கடத்தப்பட்டோர், காணாமற்போனோரை கண்டு பிடித்துத் தரக்கோரியும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளிடம் முறையான விசாரணை நடத்தி விடுதலை செய்ய வலியுறுத்தியும் திருகோணமலை உட்துறைமுக வீதி கலாசார மண்டபத்திற்கு முன்னால் உள்ள சிறுவர் பூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம்

405

 

SAM_8955

கடத்தப்பட்டோர், காணாமற்போனோரை கண்டு பிடித்துத் தரக்கோரியும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளிடம் முறையான விசாரணை நடத்தி விடுதலை செய்ய வலியுறுத்தியும் திருகோணமலை உட்துறைமுக வீதி கலாசார மண்டபத்திற்கு முன்னால் உள்ள சிறுவர் பூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை ‘நாங்கள்’ அமைப்பு மற்றும் கடத்தப்பட்டோர், காணாமல் போனோர் உறவுகளின் அமைப்பு, திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாஜம், அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந்தப் போராட்டத்தில், திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், மூதூர் கிழக்கு, குச்சவெளி, தம்பலகாமம், கிண்ணியா, வெருகல், ஈச்சிலம்பற்று, பட்டினமும் சூழலும் என பல பிரதேசங்களில் இருந்து தமது உறவுகளைத் தேடும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். புதிய அரசு இவ் விடயத்தில் கவனம் எடுக்க வேண்டும் என உறவுகளை இழந்தவர்கள் மன்றாடினார்கள். இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை நகர சபை தலைவர் க.செல்வராஜா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், ஜே.ஜெனார்த்தனன், திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் செயலாளர் கனகசிங்கம் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

கடத்தப்பட்டோர், காணாமற்போனோர்களின் விவரங்களையும் இன்றைய தினம் புதிதாக பதியப்பட்டவர்களின் தகவல்களையும் அடங்கிய மனு ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

SHARE