கார்த்திகாவின் காதலனை தேடும் குற்றத் தடுப்பு பொலிஸார்!

157
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யாழ்.வட்டுக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த கார்த்திகா என்ற 34 வயதுடைய பெண்ணின் மர்ம மரணம் குறித்து நேற்று வரை எவரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் அப்பெண்ணின் இரகசிய காதலனை கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸார் (சீ.சீ.டி) தேடி வருகின்றனர்.

குறித்த பெண்ணுடன் கடந்த மூன்று வருடங்களாக ஒன்றாக இருந்ததாக கூறப்படும் யாழ்.பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையே பொலிஸார் இவ்வாறு தேடுவதாகவும், அவர் குறித்த பெண்ணை கொலை செய்திருப்பதாக நம்புவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அவரே புறக்கோட்டை பஸ் நிலையத்துக்கு குறித்த பொதியை கொன்டுவந்து வைத்துள்ளமை தொடர்பிலும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரின் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின் படி, கொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் கார்த்திகா, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் தனது இரகசிய காதலன் கிருஷ்ண சதீஷுடன் கொழும்புக்கு வந்து வசித்து வந்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் இவர்கள் வசித்து வந்துள்ள நிலையிலேயே கடந்த ஜூலை 22ம் திகதி அவ்விருவரும் செட்டியார் தெருவில் உள்ள விடுதி ஒன்றில் வசிக்க வந்துள்ளனர்.

இதன் போது கேஸ் அடுப்பு, அரிசி, ஏனைய வீட்டு பலசரக்கு பொருட்களையும் அவர்கள் கொண்டுவந்துள்ளதுடன் ஒரு நாளைக்கு 700 ரூபா வாடகையின் அடிப்படையிலேயே அங்கு தங்கியுள்ளனர்.

கார்த்திகாவின் பெயரிலேயே அறை வாடகைக்கு பெறப்பட்டுள்ளதுடன் கிருஷ்ண சதீஷ் தன்னிடம் அடையாள அட்டை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இவர்கள் தங்கியிருந்த குறித்த லொட்ஜ்ஜின் அறையானது குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கடுமையாக பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் சில தடயங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலை வரை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்படாத நிலையில் குற்றத் தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் வெதிசிங்கவின் ஆலோசனைக்கு அமைய அதன் பொறுப்பதிகாரி பிரதன பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

SHARE