கண்ணாட்டிக் கணேசபுரத்தில் மினிசூறாவளியினால் 150 குடும்பங்கள் பாதிப்பு – வடமாகாண சுகாதார அமைச்சர் நேரில் விஜயம்

636

செட்டிக்குளம் பிரதேசசபைக்குட்பட்ட கண்ணாட்டிக் கணேசபுரத்தில் நேற்று முன்தினம் (29.04.2014) அன்று கடும் மழை காரணமாக மினி சூறாவளி ஏற்பட்டமையினால் 150 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன் அவர்கள் இடம்பெயர்ந்து பொதுநோக்கு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் 57 குடும்பங்களினது வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது. வீடுகளின் தகரங்கள் சூறாவளியினால் சேதமாகியதுடன், மண்ணால் கட்டப்பட்ட வீடுகள் இடிந்துள்ளதுடன் இவற்றை சரிசெய்வதற்கு ஒரு குடும்பத்திற்கு 20000 ரூபாய்கள் வரைதேவைப்படுகின்றது. தற்பொழுது அனர்த்தமுகாமைத்துவ பிரிவினால் மூன்று நாட்களுக்கு தேவையான சமையல் பொருட்களை வழங்கியுள்ளனர். இப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக வடபகுதியில் வாழ்கின்றவர்களும் சரி அல்லது ஏனைய பகுதிகளில் வாழ்கின்றவர்களும் உதவி செய்யலாம். அதிகமாக இதில் பாடசாலை மாணவர்களினுடைய புத்தகங்கள் எல்லாம் நனைந்து சேறாகக் காணப்படுகின்றது. இது தொடர்பில் உரிய தரப்புடன் கலந்துரையாடி விரைவில் அப்பகுதி மக்கள் தங்களது இருப்பிடங்களுக்குச் சென்று வழமையான தமது வாழ்வினை கொண்டுசெல்லக்கூடிய வழிவகைகளை செய்யலாம் என நேரில் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தினப்புயல் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

SHARE