யுத்தத்தால் அழிவுற்று மெல்ல மெல்ல மீண்டுவரும் பாடசாலைகளில் நூல்வளம் பெருக்கும் நோக்கோடு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டுவரும் கல்விச்செழுமை செயற்திட்டத்தில் இன்று நான்கு பாடசாலைகள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.
துணுக்காய் வலயத்தில் உள்ள நான்கு பாடசாலைகளுக்கு இன்று காலை விஜயம் செய்த ரவிகரன், பெறுமதியான பயிற்சிப்புத்தங்களை வழங்கியதோடு பாடசாலைகளில் நிலவும் குறைகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அறியவருவதாவது,
கல்விச்செழுமை செயற்திட்டத்தில் முதலாம் கட்டமானது முல்லை கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் உள்வாங்கியிருந்த நிலையில் இதன் இரண்டாம் கட்டம் தற்பொழுது துணுக்காய் கல்வி வலயத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
சாதாரணதர உயர்தர பாடசாலைகளை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் இச்செயற்திட்டத்தின் மூலம் முல்லை கல்வி வலயத்திலுள்ள அனைத்து சாதாரணதர உயர்தர பாடசாலைகளும் (26 பாடசாலைகள்) உள்வாங்கப்பட்ட நிலையில் இதன் இரண்டாம் கட்டத்தில் இதுவரை இருபது பாடசாலைகள் துணுக்காய் கல்வி வலயத்தின் ஊடாக உள்வாங்கப்பட்டுள்ளன.
கற்சிலைமடு அ.த.க.பாடசாலை, கரிப்பட்டமுறிப்பு அ.த.க.பாடசாலை, பெரியகுளம் அ.த.க.பாடசாலை மற்றும் ஒலுமடு தமிழ் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளுக்கும் பயிற்சிப்புத்தகங்களை வழங்கிய ரவிகரன் பாடசாலையில்நிலவும் குறைகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார்.
கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு சவாலாக உள்ள கட்டிட குறைபாடுகள், விளையாட்டு மைதான புனரமைப்புத்தேவைகள் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு போன்றவை தொடர்பிலான முறைப்பாடுகள் ரவிகரனிடம் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதன் தொடர்ச்சியான முன்னெடுப்புகள் தொடர்பில் கருத்து தெரிவித்த ரவிகரன்,
அஸ்ரன் பதிப்பகத்தாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இவ்விரு கட்டங்கள் போன்று இச்செயற்திட்டம்மென்மேலும் பல கட்டங்களை எட்டி ஈழத்து பாடசாலைகளில் நூல் வளம் பெருகி கல்வி வளம் மேலோங்கி வளமான ஈழத்து எதிர்காலத்தை கட்டியெழுப்ப அனைத்து கரங்களும் இணையட்டும். ஈழத்தமிழ் வளம் பெருகட்டும் என்றார் ரவிகரன்.