கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை நேற்று நீங்கி மீண்டும் புதிய அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

354

 

 

கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை நேற்று நீங்கி மீண்டும் புதிய அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கிய அமைச்சுப் பதவிகளில் ஒன்றான கல்வி அமைச்சு உட்பட 2 அமைச்சுக்களும், உப தவிசாளர் பதவியும் வழங்கி நேசக்கரம் நீட்டியுள்ளது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். முன்னர் நியமிக்கப்பட்டிருந்த அமைச்சரவையில் சிறு மாற்றங்களை செய்து புதியச அமைச்சரவை நேற்று நியமிக்கப்பட்டது. அவை வருமாறு:- 1. ஹாபீஸ் நஸீர் அஹமட் (மு.கா.) – கிழக்கு மாகாண முதலமைச்சர், நிதி, திட்டமிடல் சுற்றுலா மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் 2. சி. தண்டாயுதபாணி (கூட்டமைப்பு) – கிழக்கு மாகாண கல்வி, கலாலாசார விளையாட்டு அமைச்சர் 3. கி.துரைராஜசிங்கம் (கூட்டமைப்பு) – கிழக்கு மாகாண விவசாய, கிராமிய அபிவிருத்தி அமைச்சர் 4. எம்.ஐ.எம். மன்சூர் (மு.கா.) – கிழக்கு மாகாண சுகாதார, சுதேச, கூட்டுறவு மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் 5. – ஆரியவதி கலபதி (ஐ.ம.சு.மு.) – காணி, வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நெடுஞ்சாலைகள் அமைச்சர் அதேவேளை, கிழக்கு மாகாண சபையின் தவிசாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர் சந்திரதாச கலபதி நியமிக்கப்பட்டுள்ளதுடன், பிரதித் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் இந்திரகுமார் பிரசன்னா நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று முற்பகல் 11 மணிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவின் காரியாலயத்தில் ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கின் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் உட்பட மாகாணசபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கலந்துகொண்டனர். இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பதற்கு தாம் வழங்கியிருந்த ஆதரவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆறு உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம் வாபஸ் பெற்றிருந்தனர்.

இவ்வாறு, கிழக்கு மாகாண சபை முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் விமல வீர திஸாநாயக்க, முன்னாள் வீதி, நீர்ப்பாசன அமைச்சர் உதுமாலெப்பை மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான ஜயந்த விஜயசேகர, எம்.எல்.அமீர், டி.வீரசிங்க மற்றும் ரி.எம்.ஜெயசேன ஆகியோர் திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வாபஸ் பெறுவதாக அறிவித்ததுடன் தமது வாபஸ் கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டீன் பெர்னாண்டோவுக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

இதனால், கிழக்கின் ஆட்சியைத் தொடர்ந்தும் மு.கா. தக்க வைத்துக்கொள்ள வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு கிடைக்கப்பெற வேண்டிய நிலையில் இருந்தது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கையேந்தும் நிலையில் மு.கா. தள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்றுமுன்தினம் மாலை திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கிழக்கில் ஆட்சியமைக்க ஆதரவு கேட்டிருந்தனர். எனினும், கூட்டமைப்பு இந்த விடயத்தில் மு.கா.வுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்தனர்.

அண்மையில் கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சராக முன்னாள் தவிசாளர் ஆரியவதி கலபதியும், முன்னாள் சுகாதார அமைச்சரான மன்சூர் வீதி அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று இந்த அமைச்சுப் பதவிகள் இரத்துச் செய்யப்பட்டு புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE