கடகம் – ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

45

தாய்மை பண்பு நிறைந்த கடக ராசியினருக்கு அன்பான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் தெளிவான மனநிலையோடு செய லாற்றுவீர்கள். பலவிதமான வாழ்வியல் மாற்றங்களும் ஏற்றங்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். இந்தப் புத்தாண்டில் குரு பகவானின் சஞ்சாரம் சற்று சாதகமாக உள்ளது. சனிபகவான் அஷ்டமத்தில் அமர்வதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் ஏற்படலாம். ராகு/கேதுக்கள் சற்று சுமாரான பலன்கள் வழங்குவார்கள். எனவே இந்த ஆண்டு அனுபவ அறிவால் வெற்றி பெற வேண்டும். இனி இந்த ஆண்டிற்கான விரிவான பலன்களைக் காணலாம்.

குருபகவானின் சஞ்சார பலன்கள்: கடக ராசிக்கு 6,9-ம் அதிபதியான குரு பகவான் ஏப்ரல் 22, 2023 வரை 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதன் பிறகு பத்தாம் இடமான தொழில் ஸ்தானம் சென்று ராகுவுடன் இணைந்து சனி பார்வை பெறுகிறார். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டா கும். கண் திருஷ்டி தோஷம், செய்வினைக் கோளாறு அகலும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். அனைத்து காரியங்களுக்கும் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். விட்டுப் பிரிந்த உறவுகள் ஒட்டி உறவாடுவார்கள். அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நல்ல புகழும், கவுரவமும் உண்டாகும். கஷ்டங்களும், சிரமங்களும் குறையும். வியாபாரத்திற்குப் போட்டியாக புதிய எதிரிகள் தோன்றுவார்கள். கடுமையான உழைப்பால் அவற்றைச் சமாளிப்பீர்கள். கடன், ஆரோக்கி யம், வம்பு வழக்கு தொடர்பான விசயங்களில் கவனம் தேவை. பூர்வீக சொத்து தொடர்பான வம்பு, வழக்கை ஒத்திப்போடுவது நல்லது. குரு ராகுவுடன் இணைந்து அஷ்டமாதிபதி சனியின் பார்வை பெறுவது சற்று சுமாரான கிரக நிலவரம். எனவே கடன் பெறுவது, கடன் கொடுப்பது, ஜாமீன் போடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். உத்தியோகம் அல்லது தொழில் ரீதியான மாற்றங்களை சந்திக்க நேரும். வேலை மாற்றம் செய்வதை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் கவனச் சிதறலை தவிர்த்து பக்குவமாக நடந்து கொள்ளவும். புதிய தொழில் கூட்டாளி மற்றும் தொழில் ஒப்பந்தங்களில் கவனம் தேவை. பல புண்ணியத் ஸ்தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். உங்களுடைய வீண் பிடிவாதம், முன் கோபத்தை தவிர்த்து தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுத்தால் வருடத்தின் எல்லா நாட்களும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகவே இருக்கும்.

சனியின் சஞ்சார பலன்கள்: உங்கள் ராசிக்கு இது அஷ்டமச் சனியின் காலம் என்பதால் உங்களின் முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்கு பிறகு காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். இது வரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். எந்த செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். புதிய தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணை மற்றும் குடும்பத்தினருடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். இடப் பெயர்ச்சி வீடு மாற்றம், வேலை மாற்றம் செய்யலாம். வியாபாரத்தை எப்படி நடத்துவது, கிடைத்த பதவியை, வேலையை எப்படி பொக்கிஷம் போல் காக்க வேண்டும் போன்ற அனுபவ ரீதியான பாடங்களை கற்பீர்கள். பலருக்கு வெளியூர், வெளிநாட்டிற்கு சென்று பிழைப்பு நடத்தும் சூழ்நிலை உண்டாகும். காதல் விவகாரங்கள் அவமானத்தை தரும். பணவரவு தாரளமாக இருந்தாலும், தேவையற்ற அலைச்சல்கள் விரயங்கள் ஏற்படலாம். சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக உழைக்காத வருமானம் அதிகரிக்கும். அதே போல் கமிஷன் அடிப்படை வியாபாரம் லாபத்தை அள்ளிக் கொடுக்கும். அரசியல் பிரமுகர்கள், மேடைப் பேச்சாளர்கள் வாக்கால் வருமானமும், புகழும் பெறுவர். பிள்ளைகளுக்கு வேலை, திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நேரம். வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. புதிய முயற்சிகளில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.

ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்: அக்டோபர் 30, 2023 வரை ராகு பகவான் 10ம் இடத்திலும், கேது பகவான் 4ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். அதன் பிறகு ராகு 9ம் இடத்திற்கும் கேது 3ம் இடத்திற்கும் மாறுகிறார்கள். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த எதிர்பாராத பெரும் தொகை கிடைக்கும். தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வீட்டில் சேரும். வீட்டிற்கு தேவையான அதிநவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். தன வரவு மிகுதியால் குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். சமுதாய அங்கீகாரம், கவுரவம் கிடைக்கும். எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பீர்கள். உங்கள் புதிய முயற்சிகள் அனைத்தும் செயலாக்கம் பெறும். மன பாரம் குறைந்து நிம்மதியும் தன் நம்பிக்கையும் அதிகரிக்கும். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு ஞான தன்மை அதிகரிக்கும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும். துடிப்புடன் செயல்பட்டு தொழிலை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வீர்கள்.

திருமணம்: சுய ஜாதக பலம், பலவீனம், தசா புக்திக்கு ஏற்ப திருமணத்தை முடிவு செய்ய வேண்டும். பொதுவாக அஷ்டமச் சனியின் காலத்தில் திருமணத்தை தவிர்ப்பது நல்லது. இந்த கால கட்டத்தில் திருமணம் நடந்தால் தவறான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து திருமண வாழ்க்கை நெருடல், பிரிவினையைத் தரும் வாய்ப்பு உள்ளதால் அஷ்டமச் சனி முடியும் வரை திருமணத்தை ஒத்தி வைக்க வேண்டும்.

பெண்கள்: குடும்பத்தில் கூச்சல் குழப்பம் மறைந்து அமைதியான சூழல் நிலவும். பெண்களுக்கு மன உளைச்சல் மன அழுத்தங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். வாக்கு ஸ்தானத்தை சனி பார்ப்பதால் அடுத்தவரிடம் பேசும் போதும் கருத்து தெரிவிக்கும் போதும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது.

மாணவர்கள்: கல்வி மற்றும் ஆரோக்கியம் மேம்படும். தடைபட்ட உயர்கல்வி கற்கும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும். அரியர்ஸ் பாடத்தை மீண்டும் எழுதி பாஸ் பண்ணும் சந்தர்ப்பம் கிடைக்கும். போட்டித் தேர்வில், பொதுத் தேர்வில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.

புனர்பூசம் 4,: குருவின் நல்லாசியால் எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். கடந்த காலத்தில் இருந்த சண்டைகள், தோல்விகள், மன வருத்தங்கள் நீங்கும் . நீண்ட நாள் கனவுகள் நிறைவேறி மனதில் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுக்குள் இருக்கும் திறமைகள் வெளிப்படும். கவுரவமான பதவிகள், வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சீரான படிப்படியான வளர்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக் கவலைகள் மாறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன்கள் குறைவதுடன் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு சாதகமான பதில் வரும். பொருளாரத்தில் தன் நிறைவு ஏற்படும்.

பரிகாரம்: ஜென்ம நட்சத்திர நாளில் ஆன்மீகப் பெரியோர்கள்,மத குருமார்களிடம் நல்லாசி பெற வேண்டும்.

பூசம்: அன்றாடம் உழைக்கும் தொழிலாளிகளின் வறுமை, தரித்திரம் விலகும். சிலருக்கு சொந்தத் தொழில் ஆர்வம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கடந்த கால இழப்புகளில் இருந்து மீளும் நிலை உண்டாகும். கணவன் மனைவி உறவு பலப்படும். வீடு, வாகன முயற்சி சாத்தியமாகும். சிலருக்கு மதம் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சிலருக்கு எதிர்காலம் பற்றிய வீண் பய உணர்வு மனதை வாட்டும். அலைச்சல் மிகுந்த பயணம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் நல பிரச்னைகள் நீங்குவதோடு, மருத்துவ செலவு வெகுவாக குறையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். வீடு, வாகன யோகம் உண்டாகும். தொழில் மற்றும் சொத்துக்களுக்காக எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும்.

பரிகாரம்: வயது முதிர்ந்த அந்தணர்களுக்கு உணவு, உடை தானம் தந்து காலில் விழுந்து நல்லாசி பெற வேண்டும்.

ஆயில்யம்: உங்களின் தொழில் முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடிய காலமாக இருக்கும். உங்களின் முயற்சிக்கு பல மடங்கு நற்பலன் கிடைக்கும் என்பதால், இந்த காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. பொது இடங்களில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சபைகளில் புகழ் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். சுயமாக நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள், முடிவுகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தொழில் செய்பவர்கள், ஒப்பந்த ஊழியர்கள், நிறுவனத்தின் மேலதிகாரி போன்ற தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மிகவும் உன்னதமான காலமாக இருக்கும். உங்களின் மனக் கவலைகள், மன அழுத்தம், வேலையில் இருக்கும் இடர்பாடுகள் முழுவதுமாக குறையும்.

பரிகாரம்: கோ தானம், கோ பூஜை செய்ய புதிய திருப்பங்கள் ஏற்படும். கடக ராசியினர் வழிபட வேண்டிய புனித ஸ்தலம். சிவன், பிரம்மா, விஷ்ணு என்று மும்மூர்த்திகளுக்கும் ஒரே கோவிலாக ஈரோடு மாவட்டத்தில் அமைந்து இருக்கும் கொடுமுடி. இங்கு சென்று கடக ராசியினர் புனித நீராடி பிரம்மா, விஷ்ணு, சிவனை வழிபட கோட்சார கிரகங்களால் ஏற்படும் பாதிப்பு விலகும்.

maalaimalar

SHARE