காதலியை கொலை செய்த இளைஞரை பிடிக்க 20 ஆயிரம் போஸ்டர்கள்

300

 

காதலியைக் கொலை செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் தினேஷை பிடிக்க போலீஸாரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.

காதலியைக் கொலை செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் தினேஷை பிடிக்க போலீஸாரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.

காதலியை கொலை செய்த இளைஞரைப் பிடிக்க அவரது விவரங்கள் அடங்கிய 20 ஆயிரம் போஸ்டர்களை போலீஸார் ஒட்டியுள்ளனர்.

சென்னை சூளை சட்டண்ணன் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் அருணா (22). கீழ்ப்பாக்கம் தலைமைச் செயலக காலனியைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞரைக் காதலித்தார். கடந்த மார்ச் மாதம் 9 ம் தேதி தினேஷை அவரது வீட்டுக்கு பார்க்கச் சென்ற அருணாவை தினேஷ் கொலை செய்தார். அருணாவின் உடலை காரில் எடுத்துச் சென்று மறைக்க முயற்சி செய்தார். அப்போது குடியிருப்பின் காவலாளி பார்த்ததால் உடலுடன் காரை அப்படியே விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

தினேஷ் எங்கு சென்றார்? என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. செல்போன், ஏடிஎம் கார்டு போன்ற எதையுமே பயன்படுத்தாமல் மிகவும் உஷாராக இருக்கிறார். இந்நிலையில் அவரைப் பிடிக்க போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டரில் தினேஷை தேடப்படும் குற்றவாளி என்று குறிப்பிட்டு, புகைப்படத்துடன் அவரைப் பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. காதலியைக் கொன்றுவிட்டு தலைமறைவான தினேஷை பற்றி தகவல் தெரிந்தவர்கள் தலைமைச் செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் ராமசாமியை 97909 58282 என்ற செல்போன் எண்ணிலும், 044 23452704 என்ற காவல் நிலைய எண்ணிலும், 044 23452359 என்ற சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களிலும் தினேஷின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 20 ஆயிரம் போஸ்டர்களை ஒட்டியிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ், ரயில் நிலையங்களில் இந்த போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளன.

SHARE