்வாதார முயற்சி என்ற வரையறையுள் அடங்காது நாளாந்த வாழ்வுக்காய் போராடும் தாயக உறவுகளை அரவணைத்தல் இன்னொருவகை.
இதுவரை தொழில் முயற்சிகளை முன்னெடுக்கும் விதத்தில் 14 குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டிருப்பதோடு இன்று நடக்கும் இந்த இரண்டாவது வகை வாழ்வாதார உதவிகள் மூலம் 51 பயனாளிகளை இன்றளவில் அரவணைத்துள்ளோம்.  பிள்ளைகளை இழந்து வறுமையோடு அன்றாட வாழ்வுக்காய் போராடும் குடும்பங்கள், கணவனை இழந்து அல்லற்படும் குடும்பங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் என்று பொதுவில், குடும்பத்தின் முதுகெலும்பாகிய உழைக்கும் இளம் தலைமுறையினர் இன்றி போராட்டத்தோடு வாழ்வை கடத்தும் 51 குடும்பங்களை இந்த முதலாம் கட்டத்தில் அரவணைத்துள்ளோம்.
“தமிழர் ஒற்றுமை அபிவிருத்தி குமுகம் – நோர்வே” இன் ஊடாக இந்நிகழ்விற்கான உதவியை வழங்கிய “N I H தமிழ் ஒஸ்லோ” வுக்கு இத்தருணத்தில் நன்றிகளை தெரிவிப்பதோடு இனிவரும் கட்டங்களிலும் இச்செயற்திட்டம் தொடர்ந்து ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து.. என்று தம் பிள்ளைகளை உரிமைப்போராட்டத்தில் தியாகித்து மாவீரர்களாக்கி இன்றளவிலும் ஒவ்வொரு நாளும் வாழ்வுக்காய் போராடும் எம் மூத்த தலைமுறையினரையும் அரவணைப்போம். வாழ்வாதார முயற்சிகள் செய்ய வலுவின்றி வாடும் ஒவ்வொரு கார்த்திகை மலரும் இங்கு மலரும். அதுவே இச்செயற்திட்ட இலக்காகிறது. ஈழத்து தமிழர் நாமே தமிழரை அரவணைத்து ஊக்குவித்து தமிழ்தேசத்தை வளம் பெறச்செய்வோம் என்று மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
image9  image7  image4  image2
SHARE