இத்தாலியில் உள்ள வெப்ப நீருற்று, பல்வேறு மருத்துவ குணங்களுடனும் கண்கவரும் இயற்கை அதிசயமாய் திகழ்ந்து கொண்டிருக்கிறது.இத்தாலியின் Tuscany என்னும் இடத்தில் உள்ள சாடர்னியா பகுதியில் Cascate del Mulino என்ற இயற்கை வெப்ப நீருற்று ஒன்று அமைந்துள்ளது.
பண்டைய காலத்தில் இருந்தே அமைந்துள்ள இந்த இயற்கை வெப்ப நீரூற்றை ரோமானியர்கள் ரகசிய ஸ்பாவாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், வியாழன் கிரக கடவுளும், சனி கிரகமும் போரில் சண்டையிட்டு கொண்டிருந்தபோது, வியாழனின் ஆயுதம் பூமியில் விழுந்தபோது அந்த இடத்தில் வெப்ப நீருற்று உருவானதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த நீரூற்று உருவானதன் காரணம் என்னவாக இருக்கும் என்பது தெளிவாக தெரியாத போதும், இதனால் பயனடையும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை மட்டும் அளவிடவே முடியாதது என்பது குறிப்பிடத்தக்கது. அழகான வெண்பாறைகள் நடுநடுவே அமைந்திருக்கும் இந்த நீரூற்றில் இருக்கும் நீர் 37 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நீரில் அதிகளவில் உள்ள சல்ஃப்ரஸ் மினரல் எனப்படும் கந்தக கனிமங்கள் உடலில் உள்ள சில தோல் வியாதிகளை சரி செய்யும் சிகிச்சை பண்புகளை பெற்றுள்ளது. இந்த மருத்துவ குணங்களுடனும், கண்கவரும் இயற்கை அதிசயமாக விளங்கும் இந்த எழில்மிகு நீரூற்றுக்கு கட்டணம் எதுவும் இல்லை என்பதும் ஆண்டின் எல்லா நாட்களிலும் இங்கு வந்து செல்லலாம் என்பதும் பல காதல் ஜோடிகளை ஈர்க்கிறது. |