கதிர்காமத்தைச் சென்றடைய வசதியாக அம்பாறை – மொனராகல மாவட்டப் பாதை திறப்பு..

695

கதிர்காமத்தைச் சென்றடைய வசதியாக அம்பாறை – மொனராகல மாவட்டப் பாதையான கூமுனை அடர்வனப் பாதை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் 15 நாள்களுக்கு திறக்கப்படும் என கூமுனை சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு வசதியாக இந்த பாதை திறக்கப்படவுள்ளது. இதேவேளை தொண்டமானாறு செல்வச் சந்நிதி கோவிலில் இருந்து ஆரம்பமான கதிர்காம பாதயாத்திரைக் குழுவினர் நாளைமறுதினம் 9 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தைச் சென்றடையவுள்ளதாக, கதிர்காம பாதயாத்திரைக் குழுத் தலைவர் வேல்சாமி தெரிவித்தார்.

இம்மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கதிர்காமக்கந்தன் பெருந்திருவிழாவை முன்னிட்டு வருடந்தோறும் நடைபெறும் கதிர்காம பாத யாத்திரை கடந்த மாதம் 10 ஆம் திகதி தொண்டமானாறு செல்வச்சந்நிதி கோவிலில் இருந்து காரைதீவு நந்தவனம் ஸ்ரீசித்திவிநாயகர் கோவில் தர்மகர்த்தா வேல்சாமி என அழைக்கப்படும் எஸ்.மகேந்திரன் தலைமையில் ஆரம்பமானது.

இப்பாதையாத்திரைக் குழு கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சென்றடைந்துள்ளது. கடந்த 2 ஆம் திகதி திங்கட்கிழமை வாழைச்சேனை ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சென்றடைந்த இக்குழுவினர் அன்றைய தினம் சித்தாண்டி முருகன் கோவிலைச் சென்றடைந்தனர். இன்று சனிக்கிழமை இரவு கண்ணகை அம்மன் கோவிலை அடைந்து அங்கு தங்கியிருப்பர். அங்கிருந்து நாளை ஞாயிறு காலை புறப்படும் பாத்திரை யாத்திரைக் குழுவினர் மண்டூர் சித்திரை வேலாயுதர் சுவாமி கோவிலை அன்றிரவு சென்றடைவர்.

இந்த குழுவினர் நாளை மறுதினம் திங்கட்கிழமை பாண்டிருப்பை சென்றடைவர். எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை உகந்தை முருகன் கோவிலைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 50 பேரைக் கொண்ட இக்குழுவினர் எதிர்வரும் 28 ஆம் திகதி கதிர்காமம் கொடியேற்றத் தினத்தன்று, கதிர்காமத்தை சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE