அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளை அரசே முறித்துக் கொண்டது என்றும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பிபிசியிடம் கூறினார் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கூட்டமைப்பினரே இழுத்தடிக்கின்றனர், தனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, அதனை தனது பலவீனம் என்று எவரும் கருதினால், பாரதூரமான விளைவுகள் ஏற்படும்” என்று ஜனாதிபதி அண்மையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது தெரிவித்தக் கருத்துக்கள், அரச சார்பு ஊடகம் ஒன்றில் வெளியாயின.
இதையடுத்தே சம்பந்தர் இக்கருத்துக்களை பிபிசியிடம் தெரிவித்தார்.
அரசு இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்து, நாட்டுக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படாமல், ஒன்றுபட்ட இலங்கைக்குள், நியாயமான, நிரந்தரமான, நடைமுறைபடுத்தக் கூடியத் தீர்வுகளை அது முன்வைத்தால் தமது தரப்பு அதை ஏற்றுக் கொள்ளும் எனவும் சம்பந்தர் கூறுகிறார்.
நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் நோக்கம் குறித்து தாங்கள் நன்கு அறிந்துள்ளதாகவும், அது தொடர்பில், அரச தரப்பில் வெளியாகியுள்ள கருத்துக்களும் தங்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆளும் கட்சியிலுள்ள ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் மற்றும் பங்காளிக்கட்சியின் தலைவர்கள் ஆகியோர் ஊடகங்கள் மூலம் இனப்பிரச்சினைத் தீர்வு விடயம் சம்பந்தமாக ஒவ்வொரு கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.
13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கக்கூடாது. என்றெல்லாம் தமிழ்மக்களை சீண்டிப்பார்க்கும் அளவுக்கு ஊடகங்கள் வாயிலாக அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.
ஆனால் நாம் பேச்சுவார்த்தைக்கு தயார். ஆனால் எவ்வாறு பேச வேண்டும் என்பது அரசாங்கத்தர்ப்பினரிடமே உள்ளது .அதில் எமக்கு ஒரு தெளிவு ஏற்படுத்த வேண்டும். அது அரசாங்கத்தின் கையிலே உள்ளது.
கடந்த காலங்களில் பேச்சு முறிவதற்கு காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்ல. அரச தரப்பினரே எமது நிபந்தனையை அதாவது இனப்பிரச்சினையை தீர்க்க எத்தகைய தீர்வை உத்தேசித்திருக்கிறீர்கள், அதை முன்வையுங்கள் என்று பல தடவைகளில் கூறியிருந்தோம். பல தடவைகள் விட்டுக்கொடுத்தோம். அவர்கள் காலத்தை இழுத்தடிப்பதில் குறியாக இருந்தனரே தவிர எமது தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் பேச்சுவார்த்தையிலிருந்து ஒதுங்க வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது.
ஜனாதிபதி கூறுவதுபோல் தமிழ் ஊடகங்களில் மட்டும் தமிழில் அறிக்கை விடுவதில்லை. கடந்த வாரம் கூட பாராளுமன்றில் ஆங்கிலத்தில் உரையாற்றியிருந்தேன். அந்த விடயம் சகல ஆங்கில ஊடகங்களிலும் பிரசுரமாகியிருந்தது. இருந்தும் தமிழ் பத்திரிகைகளை ஜனாதிபதி அவர்கள் உன்னிப்பாக பார்த்து அறிந்து கொள்வது வழக்கம் என்பதும் எமக்குத் தெரியும்.
ஆகவே அவர் கூறுவது போல் பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு நாம் பின்னிற்கவில்லை, என்றும் தயாராக உள்ளோம். ஆனால் அரசாங்கம் இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்து, ஒன்றுபட்ட இலங்கைக்குள், நியாயமான, நிரந்தரமான, நடைமுறைபடுத்தக் கூடியத் தீர்வுகளை அது முன்வைத்தால் தமது தரப்பு அதை ஏற்றுக் கொள்ளும் எனவும் சம்பந்தர் கூறுகிறார்.
TPN NEWS