கிரவல் தேவைக்கு வீதியையுமா அகழ்வார்கள்? முறைப்பாடுகளை தொடர்ந்து ரவிகரன் நேரில் பார்வை.

457

புதுக்குடியிருப்பு பிரதேசத்திலேயே இன்னும் பல வீதிகள் திருத்தப்படவேண்டிய நிலையில் உள்ளபோது அவற்றை எல்லாம் விட்டுவிட்டு வேறு மாவட்டங்களுக்காய் கிரவல் அள்ளப்படுவதையும் வீதிகளையே சிதைத்து கிரவல் தோண்டுவதையும் நிறுத்தி தாருங்கள் என புதுக்குடியிருப்பு வாழ் மக்கள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் முறையிட்டிருந்தனர்.
நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த பகுதிக்கு விரைந்த ரவிகரன், அளவுக்கு அதிகமாக கிரவல் அகழப்பட்டு இருப்பதையும் வீதியும் சேர்ந்து அகழப்பட்டிருப்பதையும் பார்த்து உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
புதுக்குடியிருப்பு – கேப்பாபிலவு வீதியில் ஊடறுத்துச்செல்லும் கள்ளியடி என்ற இடத்தில் இருந்து காட்டுஅந்தோனியார் கோயிலுக்கு செல்லும் பாதையின் பக்கங்கள் மிகவும் அதிகமாக தரமான கிரவல் வளத்தைக்கொண்ட பகுதியாகும்.
இப்பகுதியில் தற்போது, அளவுக்கு அதிகமாக கிரவல் முறையற்ற விதத்தில் எடுக்கப்படுவதாகவும் ஒரு சில இடங்களில் பாதையின் பகுதிகள் கூட முற்றாக அகழப்பட்டு உள்ளதாகவும் மக்கள் விசனப்பட்டுள்ளனர்.
கிரவல் எடுக்கக்கூடிய அளவில் குறித்த பிரதேசங்களில் இருந்து எடுக்கலாம். இங்கோ எமது பிரதேசத்தையே சீர்குலைக்கும் வகையில் கிரவல் அகழப்பட்டு எடுத்துச்செல்லப்படுகிறது. புதுக்குடியிருப்பு பிரதேசத்திலேயே இன்னும் பல வீதிகள் முழுமையாக திருத்தப்படாமல் இருக்கின்றன. எமது பிரதேசத்திலேயே கிரவல் தேவைகள் இருக்கும் போது வெளி மாவட்டங்களுக்காக கிரவல் அள்ளும் அனுமதிகளை ஏன் வழங்கவேண்டும் என்றும் தமது வருத்தங்களை ரவிகரனிடம் தெரிவித்ததாக அறியமுடிகிறது.
முறைப்பாட்டுகளை அடுத்து, முறையிட்ட ஒருசிலருடன் குறித்த இடங்களை பார்வையிட தீர்மானித்து, மக்களின் முறைப்பாட்டு பகுதிகளை ரவிகரன் பார்வையிட்டார். மக்களின் முறைப்பாடுகளுக்கேற்ப சீரழிக்கப்பட்ட விதத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச அக்கிரவல் பகுதிகள் காணப்பட்டதையும் வீதியின் பகுதிகள் கூட அகழப்பட்டு இருப்பதையும் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் கிட்டத்தட்ட 30 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பில் இவ்வாறான சீரழிப்பு-கிரவல் அகழ்வு நடைபெற்று அவை வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லப்படுவதாகவும் முறையிட்டனர்.
மேலும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மட்டும் UN கபிடெற் (UN Habitat) நிறுவனத்தால் உள்ளக வீதிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 58000000.00 (5 கோடியே 80 இலட்சம்) நிதியில் 50 வீதமான வேலைகள் மாத்திரமே முடிவுற்ற நிலையில், மிகுதி வேலைகளுக்கு தரமான கிரவல்களாக இருக்கும் மேற்படி இடங்களில் அகழக்கூடியவற்றை எடுத்து இப்பிரதேசத்தின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் அடுத்த மாவட்டத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்து நிதி சம்பாதிக்கும் தென்னிலங்கை நிறுவனங்கள் தொடர்பிலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் தொடர்பிலும் கனிய வளப்பகுதி, பிரதேச செயலகம் என இதற்கு பொறுப்பானவர்கள் பதில் கூறவேண்டும் என்று மக்கள் கொந்தளிப்பதாக ரவிகரன் தனது கருத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கிரவல் அகழும் போது எல்லைகளை தாண்டி ஆழமாகவும் வீதிகள் உட்பட தோண்டப்படுவதும் கண்டிக்கத்தக்கது. எல்லாவற்றையும் தாண்டி இயற்கையை சீரழிக்கும் விதத்தில் அகழப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதன்று. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் நிச்சயம் பதில் கூறியே ஆக வேண்டும்.
குறித்த இடங்களை மாலை நேரம் பார்வையிட்டதால் இது தொடர்பில் விவசாய அமைச்சரின் கவனத்திற்கு நேற்றைய தினமே எடுத்துச்செல்ல முடியவில்லை. இன்று இது தொடர்பில் நேரடியாக வடமாகாணத்திற்கான விவசாய மற்றும் கனியவள அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக மக்களிடம் உறுதியளித்து திரும்பியதாக ரவிகரன் அவர்கள் தெரிவித்தார்.

      

unlawful gravel mining
SHARE