கருணாவின் ஆதரவாளரா இவர்? – கியூ பிராஞ்ச் பொலிஸார் விசாரணை!

151
இந்தியா இராமநாதபுரத்தில் பொலிஸிடம் சிக்கிய இலங்கைத் தமிழரான கிருஷ்ணகுமார் என்பவர் உண்மையில் யார்? விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் உதவியாளராக செயற்பட்டவர் என்று சொல்லப்படுவது உண்மையா?
57161087k a
இந்தியா இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் கடந்த 20-ம் தேதி பொலிஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சசிகுமார், ராஜேந்திரன் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டடனர். சசிகுமார், ராஜேந்திரன் ஆகிய இருவரும் உச்சிப்புளி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் மற்றொரு நபரின் பெயர் கே.கிருஷ்ணகுமார் என்பதும் அவர், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் உதவியாளராக இருந்தவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கிருஷ்ணகுமாரைப் பற்றி திருச்சியில் அவர் தங்கியிருந்த கே.கே.நகர், ரெங்கா முதல் தெருவில் விசாரிக்கையில்….
அவர் பெயர் காந்தன் என்றுதான் எங்களுக்குத் தெரியும். அவருடைய மனைவி, மக்கள் லண்டனில் இருப்பதாக சொல்வார். அவருடன் வயதான ஒரு தாத்தாவும் தங்கி இருந்தார்.
ஆரம்பத்தில் காந்தன் யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டார். கொஞ்சநாள் கழித்து ஆட்டோ ஒன்று வாங்கி ஸ்கூல் சவாரி ஓட்டினார்.
கூடவே, கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வெளிநாடுகளில் இருந்துவரும் சுற்றுலாப் பயணிகளை அழைத்துக்கொண்டு ஊர் சுற்றிக்காட்டும் வேலை பார்த்தார் என்றனர் ஏரியாவாசிகள்.
இராமநாதபுரத்தில் கிருஷ்ணகு​மாரிடம் விசாரணை நடத்திய பொலிஸாரிடம் பேசினோம்.
யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள அளவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். 39 வயதாகும் இவர், 15 வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பல்வேறு தாக்குதல்களில் முக்கியப் பங்குவகித்தவர்.
தளபதி கிட்டு மரணத்துக்குப் பிறகு, பிரபாகரனுக்கு உதவியாளராக கிருஷ்ணகுமார் இருந்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்ட போர் முடிந்த பிறகு திருச்சியில் வந்து தங்கிவிட்டார்.
விசாரணையின்போது, தான் ஒரு விடுதலைப்புலி என்பதைத் தவிர வேறு எதையும் அவர் சொல்லவில்லை. உண்மையில் இவர் பிரபாகரனின் உதவியாளராக இருந்து பின்பு, கருணாவுடன் பிரிந்து சென்றிருக்க வேண்டும்.
காரணம், இறுதிக்கட்ட போருக்குப் பின் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து சரணடைந்த வீரர்களைக்கூட இலங்கை ராணுவம் விட்டுவைக்கவில்லை.
விடுதலைப்புலிகளைத் தேடித்தேடி அழித்தார்கள். ஆனால், கிருஷ்ணகுமார் உரிய ஆவணங்களுடன் விமானம் மூலம் இந்தியா வந்துள்ளார் என்றால், அவர் நிச்சயம் கருணாவின் ஆதரவாளராக இருந்திருக்க வேண்டும்.
போர் உச்சத்தில் இருந்தபோது திருச்சி வழியாகத்தான் பலரும் தப்பிச்சென்றதாக ஒரு பேச்சும் உண்டு. ஏனெனில், திருச்சி விமானநிலையம் அப்போது முறைப்படுத்தப்படவில்லை.
அதனால் ஈஸியாக விடுதலைப்புலிகள் தமிழகத்தில் ஊடுருவியதாக அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. கிருஷ்ணகுமார், யார் யாரை எல்லாம் சந்தித்தார் என விசாரித்து வருகிறோம். அவருக்கு உத்தரவிட்ட நபர் யார் என்பதையும் விரைவில் கண்டுபிடிப்போம் என்றார்கள்.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு 6 ஆண்டுகள் முடிந்ததுவிட்டன. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இப்போதுதான் ராஜபக்‌ச மீதான போர்க்குற்றம் குறித்த விசாரணை அறிக்கை ஐ.நா மனித உரிமை குழுவால் தாக்கல் செய்ய இருக்கிறது.
இந்த நிலையில், அடுத்த மாதம் நடக்க உள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், இதுவரை எதிரும்புதிருமாக இருந்துவந்த ராஜபக்‌ஷேவும் சிறீசேனவும் இணைந்து போட்டியிடுகிறார்கள்.
இதனால் சிறீசேன அரசின் மீதான நம்பிக்கை எங்களுக்குக் குறைந்து வருகிறது. இந்தச் சூழலில்தான் விடுதலைப்புலிகள் மீண்டும் உயிர்பெற்று வருவது போன்ற தோற்றத்தை இந்திய, இலங்கை அரசுகள் உருவாக்குகின்றன. இந்த நிலையில், கிருஷ்ணகுமார் கைதுசெய்யப்பட்டுள்ளது சந்தேகத்தை அளிக்கிறது.
கிருஷ்ணகுமார் ஆரம்பத்தில் பிரபாகரன் உதவியாளராக இருந்தது உண்மைதான். ஆனால், போருக்குப் பிறகு, தமிழகம் வந்து முகாமில் எந்தவித சம்பவத்திலும் ஈடுபடாமல், வெளியில் இருந்துகொண்டு உழைத்து வாழ்ந்துவந்துள்ளார். அவர், சயனைடு வைத்திருந்ததாக சொல்வது சந்தேகத்தை வரவழைக்கிறது.
விடுதலைப்புலிகள் மீதான தடை இந்தியாவில் நீடிக்க வேண்டும் என திட்டமிட்டு மத்திய, மாநில அரசுகள் கூட்டாக சதி செய்கின்றன. இந்தச் செயல்பாடுகள் ராஜபக்‌ஷே தன்னை காப்பாற்றிக்கொள்ள கூறும் வாதத்துக்கு வலுச்சேர்ப்பதாக உள்ளது என்று குற்றம்சாட்டினர் ஈழத்தமிழர்கள்.
SHARE