தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியை பாதுகாப்பதற்கு ஜீ.ஜீ.பொன்னம்பலம் செயற்பட்டதைப் போன்று, ஜெயலலிதா ஜெயராமை பாதுகாக்க ராம் ஜெத்மாலினி தவறி விட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கருணாநிதி எதிர்கொண்டிருந்த சொத்துக் குவிப்பு வழங்கிலிருந்து இலங்கையின் சட்டத்தரணியும் அனைத்திலங்கை தமிழ் காங்கிரஸின் ஸ்தாபகருமான ஜீ.ஜீ.பொன்னம்பலம் காப்பாற்றியிருந்தார்.
ஜெயலலிதா ஜெயராம் முகம்கொடுத்துள்ள சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டை போன்று, கருணாநிதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்காக சர்காரியா தலைமையிலான ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது. இதில் இருந்து கருணாநிதியை மீட்க முடியாது என்று நிலைமை காணப்பட்டது.
எனினும் 1976ம் ஆண்டு அந்த நாட்களில் இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஆனந்தசங்கரியிடம், கருணாநிதி விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை கருணாநிதியின் சார்பாக வாதாடுவதற்கு கோரப்பட்டார்.
அந்தகாலப்பகுதியில் மலேசியாவில் தங்கி இருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம், இந்த கோரக்கையை ஆரம்பத்தில் நிராகரித்த போதும் பின்னர் ஏற்றுக்கொண்டார்.
அவர் சர்காரியா ஆணைக்குழுவின் முன்னால் தோன்றி வாதாடுவதை பார்வையிடுவதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சட்டத்தரணிகள் வந்திருந்தனர்.
சுமார் ஒரு மணித்தியாலங்களாக ஆணைக்குழுவின் முன்னால் வாதாடிய ஜீ.ஜீ.பொன்னம்பலம், கருணாநிதிக்கு எதிரான வழக்கை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க வழி செய்தார்.
அதன் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் இந்த வழக்கு நீர்த்துப் போனது.
இதற்கு பிரதி உபகாரமாக ஜீ.ஜீ. பொன்னம்பலத்துக்கு பாரிய பணத்தொகையை கருணாநிதி வழங்கிய போதும், அதனை அவர் ஏற்றுக் கொள்ளாமல் மலேசியாவுக்கு திரும்பி சென்றதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ்மக்களின் சமயம், கல்வி, பொருளாதாரம், பண்பாடு முதலியவற்றின் உன்னத வளர்ச்சிக்கு அயராது உழைத்தவரும் பெரியார்கள் பலர். அவர்களில் தலைசிறந்தவர் என்று யாவராலும் போற்றப்பட்டுவரும் உயர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் கியூ. சி. அவர்களை இக்கால மக்கள் கண்டு, உரையாடி, உதவிகள் பல பெற்றுளரேனும், ஆக்கபூர்வமான அவர்தம் செயற்றிறனைப்பற்றிப் பத்திரிகைகள்மூலம் படித்தறிந்துளரேனும், அவர் தம் வாழ்க்கை வரலாற்றை அறிந்தவர் மிக மிகச் சிலரேயெனலாம்.
தேசநலனுக்குத் தம்மை அர்ப்பணித்து உழைக்கும் பெரியார்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்திருத்தல் வரவிருக்கும் தேசத்தொண்டர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு திரு. க. முருகரத்தினம் அவர்கள் உயர். திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இரத்தினச் சுருக்கமாக வரைந்து, அதனை நூல் வடிவில் வெளியிட்டிருக்கின்றார்.
கற்றவரும், கல்லாதவரும் இந்நூலைப் படித்துப் பயனடைவர் என்பது துணிபு. இம்முயற்சியில் தம் கைப்பொருளையும் கருதாது தொண்டு செய்யும் திரு. முருகரத்தினம் அவர்களுக்கு தமிழ் மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
ஈழத் திருநாட்டின் வடமராட்சியைச் சேர்ந்த அல்வாயூரில் சைவப் பரம்பரையிலே உதித்த உயர் திரு. கணபதிப்பிள்ளை காங்கேயர் அவர்களுக்கும் நவாலியூர் சைவப்பெரியார் சின்னையாபிள்ளை அவர்களின் தவப்புதல்வி தில்லைநாயகி அம்மையாருக்கும் 1901 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 8ஆந் திகதி தமிழரின் தவப்பயனே உருவாகி அவர்களின் சிரேஷ்ட புத்திரனாக அவதரித்தார். நம் தலைவர் உயர். திரு. பொன்னம்பலம் அவர்கள்.
ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையின் தபால் தந்திச் சேவைப் பகுதிக்கு ‘இன்ஸ்பெக்றர்’ சேவைக்கு நியமிக்கப்பட்ட முதலாவது இலங்கைத் தமிழராகிய திரு. கணபதிப்பிள்ளை காங்கேயர் அவர்களே நம் தலைவர் அவர்களின் அன்புத் தந்தையாராவர்.
சேர். பொன். இராமநாதன் அவர்களுடன் ஒன்று சேர்ந்து சைவமும் தமிழும் கற்றுணர்ந்த ஆலயப்பரிபாலகர் திரு. சின்னையா பிள்ளையின் அருந்தவப்புதல்வியும் சைவ ஒழுக்கங்களில் தலை சிறந்த அம்மையும் காங்கேயரின் வாழ்க்கைத் துணைவியுமாகிய தில்லைநாயகி அவர்களே நம் தலைவரின் அன்புத் தாயாராவர்.
காலஞ் சென்ற இளைப்பாறிய நீதிபதியும் யாழ்நகரின் மத்தியில் அமைந்த நல்லையம்பதிச் சுற்றாடலைச் சேர்ந்த வைமன் றோட்டில் வாசஸ்தலங்கொண்ட திரு. ஸ்பென்சர் இராசரெத்தினம் அவர்களின் இல்லாளுமாகிய காந்திமதி அவர்கள் நம் தலைவரின் கனிஷ்ட சகோதரியாவர்.
அதி வணக்கத்துக்குரிய பிதா கா. பாலசுந்தரம் அவர்கள் நம் தலைவரின் கனிஷ்ட சகோதரராவர்.
இளைப்பாறிய நீர்ப்பாசன பொறியியலாளர் திரு. குமாரசாமி அவர்களின் வாழ்க்கைத்துணைவி ருக்குமணிதேவி அவர்களும் நம் தலைவரின் ஒரு சகோதரியாவார்.
கொழும்பு மாநகரில் அமைந்துள்ள சென். ஜோசப் கல்லூரியில் உயர் திரு. பொன்னம்பலம் அவர்கள் தமது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் வகுப்பில் தலை சிறந்த மாணவனாக முன்னின்றதோடு உதைபந்து, கிரிக்கெட், ரெனிஸ் முதலிய விளையாட்டுத் துறையிலும் புகழீட்டினார். பெரும்பாலும் ரெனிஸ் விளையாடுவதில் அதிக பிரியமுள்ளவரகக் காணப்பட்டார். வளரும் பயிரை முளையிலே தெரியும் என்ற முதுமொழிக்கிணங்க கல்லூரி மாணவனாக இருந்தபோது கல்லூரியில் நடைபெற்ற விவாதங்கள், பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள் ஆகியவற்றில் பங்குபற்றி, பல தங்கப் பதக்கங்களை பரிசாகச் சுவீகரித்து. தனது ஆற்றலையும் அறிவையும் திறமையையும் மற்றையோரும் அறியச் செய்தார். யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியிலும் சில காலம் கல்வி கற்றார். மீண்டும் சென். ஜோசப் கல்லூரிக்குச் சென்று உயர்தரக் கல்வி பெறும் காலத்தில் இலங்கைச் சர்வகலாசாலையில் அகில இலங்கையிலும் முதல் மாணவனாக இடம் பெறுவோருக்கு வழங்கப்படும் வித்தியா பரிசைப் பெற்று தனது பதினெட்டாவது வயதிலே மேலும் உயர்தரக் கல்வி பயில இங்கிலாந்துக்குச் சென்றார். கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் உயிரியல், பொருளாதாரவியல், அரசியல், சட்டவியல் என்னும் துறைகளுள் ட்ரைபோஸ் (Tripos Honours) என்று வழங்கும் விசேட சித்திகளைப் பெற்றார்.
உயர் திரு. பொன்னம்பலம் அவர்கள் தமது இருபத்தைந்தாம் வயதிலே சிறந்த பரிஸ்டர் பட்டத்துடன் இலங்கை திரும்பினார். இலங்கை திரும்பிய உயர் திரு. பொன்னம்பலம் அவர்கள் தமது மைத்துணரான திரு. ஸ்பென்சர் இராசரெத்தினம் அவர்களுடன் இல்லத்தில் அமர்ந்து தனது வக்கில் தொழிலை ஆரம்பித்தார்.
1927ஆம் ஆண்டு தங்காலையில் நடைபெற்ற பிரபல மோட்டார் விபத்து சம்பந்தப்பட்ட வழக்கில் உயர். திரு. பொன்னம்பலம் அவர்கள் எதிரியின் சார்பில் நீண்ட நாள்களாக உயர் நீதிமன்றத்தில் சட்டத் துறையிலே மிகத் திறமையாக வாதாடி வழக்கைத் தள்ளுபடி செய்வித்தார்.
இதுதான் அவருடைய முதல் சுப்பிறீம்கோட் வழக்கு. இச்சம்பவம் பற்றிய ஒரு சிறுகுறிப்பையும் இத்துடன் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன். அதாவது மகன் சிவில் சேவிசில் கடமையாற்ற வேண்டுமென்ற எண்ணத்துடன் லண்டன் கேம்பிறிஜ் சர்வகலாசாலைக்கு அனுப்பிவைத்த தந்தையின் எண்ணத்திற்கு மாறாக உயர் திரு. பொன்னம்பலம் அவர்கள் பரிஸ்டர் பட்டத்துடன் தாயகம் திரும்பியதை தந்தை அவர்கள் அவ்வளவாகப் பாராட்டவில்லை. இருந்தபோதிலும் தங்காலை மோட்டார் விபத்து வழக்கில் தன் மகன் திறமையாக வாதாடி வெற்றியீட்டிய செய்தியைக் கேட்டு மனமார வாழ்த்தி பெருமிதமடைந்தார். ஈற்றில், தன் மகன் சிவில் சேவிஸில் கடமையாற்றுவதிலும் பார்க்க வக்கீல் தொழிலிலே கீர்த்தியடைவதே மிகச் சிறந்ததென ஒப்புக்கொண்டார். இவ்வாண்டிலேயே நம் தலைவரின் அன்புத் தந்தை கணபதிப்பிள்ளை காங்கேயர் அவர்கள் சிவபதமடைந்தார்.
தங்காலை வழக்கின் வெற்றிக்குப் பின்னர் ஹல்ஸ்டப் நீதிமன்றத்தில் உயர் திரு. பொன்னம்பலம் அவர்கள் நடாத்தும் வழக்குகளைக் கவனிக்கவும், பார்க்கவும் மக்கள் திரள் திரளாக யாழ்ப்பாணம், கண்டி, காலி, மாத்தறை, திருகோணமலை ஆகிய இடங்களிலிருந்து தினமும் வந்து குவிந்தமை இங்கு குறிப்பிடத்தக்க தொன்றாகும்.
அரசியல்துறை
தனது தனிப் பிரயத்தனத்தினால் சட்டசபைப் பகிஷ்கரிப்பை நீக்கி 1934 ஆம் ஆண்டிலே அரசாங்க சபை இடைத்தேர்தலை உண்டாக்கி, தமது சொந்தத் தொகுதியான வடமராட்சித் தொகுதி;யில் பிரபல பரிஸ்டரான திரு. பத்மநாதன் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிவாகை சூடினார். இதுவே உயர் திரு. பொன்னம்பலம் அவர்களின் அரசியல்துறையின் ஆரம்ப பருவமெனலாம். 1936ஆம் ஆண்டில் சட்டசபைத் தேர்தலில் வடமராட்சித் தொகுதியில் முன்னாள் சட்டசபை உறுப்பினராகிய திரு. பாலசிங்கத்துடன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவ்வாண்டிலே அரசாங்க சபையில் போக்குவரத்து அமைச்சராகக் தற்காலிகமாகக் கடமையாற்றினார்.
அரசாங்க சபையில் கடமையாற்றியவர்களில் வயதில் குறைந்தவர் உயர். திரு. பொன்னம்பலம் அவர்களே. 1936ஆம் ஆண்டில் தற்காலிக அமைச்சராக பணிபுரிந்தபோது சிங்கள மந்திரிமார் அனைவரும் ஒன்றுசேர்ந்து தங்களது சிபார்சுகளைக் கொண்டதேர் மனுவை சபையில் சமர்ப்பித்தனர். அப்பொழுது உயர் திரு. பொன்னம்பலம் அவர்கள் சிங்கள மந்திரிமார்களின் சிபார்சைக்கொண்ட மனுவுக்கு எதிராகத் தாமே ஒரு மனுவை சமர்பித்ததோடல்லாமல் தன்னுடைய சொந்தச் செலவில் சிரமத்தையும் பார்க்காது இங்கிலாந்து சென்று அந்நாட்டு முதிர்ந்த பிரமுகர்களுடனும் குடியேற்ற நாடுகளின் காரியதரிசியாக இருந்த திரு. மாலகம் மக்டொனால்ட் உடனும் பேட்டிகண்டு இலங்கை மந்திரிகளின் சிபார்சுகளை இலங்கை அரசாங்க சபையில் விவாதிக்க முன்னரே அவர்கள் சிங்கள மந்திரிகளின் சிபார்சை ஏற்றுக்கொள்ளாது தடுத்து விட்டார். இங்கிலாந்திலிருந்து தாயகம் திரும்பியபோது சேர். ஹென்றி கோல்டிக்கொட் அவர்களின் சிபார்சுகளை அரசாங்க சபையில் விவாகத்திற்கு எடுத்துக்கொண்ட சமயம் மிகச்சிறந்த முறையில் தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் ஏனைய சிறுபான்மையினரின் கோரிக்கைகளையும் நாவன்மையினால் விளக்கி எந்த ஒரு அரசியல் சட்ட சீர்திருத்தத்திலும் அவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டியதின் அவசியத்தை மூன்று தினங்களாக பதின்மூன்று மணித்தியாலம் சபையில் எடுத்து விளக்கினார். இப்படியாக பேசிக்கொண்டிருக்கும் போது தொண்டை அடைப்பு ஏற்பட்டதின் காரணமாக சட்டசபை மண்டபத்தினுள் முதன்முதலாக ஒலி பெருக்கியை வரவழைத்துப் பேசியது சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிததொன்று. இவ்வரியதோர் சாதனையை ஏற்படுத்தியதோடல்லாமல் மக்களின் இதயத்தில் நிரந்தரமான இடத்தையும் பெற்றார். அரசியல் சட்ட சீர்திருத்தத்தையிட்டு தகுந்த சிபார்சுகளை செய்வதற்கென அரசநியமனம் பெற்ற விசாரணைக் குழுவினை நியமிக்க வேண்டுமென, சிங்கள அமைச்சர் அனைவரும் ஒன்ற சேர்ந்து எதிர்க்கவும் அவர்களைத் தன் நாவன்மையினால் மிகத்துரிதமாக வாதாடி வெற்றி பெற்றதன் பயனாக கோல்பரி விசாரணைக் குழுவினர் நியமிக்கப்பட்டனர்.
இந்த நாட்டில் பெரும்பான்மையினருடைய அடக்கியாளும் செயலை நிறுத்தி இலங்கைவாழ் சகல சிறுபான்மை மக்களுக்கும் சமத்துவ பிரதிநிதித்துவம் அரசியல் சட்டத்தில் சிறப்பிடம் பெறவேண்டுமென சோல்பரிக் குழுவின்முன் வாதாடினார். அத்துடன் இலங்கை அரசியல் சட்டசீர்திருத்தத்தில் அடிப்படை உரிமைகள் அத்தியாவசியமென்றும், அரசியல் சட்டத்தில் அவை இடம் பெறவேண்டுமெனவும் வாதாடி வற்புறுத்தியதின் பயனாக இன்றைய அரசியல் சட்டத்தில் 29ஆம் பிரிவு இடம் பெற்றுள்ளது. சிறுபான்மையினரின் பணத்தின் தர்க்க சாதுரியத்தையும் வாக்குவன்மையையும் குழுவினர் முதலாக எதிர்க்கட்சிகள் ஈறாக எல்லோரும் வியந்து பாராட்டினர். சோல்பரிக் குழுவினர் விசாரணை நடத்திய சமயம் இங்கிலாந்தில் கொன்சவேட்டிவ் கட்சி ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு தொழிற்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. எனவே இம்மாற்றத்திற்கு ஏற்ப குழுவினரின் அறிக்கையும் மாற்றி அமைக்கப்பட்டது.
1938ஆம் ஆண்டில் உயர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் திருமண வைபவம் சைவ முறைப்படி நடைபெற்றது. மலாயா தேசத்தில் யாழ்ப்பாணத்தவர் பெருமிதம் அடையும்படி திரவியம் தேடிப் புகழ் பெற்ற திரு. கிளவ் பாலசிங்கத்தின் அருந்தவப் புதல்வியான அழகுமணியே நம் தலைவரின் இல்லறத் துணைவியானார். அக் காலத்தில் நடைபெற்ற திருமண வைபவங்களில் போற்றத்தக்கதும் பிரமிக்கத்தக்கதுமான முறையிலே பிரபல நாதஸ்வரவித்துவான்களும் தவில் வித்துவான்களும் பல பேரறிஞர்களும் கலந்து கொண்டார்கள். மாப்பிள்ளை இல்லமாகிய நவாலி தொடக்கம் மணப்பெண் இல்லமாகிய யாழ். பீச்றோட் வரையும் விசேஷமாக மாவிலைத் தோரணங்களாலும் வாழைகளாலும் மலர்மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு ஓர் களியாட்டு விழாவாக திருமணவைபவம் காட்சியளித்தது.
இலங்கையின் சரித்திரத்திலே தமிழ் மக்களுக்கென ஓர் சிறந்த கட்சி ஒன்றை ஸ்தாபிக்கவேண்டுமென உயர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் கொழும்பு மாநகரில் ஓர் மகாநாட்டைக் கூட்டினார். அம் மகாநாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முதிர்ந்த அரசியல் வாதிகளும், ஏனைய பகுதிகளிலிருந்து அநேக பிரதிநிதிகளும் மகாநாட்டிற்கு வந்திருந்தனர். அம்மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்டபடி 1944ஆம்ஆண்டு உயர் திரு ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசை ஸ்தாபித்ததோடு அதன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று தொடக்கம் இன்று வரையும் இப் பெரும் ஸ்தாபனத்திற்கு தலைவராக இருக்கும் மதிப்பு அவருக்கே உரியதொன்றாகும்.
1947ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே பல தேர்தல் தொகுதிகளில் தமது கட்சியைச் சேர்ந்த சிறந்த அபேட்சகர்களை காங்கிரசின் சார்பில் போட்டிக்கு நிறுத்தி ஓர் தொகுதியைத் தவிர ஏனைய தொகுதிகள் அனைத்திலும் அமோக வெற்றியீட்டினார். அவ்வமயம் உயர் திரு. பொன்னம்பலம் அவர்களின் தலைமையிலே பாராளுமன்ற அங்கத்தவர்களாக திரு. S. J. V. செல்வநாயகம். காலஞ்சென்ற இளைப்பாறிய ஓடிட்டர் ஜெனரல் K. கனகரெத்தினம், காலஞ் சனெ;ற நியாயவாதி S. இராமலிங்கம், காலஞ் சென்ற வன்னியனார். K சிவபாதன், காலஞ்சென்ற திரு. G.வன்னியசிங்கம், திரு.V.குமாரசாமி ஆகியோர் இருந்தனர். அச்சமயம் சுயேட்சையாக காங்கிரசை ஊர்காவற்றுறையில் எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றியீட்டிய திரு. அல்பிரட் தம்பிஐயா பின்னர் காங்கிரஸ் பாராளுமன்றக் குழுவில் ஒருவராகச் சேர்ந்து கொண்டார்.
அரசியல் துறையில் கீர்த்திக்கு மேல் கீர்த்தி கிடைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் சட்டத்துறையிலும் அவர் மிகச் சிறந்த கீர்த்தியைப் பெற்றதின் பயனாக மாட்சிமைதங்கிய அரசின் வழக்கறிஞராக (king’s Counsel) 1948 ஆம் ஆண்டு நியமனம் பெற்றார். இந்நியமனத்தையொட்டி விசுவாசப் பிரமாணம் எடுப்பதற்காக ஹல்ஸ்டவ் உயர் நீதிமன்றத்தில் பிரதம நீதி அரசருடன் ஏனைய நீதியரசர்களும் வீற்றிருக்க இலங்கையின் தலைசிறந்த சிவில், கிறிமினல் நியாயதுரந்தரர்கள் மத்தியில் உயர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டார். அச்சமயம் நானும் அங்கு பிரசன்னமாயிருந்தேன்.
தேர்தல் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியில் இரண்டாவது பெரும்பான்மைக் கட்சியினராக வீற்றிருந்தனர். ஆனால் எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் ஒன்றுபட்டு இயங்க முடியாமலும் ஒன்று சேர்ந்து திட்டவட்டமான திட்;டங்களை வகுத்து சபையில் சமர்ப்பிக்க முடியாமலும் இருந்தார்கள். குறிப்பாக தமிழினத்தின் முக்கிய விஷயங்களில் உடன்பாடு காணமுடியாத பல பிரச்சனைகளில் சிறுபான்மையினருக்க ஓர் அங்கம் கிடைப்பதற்கு இலங்கை தேசியக் கொடி (Ceylon National Flag) விஷ்யமும் ஒன்றாகும். அச்சமயம் முதலமைச்சராக இருந்த உயர் திரு. கௌரவ டி. எஸ். செனநாயக்கா அவர்கள் தமிழ் காங்கிரசை அழைத்து தனது அரசாங்கத்தோடு சேருமாறு பெரிதும் வேண்டினார்.
உயர் திரு ஜீ. ஜீ.பொன்னம்பலம் அவர்கள் தான் தன்னுடைய கட்சியையும் மத்திய குழுவையும், நிர்வாகக் குழுவையும் கொழும்பு, யாழ்ப்பாணம். காங்கிரஸ் கிளைகளையும் கூட்டி ஆலோசித்த பின்னரே பதில் தரமுடியுமெனக் கூறி உடனடியாகக் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரையும் நிர்வாகசபையையும் கொழும்பு, யாழ்ப்பாணம் கூட்டு நிர்வாகசபையையும் அழைத்து தீர ஆலோசனைகள் நடாத்தி ஈற்றில் பிரதமரின் அழைப்பை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கவதென தீர்மானித்து யாழ்ப்பாணத்தில் மாபெரும் கூட்டமொன்றைக் கூட்டி அக்கூட்டத்தில் ஏறக்குறைய 50,000 தமிழ் மக்கள் முன்னிலையில் காங்கேசன்துறைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் உட்பட ஒவ்வொருவரும் அரசாங்கத்துக்கு தம் முழு ஆதரவையும் கொடுப்பதாக தத்தம் பேச்சில் குறிப்பிட்டனர். இம் மாபெருங் கூட்டத்தில் அளவு கடந்த உற்சாகத்துடனும், கரகோசங்களுடனும், இந்த நடவடிக்கையை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர். அரசாங்கம் தம்மை அழைக்கும் பட்சத்தில் தாம் மந்திரிப் பதவி ஏற்கச் சம்மதிப்பதாக திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆனால் காலஞ்சென்ற திரு. டி. எஸ். செனநாயக்கா அவர்கள் உயர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களே தம் அமைச்சரவையில் ஒருவராக இருக்கவேண்டுமென்று வற்புறுத்தியதின் காரணமாகவே திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் மந்திரிப்பதவியை ஏற்றார். அவருக்கு தொழில், தொழில் ஆய்வு, கடற்றொழில் அமைச்சு கொடுக்கப்பட்டது. விசுவாசப்பிரமாணம் செய்வதற்கு இராணி மாளிகைக்கு காலஞ் சென்ற திரு. டி. எஸ். செனநாயக்காவுடன் சென்றதையும் இதில் குறிப்பிட விரும்புகிறேன். கௌரவ திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் மந்திரியாக இருந்த காலத்திலே அவர் ஆற்றிய சேவையையும் சிறப்புவாய்ந்த சாதனைகளையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
காங்கேசன் துறையிலுள்ள சீமேந்துத் தொழிற்சாலையும், பரந்தனிலுள்ள இரசாயனத் தொழிற்சாலையும், வாழைச்சேனையிலுள்ள காகிதத் தொழிற்சாலையும், சீதுவையிலுள்ள எண்ணெய் கொழுப்புத் தொழிற்சாலையும், நீர்கொழும்பிலுள்ள வனை கைத்தொழிற்சாலையும், மட்டக்குளியிலுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலையின் பூரணபுனரமைப்பையும், ஜின்தோட்டையிலுள்ள ஒட்டுப்பலகை தொழிற்சாலையையும் அமைத்தபெருமை உயர் திரு. ஜீ. ஜீ பொன்னம்பலம் அவர்களையே சார்ந்தது.
இலங்கையின் தொழில் அபிவிருத்தித் திட்டத்தில் முதலில் உருவாகிய பெரிய தொழிற்சாலைகள் இன்றுவரையும் தொழில்துறையில் அரசாங்கத்தின் பெரிய தொழிற்சாலைகளாக விளங்குகின்றன. உயர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் அமைச்சராக இருந்த காலத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள புல்மோட்டை என்னுமிடத்தில் கனிப்பொருள் உற்பத்தித் தொழிற்சாலை நிறுவுவதற்காக எடுத்துக்கொண்ட பூர்வாங்க நடவடிக்கையின் பயனாக அமைச்சர் பதவியை விட்டு நீங்கிய பின்னரும் அத்தொழிற்சாலை உருவாகியது.
இலங்கையின் முதற் பிரதமராகிய காலஞ்சென்ற கௌரவ டி. எஸ். செனநாயக்கா அவர்களும் உயர் திரு. ஜீ. ஜீ பொன்னம்பலம் அவர்களும் தினசரி காலிமுக மைதானத்தில் ஒன்றாகக் குதிரைச்சவாரி செய்வது வழக்கம். அவ்வேளைகளில் அவர்கள் இருவரும் அரசியற் சூழ் நிலைகளைப்பற்றி பேசுவது உண்டு. ஒரு நாள் அவர்கள் இருவரும் சவாரி செய்யும் சமயத்தில் பிரதமர் கௌரவ டி. எஸ். செனநாயக்கா அவர்கள் குதிரையில் இருந்து தவறி விழுந்து மார்படைப்பினால் மரணமானார். திரு. டட்லி செனநாயக்கா அவர்கள் இலங்கையின் இரண்டாவது பிரதம மந்திரியாகப் பதவி ஏற்பதற்கு உயர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களே மூலகாரணமாக இருந்தாரென்பது யாவருமறிவர். இலங்கையின் அரசியல் சட்டத்தின் பிரகாரம் முழு அமைச்சர்களும் ராஜினாமா செய்து கௌரவ திரு. டட்லி செனநாயக்கா அவர்களினால் அமைக்கப்பட்ட இரண்டாவது மந்திரி சபையில் உயர்திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் முன்னர் வகித்துவந்த அமைச்சர் பதவிக்கே மீண்டும் நியமிக்கப்பட்டார். உயர்திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் அமைச்சராக இருந்தகாலத்தில் அவருடைய தாயார் தில்லைநாயகி காங்கேயர் கொழும்பு மாநகரில் காலமானார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் டட்லி செனநாயக்கா அவர்கள் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். பிரதமரின் இராஜினாமாவைத் தொடர்ந்து சுதந்திர இலங்கையின் மூன்றாவது பிரதமராக சேர். ஜோன் கொத்தலாவலை அவர்கள் பதவியேற்றார். சேர். ஜோன் கொத்தலாவலை பிரதமராக இருந்த காலத்தில் அவருடைய அரசியல் கொள்கைகளுடனும் திட்டங்களுடனும் ஒத்துழைக்கமுடியாத உயர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் மந்திரிசபையிலிருந்து ராஜினாமா செய்தார்.
1956ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திரு. S. W. R. D பண்டாரநாயக்கா அவர்களுக்கு அமோக வெற்றி கிடைத்ததின் பயனாக அரசாங்க பொறுப்பை ஏற்றதுடன் முதல் அமைச்சராகவும் பதவியேற்றார். அதே ஆண்டில் திரு S. W. R. D பண்டாரநாயக்கா தனிச் சிங்கள மசோதாவை (Sinhala only Act) சட்டமாக்கும் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது அம் மசோதாவையிட்டு சபையில் நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சியிலிருந்து முதற் பேசும் உரிமையைப் பெற்று தனிச் சிங்கள மசோதாவை எதிர்த்து ஒரு நாள் முழுவதும் பேசினார். அவர் அன்று பேசிய பேச்சிலடங்கிய அரசியல் ஞானம் இலங்கை மக்கள் எல்லோரும் என்றும் கவனித்து நடக்க வேண்டியதாகும்.
1958 ஆம் ஆண்டில் அரசாங்க சபையிலும் பின்னர் பாராளுமன்றத்திலும் தொடர்ச்சியாக அங்கத்துவம் வகித்து கால் நூற்றாண்டு காலத்தை முடித்ததின் மூலம் இலங்கைச் சரித்திரத்திலேயே ஒரு தமிழ் மகன் கால் நூற்றாண்டு காலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தனிப் பெருமை உயர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களுக்கே உரியதாகும்.
1962 ஆம் ஆண்டு தை மாதம் 26ஆம் திகதி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு சதி செய்ததாக குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டவர்களுக்காக ஒரு வருடத்திற்கு மேலாக தன்உடல் நலத்தைப் பேணாது சதி வழக்கை ஏற்று திறம்பட வாதாடியது மட்டுமன்றி அநேகரை விடுதலையாக்கிய பெருமையும் உயர் திரு. பொன்னம்பலத்தையே சாரும். இலங்கைச் சரித்திரத்திலேயே இப்படிப்பட்டதோர் சதி வழக்கு ஒரு போதேனும் நடைபெற்றது கிடையாது.
1965ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியைப் பொறுப்பேற்ற வழி நடத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபேட்சகர்களை நிறுத்தி 98,726 வாக்குகளை பெற்று மூன்று அபேட்சகர்களுடன் பாராளுமன்றம் சென்றார். 1965 ஆம் ஆண்டு திரு டட்லி செனநாயக்கா தலைமையில் இயங்கும் தேசிய அரசாங்கத்தில் தமிழ் காங்கிரசும் ஒர் அங்கம் வகிக்கின்றது.
தேசிய அரசாங்கத்தில் சேர்ந்த அதே ஆண்டில் இலங்கையின் பிரதமக் குழுத் தலைவராக ஐக்கியநாடுகள் சபைக்கு தெரிந்தெடுக்கப் பட்ட பெருமையும், புகழும் உயர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலத்தையே சாரும். இச் செயல் ஈழத்திருநாட்டிற்கும். தமிழ் இனத்திற்கும் பெருமையையும புகழையும் தேடித்தந்ததோர் அரிய செயலாகும்.
ஐக்கிய நாடுகள் சபையில் கலந்துகொண்டு உயர்திரு ஜீ. ஜீ பொன்னம்பலம் அவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் இடையிடையே பலத்த கரகோஷம் கிளம்பிய வண்ணமே இருந்தது. ஆங்கில பாஷையையே தாய்ப் பாஷையாகக் கொண்டிருந்த ஆங்கில பேச்சாளர்கள் அவையிலே தமிழ் மகனாகச் சென்று ஆங்கிலப் பாஷையிலே மோகங் கொண்ட ஆங்கிலேயரே பிரமிக்கத்தக்க வகையிலே தனது நாவன்மையாலும் அறிவு ஆற்றலாலும் ஐக்கியநாடுகள் சபை மண்டபமே அதிரத்தக்க முறையில் அரியதோர் சொற்பொழிவை ஆற்றிய திறமையும், பெருமையும் உயர் திரு ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களையே சாரும். அவருடைய சொற்றிறனையும், பேச்சுவன்மையையும் புகழ்ந்து பாராட்டியவர்களில் அந்நாளில் இலங்கையின் அமெரிக்கத் தூதுவராகக் கடமையாற்றிய பிரான்சிஸ் வில்ஸ் அவர்களும் ஒருவராவார். குறிப்பாக ஆங்கிலப்பாஷை பேசும் அங்கிலேயரிலும் பார்க்க ஓர் அன்னியர் இவ்வளவு திறமையாகப் பேசியிருப்பது. மிகவும் பாராட்டத்தக்கதொன்றாகுமென சபை அவதானிகள் கருத்து வெளியிட்டனர். ஐக்கியநாடுகள் சபையில் இலங்கையின் குரலெழுப்பிய பெருமையும் புகழும் உயர். திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களையே சாரும். ஐக்கியநாடுகள் சபையில் இலங்கையின் குரலெழுப்பிய வீரமகனை இலங்கைவாழி மக்கள் வரவேற்ற காட்சி சரித்திரம் காணாததோர் செயலாகும்.
உயர்திரு. ஜீ. ஜீ பொன்னம்பலம் அவர்கள் இலங்கை திரும்பியபோது அவரே என்றுமே அறியாததோர் வரவேற்பு காத்திருந்தது.
உயர் திரு ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் விமானம் மூலம் கட்டுநாயக்கா விமானநிலையம் வந்திறங்கியபோது அவரை மந்திரிமார்களும், உதவி மந்திரியார்களும், நீர்கொழும்பு மேயரும், பிரபல அரசியல் அவதானிகளும், இலங்கையின் நாலா பக்கத்திலுமிருந்து வந்த நண்பர்களும், உறவினர்களும் ராஜாங்க மரியாதையுடன் வரவேற்றனர். கணக்கிலடங்காத வண்ணமலர் மாலைகள் கழுத்தை அலங்கரிக்க புன்முறுவல் பூத்தவண்ணம் மக்கள் முகத்தில் ஆனந்த வெள்ளம் ததும்ப, மங்கள வாழ்த்n;தாலி முழுங்க கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து அவரது இல்லம் வரையும் மோட்டோர் பவனியில் சென்ற கட்சி ஈழத்துமக்கள் நெஞ்சில் என்றென்றும் பதிந்ததோர் அரிய காட்சியாகும். உயர் திரு. ஜீ. ஜீ பொன்னம்பலம் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய அரியசேவையைக் கௌரவிக்கும் முகமாக இலங்கை வாழ் சகல மக்களும் ஒன்று கூடி தலைவர் அவர்களுக்கு கொழும்பு கால்பேஸ் ஹொட்டலில் ஓர் இரவு விருந்துபசாரம் வைத்தனர்.
“தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா” என்ற பாரதியின் சொல்லுக்கேற்பத் தமிழ்க் குரல் உலகறியச் செய்த சிம்மக்குரலோன் உயர் திரு. ஜீ. ஜீ பொன்னம்பலம் அவர்கள் கொழும்பில் சில காலம் தங்கிய பின்னர் யாழ்ப்பாணம் வந்தார்.
தலைவரை வரவேற்க என்றுமே காணாத ஜனத்திரள் பலாலிவிமான நிலையத்தில் குடுமி நின்றது. காலை 9-00மணியளவில் பேரிரச்சலுடன் நீலவானத்தின் மத்தியில் இளந்தென்றல் ஜில் என வீச, முகில் கூட்டங்கள் வானத்தே அசைந்தாட, வாழ்த்தொலிவானைப் பிளக்க நம் தலைவரைத் தாங்கிய விமானம் விமானநிலையத்தை வந்தடைந்தது. விமானத்திலிருந்து இறங்கியபோது உயர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் தம் இருகைகளையும் கூப்பிய வண்ணம் தமது மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பலாலி விமான நிலையத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட மோட்டார் வாகனத்தில் தனிப்பெருந் தலைவர் அமர்ந்திருந்தார். இவ்வாறு பலாலி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பவனியில் நூற்றுக்கணக்கான மோட்டார் வாகனங்கள் கலந்து கொண்டன. வழி எங்கும் மக்கள் பூரண கும்பம் வைத்து குங்குமத் திலகமிட்டு தலைவர் அவர்களை வரவேற்ற வண்ணமிருந்தனர். விமான நிலையத்திலிருந்து ஆரம்பித்த ஊர்வலம் இறுதியாக வைமன் றோட்டிலுள்ள திரு. ஸ்பென்சர் இராசரெத்தினம் வாசஸ்தலம் வரையும் நீடித்தது. அன்றுமாலை விஷேமாக அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் உயர் திரு. ஜீ. ஜீ பொன்னம்பலம் அவர்களை அமரச் செய்து யாழ்ப்பாண ஐயனார் கோவில் சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பிரமாண்டமான ஊர்வலம் மாலை 4மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வ10ர்வலம் யாழ் நகரபிரதான வீதிகள் மூலம் சென்று இரவு 9-00மணியளவில் யாழ் முற்றவெளி மைதானத்தை வந்தடைந்தது. இரதத்தின் மத்தியில் உயர் திரு ஜீ ஜீ பொன்னம்பலம் அவர்கள் வீற்றிருக்க இருபக்கத்தேயும் உடுப்பிட்டி “சிவா”வும், வவுனியா “சிங்கமும்” வீற்றிருந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்த மாபெரும் வரவேற்றுபுக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் வீரமுழக்கம் செய்த உயர் திரு ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களுக்கு 65 தங்கப் பவுண்கொண்ட ஆபரண சங்கிலியை அணிவித்து கௌரவித்தனர். அன்றைய தினம் நடைபெற்ற இவ்விழா யாழ். நகர் என்றுமே காணாத ஓர் அரிய காட்சியாக அமைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்துப்பல்கலைக்கழகம்
இன்றைய உயர்கல்வி சம்பந்தமான விஷயத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பலவித கஷ்டங்களுக்கிடையில் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள கொழும்பு, பேராதனை சர்வகலாசாலைகளிலே கல்வி பயின்று வருகின்றனர். காலஞ் சென்ற சேர். பொன் இராமநாதன் அவர்கள் தன் மரணசாசனத்தில் இந்து என்ற சொல்லுக்கமைய இராமநாதன் கல்லூரி, பரமேஸ்வராக் கல்லூரி போன்றவை இயங்கவேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. போதியளவு சொத்துக்களையும், நிலங்களையும், கட்டடங்களையும் வருங்கால முன்னேற்றத்துக்காக விட்டுச்சென்ற சேர். பொன். இராமநாதன் அவர்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கமாகவே ‘இந்து சர்வகலாசாலை” என்ற பெயர் தோன்றியது. இந்து சர்வ கலாசாலை என்ற பெயருடன் விளங்குவதால் மற்றைய சமயம், மொழி சம்மந்தப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படவேண்டும் மென்பது கருத்தல்ல. பெரும்பாலும் தமிழ்ப் பண்பாடுடன் நெருங்கிய தொடர்புபட்ட சிற்பக்கலை என்ற பெயருடன் விளங்குவதால் மற்றைய சமயம், மொழி சம்மந்தப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படவேண்டுமென்பது கருத்தல்ல. பெரும்பாலும் தமிழ்ப்பண்பாடுடன் நெருங்கிய தொடர்பு பட்ட சிற்பக்கலை, மருத்துவக்கலை, கணிதக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, நாட்டியக்கலை, மந்திரக்கலை என்பவற்றுடன் சகல இன மக்களும்கல்வி வசதி பெறக்கூடிய முறையில் விஞ்ஞானத்துறை, கலைப்பகுதி, பொறியியற்கலை போன்ற பெரும் பிரிவுகளைக் கொண்டதோடு அமைவது மட்டுமல்லாது எல்லா சமயத்தவரும் கல்விபெற வசதி அளிக்கப்படும். இந்து சர்வகலாசாலை நிறுவும் விஷயத்தில் குறிப்பாக நம் தலைவர் உயர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் பரந்த நோக்கத்தோடு இந்து சர்வகலாசாலை நிறுவுவது பற்றி பொதுமக்கள் மத்தியில் அதன் அவசியத்தை வற்புறுத்தியுள்ளார்கள். சென்ற ஆண்டிலும், இவ்வாண்டிலும், வரவு செலவு திட்டத்தில் நம் தலைவரின் முயற்சியின் பயனாய் இந்து சர்வகலாசாலைக்காக அடையாள மானியம் ஒதுக்கப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதொன்றாகும். தமிழினத்தின் வருங்கால சரித்திரத்திலே முக்கலை முன்னேற்றத்திற்கும், தமிழினத்தின் சுபீட்சத்திற்கும். நற்பயன் அளிக்கும் ஒன்று இருக்குமேயானால் அது இந்து பல்கலைக்கழகம் ஒன்றேயாகும் எனக் கூறினால் அது மிகையாகாது.
1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நியாயமான அளவு தமிழ்மொழி மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறிய போது உயர் திரு ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் இவ்வித மசோதாவால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை எனக் கூறிய போதிலும் இம் மசோதா என்னால் நிறைவேறாமல் இருக்கக்கூடாதென்ற காரணத்திற்காகவும், தற்செயலாக அம்மசோதா நிறைவேறாது இருப்பின் அதனால் ஏற்படும் அவச்சொல்லுக்கு யான் பலியாகக்கூடாதென்ற காரணத்திற்குமாகவே நியாயமான அளவு தமிழ் மசோதாவுக்கு ஆதரவு அளித்தார். அன்று சபையிலே இம்மசோதாவினால் எவ்வித பயனுமில்லை என்று கூறியதை இன்று மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. பெரும்பாலும் இன்றைய அரசாங்க அலுவலக தொடர்புகள் சிங்கள மொழியிலேயே நடைபெறுகின்றன. பிற்காலத்தில் இடம் பெறக்கூடிய கஷ்டங்களையும் இன்னல்களையும் முன் கூட்டியே சொல்லிவைக்கும் சக்தி கொண்டவர் நம் தனிப்பெருந்தலைவர் உயர் திரு ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களே.
இரண்டாவது முறையாகவும் உயர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் இலங்கையின் பிரதிநிதியாக ஐக்கியநாடுகள் சபைத் தொடர் கூட்டத்திற்குச் சென்றிருந்தார். இலங்கையின் பெருமைக்குபுகழ் தேடித்தந்த நம்; தலைவரை உலகமே இன்று போற்றிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது முறையாகவும் நம் தலைவர் தாயகம் திரும்பியபோது பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பில் சில தினங்கள் தங்கிய போது பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பில் சில தினங்கள் தங்கிய பின்னர் யாழ்ப்பாண விஜயத்தை மேற்கொண்டார். அப்போது உணவுப் பஞ்சத்தால் இலங்கை மக்கள் பல கஷ்டங்களுக்கூடாக காலங்கழிக்க வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட நிலைமையை உணர்ந்துகொண்ட உயர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள், தாம் ஆடம்பரமான வரவேற்பு உபசாரங்களை இப்படிப்பட்ட சூழ்நிலையில் விரும்பவில்லையென பத்திரிகை மூலம் அறிவித்திருந்தார். அப்படியிருந்தும் மக்கள் அவர் மேற்கொண்ட அன்பின் நிமித்தம் நம் தலைவர் அவர்கள் பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியபோது பூரண கும்பம் வைத்து ஆலாத்தியெடுத்து மலர் மாலைகள் அணிவித்து தம் அன்பைத் தெரிவித்தனர்.
தமிழரசுக்கட்சியின் மத்திய செயற் குழுவில் கடமையாற்றிய நான், அரசியல் சம்பந்தப்பட்ட வகையிலும், எச்செயலையும் நடைமுறையில் சாதிக்கக் கூடிய தலைவர்களில் உயர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களே மிகச் சிறந்தவர் என்பதை உணர்ந்து தமிழரசு மத்திய குழுவிலிருந்து ராஜினாமாச் செய்து உயர் திரு ஜீ. ஜீ பொன்னம்பலம் அவர்களின் கட்சியான காங்கிரஸில் சேர்ந்தேன்.
ஈழத் திருநாட்டில் அவதரித்த உயர் திரு ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் தான் பிறந்த இடத்தி;ற்கும். தன் சொந்தநாட்டிற்கும் எவ்வளவோ அழியாப் புகழை ஈட்டியுதவியுள்ளார். அவற்றுள் முக்கியமாக சட்டத்துறையில சதிவழக்கு போன்ற வழக்கும், அரசியல் துறையில் சட்டசபையில் சிறுபான்மையினர் உரிமைபற்றிய பேச்சும், சோல்பரிக் குழுவினர் முன் தமிழ் உரிமைபற்றி பேசும், தனிச்சிங்கள மசோதாவை எதிர்த்துப் பேசிய பேச்சும், 1958 ஆம் ஆண்டுக் கலகங்கள் பற்றிய பேச்சும், தமிழ் மக்கள் என்றும் நினைத்துப் பெருமிதம் கொள்ளக் கூடியவைகள். கைத்தொழில் துறையில் அவர் செய்த அருஞ்செயல்களை முன்னதாகவே குறிப்பிட்டிருக்கிறேன். கமத்தொழில் அபிவிருத்திக்காக அவர் இன்று திட்டமிட்டுச் செய்யும் அருந்தொண்டுகள் பற்றித் தமிழ்மக்கள் சீக்கிரத்தில் அறிவார்கள்.
உயர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் போன்றவர்கள் எம் நாட்டில் தோன்றுவது அரிதினும் அரிது. இவ்வரிய செம்மலை ஆதரித்து அவர்தம் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுப்போமானால் எமது அடிமைத்தளை நீங்கும், எமது அறிவும் ஆற்றலும் ஓங்கும். சுதந்திர வாழ்வுகிட்டும்.