கிழக்கின் உதயம் மூலம் 2014ம் ஆண்டு பொருளாதார அமைச்சுக்கு 250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் கிராமங்களுக்கு மொத்தம் 224.25 மில்லியனும், தமிழ் மக்களின் கிராமங்களுக்கு 7.15 மில்லியனும் ஒதுக்கியுள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
பொருளாதார அபிவிவிருத்தி அமைச்சின் ஒதுக்கீட்டு வேலை திட்டங்கள் பெரும்பாலானவை பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்திலோ மற்றும் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திலோ ஆராயப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவது மிகக் குறைவாகும். உண்மையிலே கிராம மட்டத்தில் உள்ள அமைப்புக்களின் மூலம் ஆராயப்பட்டு பின் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்பவற்றில் ஆராயப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் போது அது மக்களுக்கு பயனளிக்கும் ஒரு திட்டமாக செயற்படும்.
ஆனால் அவ்வாறு இல்லாது பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் தாங்கள் விரும்பியபடி தமது பகுதி, தமது ஆதரவாளர்கள் பகுதி என தமது அரசியல் சுயலாபத்தின் நிமிர்த்தம் திட்டங்களை வழங்குகின்றனர்.
அரச அரசியல் வாதிகளுக்கு பயந்த அதிகாரிகள் தமது பதவியை பாதுகாக்கவும், எதிர்காலத்தில் பதவி உயர்வை பெறவும் உண்மையான கடமையை புரியாது இவ் அரச அரசியல் வாதிகளின் திட்டங்களுக்கு தலையாட்டுகின்றனர். இவ்வாறானால் இவ்வமைச்சின் செயற்பாடுகள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கோ, இம்மக்களின் கிராம அபிவிருத்திக்கோ எவ்வாறு பயனுள்ளதாக அமைய முடியும்.
கிட்டத்தட்ட ஒரு மாவட்டத்தில் ஒரு வருடத்தில் 6 பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு வருடத்தில் ஒன்றிரண்டு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமும், ஒரு சில பிரதேசங்கள் ஒன்று இரண்டு பிரதேச அபிவிருத்திக் கூட்டங்களும் நடைபெறுகின்றது. சில பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறாமலேயே பிரதேச தவிசாளரால் திட்டங்கள் உறுதிப்படுத்தப்படுகின்றது.
கிழக்கின் உதயம் மூலம் 2014ம் ஆண்டு பொருளாதார அமைச்சுக்கு 250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 159 மில்லியன் காத்தான்குடிக்கும், ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்கு 30.6 மில்லியனும், ஏறாவூர் நகரத்துக்கு 9.8 மில்லியனும், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு 4.5 மில்லியனும், மண்முனைப்பற்று ஆரையம்பதிக்கு 20.35 மில்லியனும், ஏறாவூர் பற்று செங்கலடிக்கு 2.6 மில்லியனும், மண்முனை வடக்கு மட்டக்களப்புக்கு 17.2 மில்லியனும், மண்முனை தென்எருவில் பற்று களுவாஞ்சிக்குடிக்கு 1.55 மில்லியனும், வவுணதீவுக்கு 1.1 மில்லியனும், பட்டிப்பளைக்கு 0.5 மில்லியனும் (05 லட்சம் ரூபாய்) ஒக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த மட்டில் 74 வீதம் தமிழ் மக்களும், 25 வீதம் முஸ்லிம் மக்களும் வாழுகின்றோம். இதில் ஐந்து பிரதேச செயலக பிரிவில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, கோறளைபற்று மத்தி ஓட்டமாவடி, ஆரையம்பதி ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து முஸ்லிம் கிராமங்களுக்குமாக மொத்தம் 224.25 மில்லியன் பயன்படுத்தப்படுகின்றது.
பொருளாதார பிரதியமைச்சர் கௌரவ.ஹிஸ்புல்லா அவர்கள் பிரதேச அபிவிருத்தி தலைவராக உள்ள மண்முனைப்பற்று பிரதேசத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் இருந்த போதும் முஸ்லிம் மக்களை மாத்திரம் கொண்ட 24 கிராமங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் 8400 பேர் முஸ்லிம் மக்களும், 25490 பேர் தமிழ் மக்களும் வசிக்கின்றனர். இத்தமிழ் மக்களுக்கு கிழக்கின் உதயம் மூலம் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.
ஏனைய தமிழ் பிரதேச செயலக பிரிவுகளான மண்முனை வடக்கு மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிக்குடி, பட்டிப்பளை, வவுணதீவு, வாகரை, ஏறாவூர்பற்று செங்கலடி ஆகியவற்றுக்கு மொத்தமாக 25.75 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும் வாகரைப் பிரதேசத்தில் ஒதுக்கப்பட்ட நிதி 2.6 மில்லியனும் முஸ்லிம்களை மாத்திரம் கொண்ட கேணிநகருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மிகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வாகரை பிரதேசத்தில் 23260 பேர் தமிழ் மக்கள் வசிக்கின்ற நிலையில் அவர்களுக்கு எதுவும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் 1025 முஸ்லிம்களைக் கொண்ட கிராமத்துக்கு கிழக்கின் உதயம் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர்பற்று செங்கலடிக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2.8 மில்லியனும் 03 முஸ்லிம் கிராமத்துக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது இக்கிராமங்களின் வசிக்கும் 313 முஸ்லிம்களின் நலன்கருதி இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மண்முனை வடக்கு மட்டக்களப்பு பகுதிக்கு ஒதுக்கப்பட்ட 17.2 மில்லியனின் 4 மில்லியன் மாத்திரமே 90283 பேர் தமிழ் மக்களை கொண்ட தமிழ் கிராமத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 13.2 மில்லியன் 4599 பேரைக் கொண்ட முஸ்லிம் கிராமத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக நோக்கும் போது மாவட்ட மக்கள் தொகையில் 25 வீதம் உள்ள முஸ்லிம் மக்களின் கிராமத்துக்கு 242.85 மில்லியனும், மாவட்டத்தில் 74 வீதம் தமிழ் மக்களின் கிராமங்களுக்கு 7.15 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
உண்மையிலே கடந்த யுத்த சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவு, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவு மற்றும் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவு என்பவற்றுக்கு கிழக்கின் உதயத்தில் எந்நிதியும் ஒதுக்கப்படவில்லை.
கௌரவ உறுப்பினர் அவர்களே!
மட்டக்களப்பு மாவட்டம் வறுமை சுட்டி அடிப்படையில் மிகவும் வறிய மாவட்டமாக அதாவது 19.4 வீதம் வறுமை கொண்ட மாவட்டமாக உள்ளதை சகலரும் அறிவர். அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை சுட்டி அடிப்படையில் மிகவும் வறுமை கோட்டின் கீழ் முதல் ஒன்று தொடக்கம் எட்டு வரை உள்ள கிராமங்களைக் கொண்ட பிரதேசமாக கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசம் உள்ளது. ஆனால் இக்கிராமத்துக்கு எதுவும் கிழக்கின் உதயத்தில் ஒதுக்கப்படவில்லை. அவ்வாறானால் எவ்வாறு வறுமையை ஒழிக்க முடியும். எவ்வாறு அரசாங்கம் மக்கள் மனங்களை வெல்ல முடியும் சிந்தியுங்கள். கிழக்கின் உதயம் என்ற சொற்பதம் எவ்வாறு வறுமையை ஒழிக்க உதவ முடியும்.
பிரதேச அபிவிருத்திக் குழு இல்லாமல் அதன் தலைவர் இல்லை, மாவட்ட அபிவிருத்திக் குழு இல்லாமல் அதன் தலைவர் இல்லை. இது எதை காட்டுகின்றது என்றால் பொருளாதார அமைச்சின் பல திட்டங்களின் நிதி வழங்கும் செயற்படுத்தும் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதைக் காட்டுகின்றது.
இன்று பன்முக நிதி என்ற வகையில் 5 மில்லியன் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்படுகின்றது. ஆனால் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினருக்கு அதற்கு மேலாக விசேட திட்டம் என்ற வகையில் 25 மில்லியன் ஒதுக்கப்படுகின்றது. அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 மில்லியன் ரூபா நிதி வேலைத் திட்டத்தையும், எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 5 மில்லியன் ரூபா வேலைத் திட்டத்தையும் ஒரு வருடத்தில் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இது ஒரு ஜனநாயக நாட்டில் மேற்கொள்ளக் கூடிய ஒரு செயற்பாடா? என பொருளாதார அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் எதிர்கட்சி, ஆளும்கட்சி என்ற பாகுபாடு இன்றி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வேளை பொருளாதார அமைச்சால் 2014ம் ஆண்டு ஜனாதிபதியின் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு விசேட திட்டங்களின் மூலம் ஒதுக்கிய 100 மில்லியனில் அவர் ஒதுக்கிய 5 பிரதேச செயலக பிரிவில் மிகக் குறைவாக தொகையான 11 மில்லியனை கிரான் எனப்படும் கோறளைப்பற்று தெற்கு பிரதேசத்துக்கு அதாவது மிகவும் வறுமையை வெளிப்படுத்தும் பகுதிக்கு ஒதுக்கியுள்ளார். இவ்வாறானால் எவ்வாறு வறுமை நீங்கும்.
அதுதவிர அரச பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 25 மில்லியன் வீதம் வழங்கப்படுகின்றது. அது அவர்கள் சார்ந்த இனத்துக்கே பங்கிடப்பட்டுள்ளது. கௌரவ அமைச்சர் பசீர் சேகுதாவூத் அவர்கள் மாத்திரமே தமிழ் மக்கள் வாழும் பகுதிக்கு சிறுதொகை நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிகின்றேன். இதற்கு இச்சபையின் வைத்து அவருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
இல பிரதேசம் கிழக்கின் உதயம் வீதம் மில்லியன்
1. காத்தான்குடி 159 மில்லியன்
2. மண்முனை வடக்கு மட்டக்களப்பு 17.2 மில்லியன்
3. மண்முனைப்பற்று ஆரையம்பதி 20.35 மில்லியன்
4. மண்முனை தென்எருவில் பற்று களுவாஞ்சிக்குடி 1.55 மில்லியன்
5. வெல்லாவெளி –
6. பட்டிப்பளை 0.5 மில்லியன்
7. வவுணதீவு 1.1 மில்லியன்
8. வாகரை 2.6 மில்லியன்
9. கோறளைப்பற்று தெற்கு கிரான் –
10. கோறளைப்பற்று வாழைச்சேனை –
11. ஏறாவூர் நகரம் 9.8 மில்லியன்
12. ஏறாவூர் பற்று செங்கலடி 2.8 மில்லியன்
13. கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி 4.5 மில்லியன்
14. கோறளைப்பற்று மத்தி ஓட்டமாவடி 30.6 மில்லியன்
15. மொத்தம் 250 மில்லியன்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தமது செயற்றிட்டங்களின் ஒதுக்கீடுகள் நடைபெறும் போது எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சி மாகாண சபை உறுப்பினர்கள், எதிர்கட்சி பிரதேச சபை உறுப்பினர்களை இணைப்பதில்லை. ஒரு நாட்டின் வரவு செலவுத் திட்டத்தின் விவாதத்தில் எதிர்கட்சியின் பங்கு இன்றியமையாதது போன்று பொருளாதார அமைச்சின் ஒதுக்கீடுகள் மாவட்ட மட்டத்தில் நடைபெறும் போது எதிர்கட்சியின் மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் பெறப்பட வேண்டும். இது மக்களுக்காக நடைபெறும் திட்டம் இதில் மக்கள் பிரதிநிதிளான எவரும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.
அவ்வாறானால் இந்நிதி ஒதுக்கீடு வறிய மக்களின் மேன்பாட்டுக்கு இன்றி தங்களது அரசியலை பலப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுவதாக அமைந்து விடும். உண்மையான வறிய மக்கள் இதன் பலாபலனை அனுபவிக்க முடியாது.
மாகாண சபையின் கீழ் உள்ள திட்டங்களை எல்லாம் சட்டத்தின் மூலம் சுவீகரிக்க பொருளாதார அமைச்சிடம் ஒப்படைத்த மத்திய அரசு அம்மாகாணத்தில் எதிர்கட்சி மாகாண சபை உறுப்பினர்களின் எவ்வித ஆலோசனை, வழிகாட்டலையும் தமது நிதியை மாவட்டத்திற்கு ஒதுக்கும் போதும், அதனை அமுல்படுத்தும் போதும் கடைப்பிடிப்பதில்லை.
சுற்று நிருபத்தில் மாத்திரம் ஒவ்வொரு இடத்திலும் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்களின் ஆலோசனை பங்களிப்பை பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இதனை பின்பற்றுவதாக இல்லை.
உண்மையிலே திட்டங்கள் பிரதேச அபிவிருத்திக்குழு, மாவட்ட அபிவிருத்திக் குழு என்பவற்றில் எதுவும் ஆராயப்படுவதில்லை. திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு முடிந்த பின்பே மாவட்ட அபிவிருத்தி குழுவில் வாசிக்கப்படுகின்றது. பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் ஒரு சில பிரதேசங்களில் வருடத்தில் ஒன்று நடைபெறுகின்றது.
ஆனால் பல பிரதேச செயலக பிரிவில் நடைபெறுவதில்லை. சகல முடிவுகளையும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர், பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் போன்றோரே முன் மொழிந்து நடைமுறைப்படுத்துகின்றனர்.
எனவே பொருளாதார அமைச்சு தமது செயற்பாடுகளை வெளிப்படைத் தன்மையுடனும், வறிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் நோக்குடனும் செயற்பட முன்வர வேண்டும்.
இன்று இவ்வமைச்சின் கீழ் நடாத்தப்படும் பெரும்பாலான திட்டங்களுக்கு அரசாங்க அரசியல்வாதிகள் 10 வீதம் பெறுகின்றனர். லஞ்சம், குத்தகை ஒப்பந்தகாரர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் என பல நிதியை பங்கிட அரைவாசிக்கு கீழ்பட்ட நிதியிலே திட்டம் நடைபெறுகின்றது. திட்டத்திற்கு கையொப்பமிடும் கிராம அமைப்பு தலைவர், செயலாளர் போக்குவரத்துக்காக 1000 ரூபா முதல் 2000 ரூபா வரை இவர்களால் வழங்கப்படுகின்றது.
கௌரவ உறுப்பினர் அவர்களே!
அரசாங்க புள்ளி விபர திணைக்கள வெளியீட்டின் படி 2012 தொடக்கம் 2013 இன் வீட்டுத்துறை வருமான செலவு ஆய்வறிக்கை (HIES)யின் படி இலங்கையின் வருமான வீதமானது சுமார் 6 வீதமாக உள்ள போதும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மன்னார் மாவட்டம் 20.1 வீதத்திலும், முல்லைத்தீவு 28.8 வீதத்திலும், மட்டக்களப்பு 19.4 வீதத்திலும், கிளிநொச்சி 12.7 வீதத்திலும் வறுமை நிலை காணப்படுகின்றது. ஆனால் ஹம்பாந்தோட்டையானது வறுமை வீதத்தில் 4.9 வீத்திலும் காணப்படுகின்றது.
இந்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணம் யுத்த சூழலால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது என கூறினாலும், இவ்வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விசேடமாக எவ்விதமான செயற்திட்ட ஒதுக்கீடுகளும் வழங்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி ஆண்டாண்டு காமாக இந்த நாட்டுக்காக தமது குருதியை வியர்வையாக சிந்தி அன்னிய செலவாணியை நாட்டிற்கு உழைத்து வழங்கும் எமது உடன் பிறப்புக்களான மலையக மக்களின் வாழ்வும் பரிதாப நிலையில் உள்ளது.
1980ம் ஆண்டு நாட்டில் பாரிய பொருளாதார சமூக நல கட்டமைப்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டது. பாடசாலைகள், குடியிருப்புக்கள், பெருந்தெருக்கள், தொழில் நுட்பக் கல்லூரிகள் போன்றவைகள் ஏற்படுத்தப்பட்டன. இதற்கு ஆடைத் தொழிற்சாலைகளோ அல்லது சுற்றுலாத் துறையோ அல்லது இரத்தினக்கல் ஏற்றுமதி மூலமோ வருமானத்தை தரவில்லை என்பவற்றுக்கும் காரணம் தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதி மூலம் கிடைத்த வெளிநாட்டு சம்பாத்தியங்களே!
கௌரவ உறுப்பினர் அவர்களே!
கடந்த யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசிய உதவியாக வழங்கிய 50000 வீடுகள் இந்தியா வழங்கியது. அதில் 2000 வீடுகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஆரம்பமாக ஒதுக்கப்பட்டன. இந்தியா தமது வீடு வழங்கும் செயற்றிட்டத்தை எதுவித அரசியல் தலையீடும் இன்றி செயற்படுத்துவதாக எங்களுக்கு உறுதியளித்தது. ஆனால் இவ்வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும்பாலும் வழங்கப்படாமல் அரசாங்க அரசியல் வாதிகளின் ஊர்களிலும், அவர்களின் ஆதரவாளர்கள், உறவினர்கள் போன்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் அரசாங்க மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தனின் ஊரில் வழங்கப்பட்டுள்ளது.
இக்கிராமம் யுத்தத்தாலோ அல்லது சுனாமியாலோ பாதிக்கப்படவில்லை. ஏனெனில் எனது கிராமத்தின் அருகிலேயே இது உள்ளது.