கடின இலக்கை நிர்ணயித்த ஜிம்பாப்வே: துவம்சம் செய்தது பாகிஸ்தான்

306
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ‘டி-20’ போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.ஆறு ஆண்டுகளுக்குப்பின் பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதில் நேற்று லாகூரில் நடந்த முதலாவது ‘டி–20’ போட்டியில் பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணித்தலைவர் சிகும்பரா துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாவே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக அணித்தலைவர் சிகும்பரா (54) அரைசதமும், மககட்சா 43 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் 173 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முக்தர், ஷேசாத் ஜோடி சிறப்பான தொடக்கம் தந்தது.

இருவரும் அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 142 ஓட்டங்கள் சேர்த்த போது, ஷேசாத் (55) ஆட்டமிழந்தார். முக்தர் 83 ஓட்டங்கள் (45 பந்து) விளாசினார்.

பின்னர் முகமது ஹபீஸ் (12), சோயப் மாலிக் (7), உமர் அக்மல் (4) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அப்ரிதி ஒரு பவுண்டரி அடித்து பாகிஸ்தனை வெற்றி பெறச் செய்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. சர்பராஸ் அகமது (3), அப்ரிதி (4) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

SHARE