கற்பழித்தல்களும் பாலியல் வன்முறைகளும், மக்களின் நிலப் பறிப்புக்களும், மக்கள் வாழ்க்கையில் அவர்கள் பொருளாதாரத்தில் படையினரின் ஊடுருவலும் எமது மக்களின் வாழ்க்கையில், பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன-முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்

418

 


வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுடன் இணைந்த உள்ளூர் ஆட்சி முறை ஒன்று கண்ணுக்குத் தெரியாமல் மிகநேர்த்தியான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டு வருகிறது  என வடமாகாண முதலமைச்சர்  க.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.  யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற வடக்கு மாகாண இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   
வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுடன் இணைந்த உள்ளூர் ஆட்சி முறை ஒன்று கண்ணுக்குத் தெரியாமல் மிகநேர்த்தியான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டு வருகிறது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற வடக்கு மாகாண இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரு போரின் பின்விளைவுகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டு நிற்கும் பரிதாபத்திற்குரியவர்களே நாம் என்பதை மறக்கக் கூடாது. ஏன் என்றால் உத்தியோக பூர்வமாகப் போர் முடிந்த உடன் அப்போரின் பாதிப்புக்களும் முடிந்து விட்டதாக எண்ணுவது மடமை. ஒரு போரின் தாக்கங்கள் பல வருடங்களுக்கு மட்டுமல்ல பல தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லப்படுவன என்பதே உண்மை. உடல் ரீதியாக, மனித ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக, குடும்ப ரீதியாகப் போரின் தாக்கங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

வடமாகாணத்தில் நடப்பது என்ன? எங்கும் இராணுவம். எல்லாம் இராணுவம். போரின் போது பொல்லாத யுத்தத்தில் ஈடுபட்டிருந்த அதே இராணுவத்தினரைக் கொண்ட சூழலில்தான் எம் மக்கள் வாழ வேண்டியுள்ளது. இது அவர்களை வழமை நிலைக்குக் கொண்டுவரக் கூடிய சூழல் அல்ல என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

தற்பொழுது கண்ணுக்குத் தெரியாமலே இராணுவக் கட்டுப்பாட்டுடன் சேர்ந்த உள்ளூர் ஆட்சி வடமாகாணத்தில் வேரூன்றி வருகின்றது. இன்று இங்கிருக்கும் அனைவரும் இதை உணர வேண்டும். மிக நேர்த்தியாக இந்தச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. எவ்வாறு இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்று ஆராய்ந்தோமானால் இராணுவ – பொதுமக்கள் ஒருங்கிணைப்பு நிகழ்வுகளை முன்வைத்து மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணித்து, உள்ளூர் ஜனநாயக கட்டுமானங்களைப் புறக்கணித்துத் தமது திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள்.

இராணுவத்தினர் வேளாண்மையை விட மீன்பிடி தொழிலில், வீடுகட்டுந் தொழிலில், வியாபாரங்களில் மேலும் பலவற்றில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதே இன்றைய யதார்த்தம். எமது கலாசார, மத அனுஷ்டான நிகழ்ச்சிகளிலும் இராணுவத்தினர் பெருவாரியாகக் கலந்து கொள்வது கண்கூடு. உங்களுடன் சேர்ந்து, உங்கள் நண்பர்களாக நாங்கள் நடக்கின்றோம் பாருங்கள், எங்களை நம்புங்கள் என்று தான் மக்களுக்குக் கூறுகின்றார்கள் இவர்கள். ஆனால் மக்களின் சகல அந்தரங்கங்களும் பறிபோகின்றன என்பதை எமது மக்கள் உணர்கின்றார்கள் இல்லை.

அரசாங்கமும் இராணுவமும் சேர்ந்து வடமாகாண மக்கள் போர் முடிந்து ஐந்து வருடங்களுக்குப் பின்னருங் கூட இயல்பு வாழ்க்கையை அவர்கள் எட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லாது தான் நடந்து கொள்கின்றார்கள். நாங்கள் வடமாகாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறும் அரசாங்கமும் இராணுவமும் அவர்களின் செயல்களின் பின்னணியில் பாரிய சில அந்தரங்கங்களை மறைத்து வைத்துள்ளார்கள் என்று தெரிகின்றது.

இன அழிப்பு பற்றி எமது மாகாணசபை உறுப்பினர்கள் பிரேரணை கொண்டு வருவதை நான் தடுத்துள்ளேன் என்ற பாரிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளேன் என்றால் அதற்குக் காரணம் இலங்கையில் அப்பேர்ப்பட்ட செயல்கள் நடைபெறவில்லை என்று நான் நம்புவதால் அல்ல. பிரேரணைகள் கொண்டு வந்துதான் அவற்றைப் புரிய வைக்கலாம் என்பது மடமை. அப்பேர்ப்பட்ட பிரேரணைகள் எவ்விதமான பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடும் என்று நான் புரிந்து கொண்டிருப்பவன் என்ற காரணத்தினாலேயே. அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளேன்.

சிங்கள நண்பர்கள் கலந்துகொள்ளும் இந்த சர்வதேச மனித உரிமைத் தினத்தில் பல உண்மைகளை நாம் பேசலாம். ஆனால் ஒரு மக்கள் பிரதிநிதிகள் சபையில் அதுவும் தமிழ்ப் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சபையில் மிக்க எச்சரிக்கையும் கவனமும் அவசியமாகும். வடகிழக்கு மாகாணங்களில் எம்மக்கள் முகங்கொடுத்த மிகக் கொடூரமான போரானது எம்மக்களின் அடையாளத்தை, அவர்களின் சமூகச் சூழலை, குடும்ப அலகுகளை, கலாச்சார சமய பாரம்பரியங்களைக் குழிதோண்டிப் புதைத்துள்ளதாகவே நான் உணர்கின்றேன்.

தற்பொழுதுந் தொடரும் கற்பழித்தல்களும் பாலியல் வன்முறைகளும், மக்களின் நிலப் பறிப்புக்களும், மக்கள் வாழ்க்கையில் அவர்கள் பொருளாதாரத்தில் படையினரின் ஊடுருவலும் எமது மக்களின் வாழ்க்கையில், பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. அதுமட்டுமல்ல. எமது பாரம்பரிய சமயங்கள் சார் இடங்கள் படையினர் சார்பான சமய இடங்களாக மாற்றப்படுவதும் ஒரு மாபெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. எமது மதஸ்தலங்கள் அழிக்கப்பட்டு படையினருக்குச் சார்பான மதத்தலங்கள் அங்கு கட்டப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

SHARE