கட்டார் அமீருடன் இலங்கை செய்த ஒப்பந்தங்களின் விபரம்.

349

 

 

 

1514964_855606001152225_6076007928354060844_n

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கு கட்டார் அரசாங்கம் தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமென்று அந்நாட்டு அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்தார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த கட்டார் நாட்டு அமீர் இலங்கையில் மூன்று மணித்தியாலங்கள் தங்கியிருந்ததுடன் மூன்று ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட பின்னர் நாடு திரும்பினார்.

நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்டார் அமீர் ஆகியோருக் கிடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது. இதன் போதே கட்டார் அமீர் இதனைத் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க உள்ளதாக தெரிவித்த கட்டார் அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி, வெகு விரைவில் கட்டாரிலிருந்து விசேட தூதுக்குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்து வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமென்றும் உறுதி யளித்தார்.

இலங்கைக்கு தான் மிகக்குறுகிய பயணமொன்றை செய்தாலும் இரு நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததென்றும் குறிப்பிட்டார். இலங்கையில் கட்டார் நாட்டு முதலீடுகளை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்டார் அரசாங்கம் இதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அதற்கு தேவையான செயற்பாடுகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளும் என்றும் கட்டார் அமீர் உறுதியளித்தார்.

இதேவேளை மன்னார் கடற்பரப்பில் காணப்படும் எரிவாயு, எண்ணெய் அகழ்வு தொடர்பில் கட்டார் அரசாங்கம் இலங்கைக்கு உதவுவதற்கு தயார் என்று தெரிவித்த அமீர், விரைவில் கட்டாரில் இருந்து இது தொடர்பான ஆய்வுக்காக குழுவொன்றை அனுப்பி வைக்கவுள் ளதாகவும் தெரிவித்தார்.அவ்வாறே, இருநாடுகளுக்கிடையில் உல்லாசப் பயணத்துறையை மேம்படுத் துவது தொடர்பாகவும் ஜனாதிபதி மற்றும் அமீரிடையே கலந்துரையாடப் பட்டது.

கட்டாரில் தொழில் புரியும் ஒரு இலட்சத்து 25ஆயிரம் பேரின் நலன்புரி செயற்பாடுகளை உயர்த்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டார் அமீரிடன் வேண்டுகோள் விடுத்தார்.பின்னர் இரு நாடுகளுக்கிடையில் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இலங்கையின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தல், இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்குதல் மற்றும் தகவல் தொடர்புகளை பரிமாறிக் கொள்ளல் போன்ற விடயங்களுக்காக கட்டார் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க உள்ளது.

இலங்கையின் எரிவாயு மற்றும் எண்ணெய் அகழ்வு தொடர்பான ஆராய்ச்சி, இளைஞர் அலுவல்கள், விளையாட்டு மற்றும் பொதுசன ஊடகம் தொடர்பில் இருநாடுகளுக்கிடையில் மூன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தகவல் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க உட்பட கட்டார் நாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

SHARE