கல்விச்சாலையை கோரி நிற்கும் துட்டுவாகை மக்கள்

379

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது முதுமொழியாக இருந்தபோதிலும் இக் கல்வியை பெறுவது என்பது சிலருக்கு கடினமானதாகவே தற்போதும் உள்ளது. அந்தவகையிலேயே வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவில் துட்டுவாகை கிராம மாணவர்களும் கல்வியை பெறுவதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த யுத்த சூழ்நிலையில் தம்பனைக்குளம், பெரியதம்பனை, மற்றும் கந்தசாமிநகர் ஆகிய பகுதிகளில் வசித்துவந்தவர்கள் இடம்பெயர்ந்து பல்வேறு நலன்புரி நிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் வசித்துவந்தனர்.

இவர்களுள் 110 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரை ஏக்கர் காணி வீதம் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்ட கிராமமே இந்த துட்டுவாகை கிராமம்.

இக்கிராமத்திலிருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதலியாகுளம்பாடசாலை, மற்றும் அடைக்கல அன்னை வித்தியாலயம், மாங்குளம் அல்காமியா முஸ்லிம் வித்தியாலயம், நேரியகுளம் போன்ற பாடசாலைகளுக்கு சுமார் 5 தொடக்கம் ஏழு கிலோமீற்றர் தூரம்வரை நடந்து சென்றே கல்விகற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

1996ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து இன்றுவரை இக்கிராமத்துக்கென்று தனியாக பாடசாலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை எனபதே இக் கிராம மக்களின் குறையாகவுள்ளது.
குறித்த கிராமத்தில் வசிக்கும் மாணவர்கள் மதவாச்சி;யையும் மன்னாரையும் இணைக்கும் வாகன நடமாட்டம் அதிகம் காணப்படுகின்ற அபாயகரமான வீதியை பயன்படுத்தியே
பாடசாலைக்குச் சென்று வருகின்றனர்.

இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் தரம்10 இல் கல்விகற்ற மாணவியொருவர் பேரூந்தில் மோதி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றதன் பின்னர் இக் கிராமத்தில் இருந்து மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவது என்பது பெற்றோருக்கு அச்சமான காரியமாகவே மாறியுள்ளது.

இவ்வாறு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கும் மாணவர்கள் தமது கிராமத்தில் ஒரு ஆரம்ப
பாடசாலையை அமைத்துத் தரும்படி பல தடவைகள் பல்வேறு தரப்பினருக்கும் கோரிக்கை விடுத்தும் இதுவரை தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.

இந் நிலையில் செட்டிகுளம் கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.ஜேசுதாசன் அவர்களின்
வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த கிராமத்தில் ஆரம்ப பாடசாலை அமைப்பதற்காக வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்தினால் இரண்டு ஏக்கர் பரப்பளவை உடைய காணி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஆரம்ப பாடசாலையை அமைப்பதற்¬குரிய நிதி ஒதுக்கீடு இன்னமும் கிடைக்காததன் காரணத்தினால் இந்த பாடசாலை அமைப்பதில் தாமதமாகி வருவதாக இக் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் இருக்கும் மாணவர்களின் கல்விக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

SHARE