கட்சி, கொள்கை வேறுபாடுகளை மறந்து மே 18 அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்வோம். -சிவசக்தி ஆனந்தன் அறைகூவல்.

354

 

நாளை (18.05.2015 அன்று) காலை 10.00 மணிக்கு முள்ளிவாய்க்காலிலும், மாலை 3.00 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்திலும், வடக்கு கிழக்கின் ஏனைய இடங்களிலும், புலம்பெயர் தேசங்களிலும் நடைபெறவுள்ள எமது உறவுகளுக்கான நினைவுகூரல் நிகழ்வில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் சமுக அமைப்புகளும், பொதுமக்களும் தமது கட்சி, கொள்கை மற்றும் கருத்து முரண்பாடுகளை ஒதுக்கிவைத்து, இறுதிப்போரில் உயிர்குடிக்கப்பட்ட எமது உறவுகளை நினைகூர்வதற்கு ஓரணியில் திரள வேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் அறைகூவல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
10408705_914115555373491_6281822315251575286_n Ananthan_MP
முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளைக் கூட்டம் கூட்டமாகக் காவுகொடுத்த எமது மக்கள் அவர்களைக் கூட்டாக நினைவு கூர்வதற்காக கடந்த ஆறாண்டுகளாக நாம் போராடியே வந்திருக்கிறோம். பெரும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே கடந்த ஐந்து வருடங்களும் ஆத்மசாந்தி நிகழ்வுகளை நடத்தியுள்ளோம். இம்முறையும் பலதரப்பட்ட தடைகள், இடையூறுகளை கடந்தே எமது உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தவேண்டிய கடமையில் உள்ளோம்.
எனவே, எமது மக்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்டத்தக்க வகையில், நாம் அனைவரும் அவர்களோடு ஒன்றிணைந்து அவர்களது துயரத்தையும், கவலைகளையும் ஆதங்கங்களையும் பகிர்ந்துகொள்வதுடன் அவர்களுக்கு எதிர்காலத்தின்மீது நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் வாழ்க்கையில் பிடிப்பினை ஏற்படுத்தும் வகையிலும் செயற்படுவது என்பது வரலாறு எமக்கு இட்டிருக்கும் கட்டளையாகும்.
நாம் எமது மக்களின் பிரதிநிதிகள் என்பது உண்மையானால் நாம் அனைவரும் எமது மக்களுடன் இத்தருணத்தில் ஓரணியில் இணைந்து நிற்க வேண்டும். அவர்கள் அச்சமின்றி வருகின்ற சூழலை ஏற்படுத்துவது அரசியல் கட்சிகள் அனைத்தினதும் பொறுப்பாகும். ஆகவே, இதில் கட்சி பேதம், கொள்கை முரண்பாடு, கருத்து முரண்பாடு என்பவை பெரிதுபடுத்தப்படாமல் எமது மக்கள் தமது துயரை பகிர்வதற்கு இடமளித்து, அவர்கள் தமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்துவதற்கு வழியேற்படுத்திக்கொடுக்க வேண்டியது எமது கடமையாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்@ராட்சி மன்றங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் நிகழ்வுக்கு வந்தால் போதாது. எமது மக்கள் தமது உரிமைகளை நிலைநாட்டிக்கொள்வதற்காகவே தொடர்ந்தும் வாக்களித்து வந்துள்ளனர். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு, அனைவரும் அணிதிரள வேண்டும்.
தமிழ் பேசும் உறவுகளே! இந்த நிகழ்வு எமது குடும்பத்தில் ஒவ்வொருவரையும் இழந்த உணர்வைத்தரும் எம் அனைவராலும் அனுஸ்டிக்கப்பட வேண்டிய நிகழ்வு. நாம் அனைவரும் ஏதோவொரு வகையில் தமிழின உணர்வாளர்களே. யாரோ நமக்காக ஏற்பாடு செய்த நிகழ்வல்ல. எமது உறவுகளுக்காக நாம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு. எனவே அனைத்து அரசியல் கட்சியினரும், பொது அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் தமது கொள்கை, அரசியல், கருத்து முரண்பாடுகளை மறந்து ஓரணியில் திரண்டு எமது மக்களின் உணர்வுகளோடு கைகோர்ப்போம் வாருங்கள்.
வடக்கு-கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைவரும், இன்னமும் தமிழ் பேசிக்கொண்டிருக்கும் சமூகத்தினர் அனைவரும் எந்தவகையிலாவது எதிர்வரும் 18.05.2015 திங்கள் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு முள்ளிவாய்க்காலிலும், மாலை 3.00 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்திலும், வடக்கு கிழக்கின் ஏனைய இடங்களிலும், புலம்பெயர் தேசங்களிலும் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு எமது மக்கள் அனைவருக்கும் நம்பிக்கையூட்டுவதுடன், நாம் அனைவரும் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஓரணியில் திரண்டிருக்கின்றோம் என்பதையும் இந்த நாட்டிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துக்காட்டுவோம் வாரீர்.
இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SHARE