காணி அனுமதி பத்திரம் நீண்டகால போராட்டங்களுக்கு பின்னர் கிடைக்கிறது. இதனைப் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொருவரும் இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

314

 

வீட்டுத்திட்டம் கிடைத்தும் பலர் வீடுகளை கட்டமுடியாத நிலையில் உள்ளனர். கடந்த 40 வருடத்திற்கு மேலாக குடியிருக்கும் மக்களின் காணிப்பிரச்சினையை தீர்க்க காணி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன்.

அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளாவிய ரீதியில் 25,000 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வின் ஒரு கட்டமாக வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 5,464 பேருக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு கடந்த (24.03.) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் – இந்த காணி அனுமதி பத்திரம் நீண்டகால போராட்டங்களுக்கு பின்னர் கிடைக்கிறது. இதனைப் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொருவரும் இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காலத்திலே வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் யுத்தம் நடைபெற்றது. அதன் பின்னர் மக்களினுடைய ஆயிரக்கணக்கான நிலங்களை இராணுவம் தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது. இதனால் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது சொந்த நிலங்களில் மீள குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே, அதனை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்த புதிய அரசாங்கத்திற்கு இருக்கிறது.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என பரவாலாக பல நிலங்கள் இராணுவத்திடம் உள்ளன. குறிப்பாக வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம் பிரதேசத்தில் நலன்புரி நிலையம் இருந்த 6,348 ஏக்கர் காணி இராணுவத்திற்கு கையளிப்பதற்காக காணி ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த நடவடிக்கை மீள்பரிசீலனை செய்யப்பட்டு போரால் பாதிக்கப்பட்ட அந்த பிரதேச மக்களிடம் அவை ஒப்படைக்கப்பட வேண்டும். இதேபோன்று செட்டிகுளம் பிரதேசத்தில் அருவித் தோட்டத்தில் இருக்கின்ற கிட்டத்தட்ட 600 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் இராணுவத்திற்கு எடுக்கப்படுகிறது.

அது போல வவுனியா, ஏ9 வீதியில் றம்பைக்குளத்தில் 44 குடும்பங்களுக்கு சொந்தமான காணியை இராணுவம் பிடித்துள்ளது. பேயாடி கூழாங்குளம், மூன்று முறிப்பு போன்ற பகுதிகளில் பல குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களை மீளவும் மக்களிடம் வழங்க வேண்டும். அதே போன்று காணி அனுமதிப் பத்திரம் இல்லாத மக்களுக்கு அவற்றை வழங்க வேண்டிய தேவையும் உள்ளது. வீட்டுத் திட்டங்கள் கிடைத்தும் வீடுகள் கட்டமுடியாத நிலையில் பலர் உள்ளனர். குறிப்பாக புதியவேலர்சின்னக்குளம், வேடர்மகிழங்குளம், விளக்குவைத்தகுளம் பகுதிகளில் உள்ள பல காணிகள் மத்திய தர வகுப்பு காணிகள் என கூறி வீட்டுத்திட்டங்கள் கிடைத்து பல மாதங்கள் ஆகியும் வீடுகளை கட்டமுடியாத நிலையில் உள்ளனர்.

இப் பகுதியில் மக்கள் 30, 40 வருடங்களாக அந்த காடுகளை வெட்டி அங்கேயே குடியிருக்கிறார்கள். 1970-1980 வரையான காலப்பகுதிகளில் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பலர் காடுகளை வெட்டி இங்கு குடியிருக்கிறார்கள். இவர்களக்கும் காணிகளை வழங்க காணி ஆணையாளர் நாயகம் மற்றும் மாகாண காணி ஆணையாளர் ஆகியோர் அரச அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலமே இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறமுடியும். இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் எமது தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவும் தான் ஒரு ஆட்சி மாற்றத்தை எல்லோரும் இணைந்து ஏற்படுத்தியிருந்தோம்.

குறிப்பாக இந்த அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கு தமிழ் மக்களுடைய பங்கு அளப்பரியது. இதனை இந்த அரசு புரிந்து கொண்டு மக்களின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் காணி ஆணையாளர் நாயகம், வடமாகாண காணி ஆணையாளர், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, தர்மபால செனவிரட்ன, ஜெயதிலக, வர்த்தக கைத்தொழில் அமைச்சரின் இணைப்பாளர் முத்து முகமது, மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திர, பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

SHARE