காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோம்! காலம் போனால் மீண்டும் வராது: ஈழத்தமிழர் இன்றே செய்வோம், இணைந்தே செய்வோம்

459

ஈழத் தமிழரின் அரசியல் விடுதலைக்காக நாம் கொடுத்துள்ள விலையை அறியாதோர் இல்லை. அதன் அறுவடைக்கான முதற்கட்டம் கனிந்து வந்துள்ளது.

இப்போதே அதைச் செய்யா விட்டால் கையில் கிடைத்தது வாய்க்கு எட்டாமல் போய்விடும். இந்தச் சந்தர்ப்பம் ஒருமுறை தான், இன்னொருமுறை வரவே வராது.

jvp-vne4

2009ல் லட்சக்கணக்கானோர் கொட்டும் பனியிலும் வாட்டும் குளிரிலும் பல மாதங்களாய் வீதிகளில் தவம் கிடந்தோம். அழுது புலம்பினோம். அப்போது எதுவும் கிட்டவில்லை. ஆனால் தற்சமயம் ஒரு சந்தர்ப்பம், ஒரு சர்வதேச விசாரணை வந்துள்ளது.

ஒக்ரோபர் 30 வரைதான், இன்னும் சில நாட்கள் தான் நமக்கான அந்தச் சந்தர்ப்பம் இருக்கும். இன்றே செயலில் இறங்குவோம்.

உலகில் மிகக் கொடுமையான முறையில் மானிடத்திற் கெதிரான அதிகப்பட்சக் குற்றங்களைப் புரிந்து எதிரியால் வெற்றிகொள்ளப்பட்ட அந்தப் போரினால் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக் கெதிராக கடந்த 5 வருடங்களாக நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எங்களுக்கு இருட்டில் கிடைத்த ஒரு குப்பி விளக்கைப் போல ஐநா மனித உரிமைச் சபையினால் முன்னெடுக்கப் படுகின்ற சர்வதேச விசாரணை உதவுகின்றது.

இந்தச் சந்தர்ப்பத்திலாவது ஆணவத்தாலும் பொறாமையாலும் எதிரியைத் தப்பவிட்டுவிட்டு எதிரிக்குச் சாதகமாக தமக்குள்ளேயே போராடிக்கொண்டிருக்கும் தமிழ்த் தலைமைகள், ஒன்றிணைந்து செயற்படா விட்டாலும் எதிரெதிராகச் செயற்படாதிருக்க வேண்டுமென்பதே ஒட்டு மொத்தத் தமிழினத்தின் பிரார்த்தனையாகும்.

இப்போது அப்படி நடந்து கொண்டிருப்பதை அவதானிக்கும் போது ஆனந்தமாக இருக்கிறது. சேரக்கூடிய அமைப்புகள் சேர்ந்தும் சேராதவர்கள் தனியாகவும் ஆக இந்தச் சர்வதேச விசாரணைக்கு சாட்சியங்களை முன்னிலைப் படுத்துவது அனைத்துத் தரப்பினரதும் இன்றைய அவசர அவசியச் செயற்பாடாகும்.

ஈழத்தமிழினம் தமது முழுமையான நேரத்தையும் சக்தி வளங்களையும் ஒக்ரோபர் மாத இறுதிவரைக்கும் இதிலேயே செலுத்தியாக வேண்டும்.

இதை எப்படிச் செய்யலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற பிரதான அமைப்புகளும் அந்தந்த நாடுகளில் இயங்கும் பல தமிழ் அமைப்புகளும் மக்களுக்குத் தெளிவு படுத்திக் கொண்டே இருக்கின்றார்கள்.

அவர்களின் அறிவுறுத்தல்களை உதவியாகக் கொண்டு முடியுமானவர்கள் நேரடியாக தாமாகவே விசாரணைக் குழுவிற்கு சாட்சியங்களைச் சமர்ப்பிக்கலாம்.

உதவி தேவையானவர்கள் அவரவர்களுக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி அவற்றைச் செய்யலாம். ஆனால் உண்மையான சாட்சியங்களை வழங்கக்கூடிய பலர் தமது விடயங்கள் மிக மிகத் தனிப்பட்ட இரகசித் தன்மை வாய்ந்தவை என்பதால் அதை யாரை நம்பிக் கொடுப்பது, கொடுத்தால் அதனால் தாம் வாழும் நாட்டில் தமக்கோ அல்லது தாயகத்தில் வாழும் தமது உறவுகளுக்கோ ஆபத்து வரலாம் என்று ஒதுங்கி இருக்கிறார்கள்.

சாட்சியம் அளிப்போரின் இரகசியத்தன்மை எவருக்குமே எக்காலத்திலும் வழங்கப்படாது என்ற உறுதியை விசாரணையாளர் கொடுத்துள்ளார்கள்.

கடந்த காலத்தில் அதுபோன்ற இரகசியங்கள் அப்படிப் பாதுகாக்கப் பட்டுள்ளன. அதை ஓரளவு பலரும் நம்பினாலும் விசாரணைக் குழுவிற்குப் போய்ச் சேரும் வழியில் யாராவது பாதகம் செய்து விடக்கூடும் என்று அஞ்சலாம். அதனாற்தான் நீங்கள் இன்னாரைத்தான் நம்ப வேண்டும் என்று நாங்கள் கூற முடியாது.

அதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் இத்தனை இலட்சம் உயிர்களையும் மதிப்பிட முடியாத சொத்தழிவுகளையும் தமிழினத்திற்கு கொடுத்த சிங்கள அரசிற்கெதிரான இந்த விசாரணையில் உங்கள் பெறுமதியான சாட்சியங்களைக் கொடுக்காமல் இருக்கும் அந்தத் துரோகத்தைச் செய்துவிடக் கூடாது என்பதே எமது தாழ்மையான வேண்டுதலாகும்.

கொலை செய்தல், காயப்படுத்தல், கற்பழித்தல், சட்டத்திற்குப் புறம்பான கைதுகள், சித்திரவதை செய்தல், கடத்தல், காணாமற் போகச் செய்தல், இன்னொருவர் சொத்தை அபகரித்தல், அல்லது அழித்தல், இன்னொருவர் தனது உரிமைகளைப் பயன்படுத்த விடாமற் தடுத்தல், அல்லது அவரது உரிமைகளைப் பறித்தல், சட்டத்திற்கு மாறாகச் செயற்படல், பயமுறுத்தல், உணவு அல்லது மருந்து இல்லாததால் பாதிக்கப்படல், இவை அனைத்துமே விசாரிக்கப்படக்கூடிய குற்றங்கள்தான்.

அவற்றை நாங்கள் சமர்ப்பிக்கலாம். ஆயினும் தன் பிரஜைகளைப் பாதுகாக்க வேண்டிய ஒரு அரசு தனது நாட்டின் ஒருபகுதி குடிமக்களை வதைக்கும் அல்லது சிதைத்து அழிக்கும் செயற்பாட்டில் வேண்டுமென்றே ஈடுபட்டால் அது மிகக் கடுமையான கொடுமையான குற்றமாகும்.

உண்மையில் ஈழத்தில் நடந்தது அதுதான். எனவே எல்லாக் குற்றங்களையும் நாம் சமர்ப்பிப்பதோடு அரசு வேண்டுமென்றே மேற்கொண்ட, தனது சொந்த குடிமக்களை அழிக்கும், சிதைக்கும் செயற்பாடுகளை நிரூபிப்பதில் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக வைத்தியசாலை பாடசாலை வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்கள் செறிவாக இருந்த இடங்கள் என்பவற்றைக் குறி வைத்துத் தாக்கிய சம்பவங்களை நிரூபிக்க வேண்டும். அதிலும் இரசாயனக் குண்டுகள் கொத்தணிக் குண்டுகள் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை மிக மோசமான போர்க் குற்றங்களாகும்.

இப்படியான குற்றங்கள் நிரூபிக்கப்படும் போது பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தினர் என்ற காரணத்தால்தான் அது நடைபெற்றது என்பது தெளிவாக்கப்ப்படும்போது அது இனவழிப்பு என்று முடிவாகும்.

இதைத்தான் இன்று ஒட்டுமொத்தத் தமிழினமும் எதிர்பார்க்கிறது. இவை எல்லாவற்றையும் மனதிற் கொண்டு அதிவிரைவாக நாம் செயற்பட வேண்டும்.

நேரடியாகப் பாதிக்கப்பட்டோர் அல்லது நேரடியாக சம்பவத்தைக் கண்டவர்கள் சாட்சியங்களை வழங்கலாம். அப்படியானவர்கள் ஏதேனும் காரணங்களால் அதைச் செய்ய முடியாத விடத்து.

சம்பவத்தை தெளிவாக அறிந்த, அவர்களோடு நெருங்கிய தொடர்புள்ள ஒருவர் அதைச் செய்யலாம். ஆனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டோர் அல்லது கண்டவர்கள் கொடுப்பது நிட்சயமாக வலுமிக்கதாக இருக்கும்.

2002 தொடக்கம் 2012 வரையான காலப்பகுதியில் நடந்தவற்றையே விசாரணை செய்ய இருந்தாலும் அக்காலப் பகுதியில் நடந்த சம்பவங்களோடு தொடர்புள்ளவையாகவோ அல்லது அக்காலச் சம்பவங்களின் பின்னணியை விளங்கிக் கொள்ள உதவக் கூடியவை என்றாலோ கூட அவற்றையும் சமர்ப்பிக்கலாம்.

சாட்சியங்களில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள்:-

53div-33

1. சாட்சியம் கொடுப்பவரின் விபரம்,அதாவது பெயர் ஆணா பெண்ணா வயது முகவரி தொலைபேசி அல்லது மின்னஞ்சல்.

2.நேரடியாகப் பாதிக்கப்பட்டவரின் முழு விபரங்கள். பெயர் ஆணா பெண்ணா சமயம் இனம் திருமண விபரம் கெற்பம் அடைந்தவரா?. போன்ற முழுமையான தகவல்கள். பலர் பாதிக்கப்பட்டால் முடிந்தவரை அனைவரதும் விபரங்கள். (சாட்சியம் அளிப்பவரே பாதிக்கப்பட்டவராகவும் இருக்கலாம்.)

3.சம்பவம் நடந்த திகதி இடம் சம்பவத்தின் முழுமையான தெளிவான விபரம். சொத்துகள் அழிக்கப் பட்டிருந்தால் அவற்றின் விபரம்.காயப்பட்டால் காயங்களின் தன்மை எப்படியான ஆயுதங்களால் தாக்கப்பட்டார் பாதிக்கப்பட்டவருக்கு யாரேனும் முன்னர் அச்சுறுத்தல் விடுத்தார்களா?.

4.யார் அந்தப் பாதிப்பை ஏற்படுத்தினார்கள்? முடியுமான வரை குற்றவாளியை அடையாளப் படுத்தல், அல்லது அடையாளப்படுத்தத் தேவையான ஆதாரங்கள், உதாரணமாக எத்திசையில் இருந்து தாக்கப்பட்டது. அத்திசையில் யார் நிலைகொண்டிருந்தார்கள் எவ்வகையான சீருடையில் இருந்தார்கள் என்ன மொழி பேசினார்கள் போன்ற விபரங்கள்.

5. சம்பவம் பற்றி இதுவரை யார் யாருக்கு அறிவிக்கப்பட்டது? அவற்றின் பெறுபேறுகள் என்ன?. அறிவிக்கப்படா விட்டால் அதற்கான காரணம் என்ன?.

இப்படியான சாட்சியத்தைப் பதிவு செய்வதற்கான படிவங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றையும் விரும்பினால் பயன்படுத்தலாம். ஆனால் பலரும் ஒரே மாதிரியாக சமர்ப்பிக்காமல் தனித்துவமான முறையில் எழுதிச் சமர்ப்பித்தால் அவர் வேறொருவர் தூண்டுதல் இல்லாமல் சுயமாகவே வழங்கினார் என்ற நம்பகத் தன்மை அதிகமாக இருக்கும்.

உங்கள் சாட்சியத்தை ஒரு சமாதான நீதவானோ சட்டத்தரணியோ வேறு பிரமுகரோ அத்தாட்சிப்படுத்தி கையொப்பமிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஆனால் அது அவசியம் இல்லை.

இந்த அடிப்படையில் நீங்களாகவே உங்கள் சாட்சியத்தைத் தயாரித்து கையொப்பமிட்டு அதை ஸ்கன் (scan) பண்ணி ” oisl_submissions@ohchr.org ” என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடலாம்.

அல்லது ” OISL, UNOG-OHCHR, 8-14 Rue de la Paix, CH-1211, Geneva 10, Switzerland.” என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். நீங்கள் விரும்பினால் மட்டும் உங்களுக்கு மிக நம்பிக்கையான இப்பணியில் ஈடுபடும் ஒரு பொது மையத்திடம் அதன்முளுமையான அல்லது அடையாளம் நீக்கப்பட்ட பகுதியை கொடுத்தால் இனம் சார்ந்த ஒட்டுமொத்த தகவல் சேகரிப்புக்கு அது உதவும்.

வி. வின் மகாலிங்கம்

TPN NEWS

SHARE