கால்இறுதியில் பிரேசில் நுழையுமா? சிலியுடன் மோதல்

476

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தது. ‘நாக்அவுட்’ சுற்றுக்கு பிரேசில், மெக்சிகோ, நெதர்லாந்து, சிலி, கொலம்பியா, கிரீஸ், கோஸ்டாரிகா, உருகுவே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, நைஜீரியா, ஜெர்மனி, அமெரிக்கா, பெல்ஜியம், அல்ஜீரியா ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன.

நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதில் தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற வேண்டியது தான். இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பிரேசில்– சிலி அணிகள் மோதுகின்றன.

பிரேசில் அணி ‘லீக்’ ஆட்டத்தில் குரோஷியா, கேமரூனை வீழ்த்தியது. மெக்சிகோவுடன் ‘டிரா’ செய்தது. சிலி அணி நடப்பு சாம்பியன் ஸ்பெயினை வீழ்த்தி இருந்தது.

சிலி அணி பிரேசிலுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி ‘லீக்’ போட்டிகளில் தாக்குதல் ஆட்டத்தை அருமையாக செயல்படுத்தியது.

பிரேசில் அணி நட்சத்திர வீரர் நெய்மரை அதிகம் நம்பி உள்ளது. உள்ளூரில் விளையாடும் அந்த அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று கால் இறுதியில் நுழையுமா? என்று அந்நாட்டு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

1998, 2010–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் 2–வது சுற்றில் பிரேசில் அணியிடம் தோற்றதற்கு பழிவாங்கும் முனைப்பில் சிலி அணி இருக்கிறது. அந்த அணி எளிதில் சரண்டையாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

உலக கோப்பை கால்பந்து நாக்அவுட் சுற்றில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு கொலம்பியா– உருகுவே அணிகள் மோதுகின்றன. உருகுவே அணி ‘லீக்’ ஆட்டத்தில் 2 போட்டியில் வென்றது. ஒரு டிரா செய்தது.

இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் உருகுவே வீரர் சுராஸ் இத்தாலியின் செலினியை கடித்ததால் 9 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டார். அவர் இல்லாததால் உருகுவே அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை. அதை ஈடுகட்ட உருகுவே அணி வியூகம் அமைத்து வருகிறது.

கொலம்பியா அணி ‘லீக்’ ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. 3 ஆட்டத்திலும் (கிரீஸ், ஐவேரி கோஸ்ட், ஜப்பான்) வென்றது. இதனால் அந்த அணியை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.

SHARE