குஜராத் மாநிலத்தில் 2000 முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டதற்கு நரேந்திரமோடியே காரணமாக இருந்தார்

541

பெருமளவிலான இந்தியர்கள் நரேந்திர மோடியை நவீன மோசஸாக முன்னிறுத்துகிறார்கள். வீதிகளில் பாலாறும் தேனாறும் ஓடுமாறு செய்யும் வல்லமை அவருக்கு உண்டு என்றும் அடுத்த பிரதமராக வருவதற்கு மோடியே சரியான தேர்வு என்றும் அவர்கள் சொல்கிறார்கள். பாரதீய ஜனதா காட்சியும் ஆர்எஸ்எஸ்ஸும் மட்டும் இதைச் சொல்லவில்லை. படித்தவர்கள் என்று அறியப்பட்ட இளைஞர்களும்கூட திரு மோடியின் பிரசாரத்தால் கவரப்பட்டு இப்படிச் சொல்கிறார்கள்.

, 2002ல் குஜராத்தில் கொல்லப்பட்ட 2000 முஸ்லிம்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினேன். குஜராத்தில் முஸ்லிம்கள் எப்போதுமே பிரச்னையை ஏற்படுத்துபவர்கள்தாம், 2002க்குப் பிறகு அவர்கள் அடக்கப்பட்டுவிட்டார்கள், அப்போதிலிருந்து அமைதியே திகழ்கிறது என்று அவர் பதிலளித்தார். நீதியோடு கிடைக்காத அமைதி மயான அமைதியே என்று அவரிடம் தெளிவுபடுத்தினேன். கோபம் கொண்ட அவர் தன் இருக்கையை உடனே மாற்றிக்கொண்டுவிட்டார். உண்மை என்னவென்றால் இன்று குஜராத்தில் முஸ்லிம்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். 2002 பயங்கரங்கள் குறித்து வாய் திறந்தால் தாக்கப்படுவோம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இந்தியா முழுவதையும் எடுததுக்கொண்டால், முஸ்லிம்கள் (200 மில்லியனுக்கும் அதிகமானவர்கள்) மோடிக்கு எதிரானவர்களே. விதிவிலக்காகச் சிலர் முரண்படலாம்.

modi-3

‘தன்னிச்சையான’ எதிர்வினை  குஜராத்தில் நடைபெற்றது கோத்ராவில் 59 இந்துக்கள் கொல்லப்பட்டதற்கான ‘தன்னிச்சையான’ எதிர்வினை என்கிறார்கள் மோடி ஆதரவாளர்கள். நான் இந்தக் கதையை நம்பவில்லை. முதலில், கோத்ராவில் என்ன நடந்தது என்பது இன்றளவும் புதிராகவே இருக்கிறது. இரண்டாவதாக, கோத்ரா கொலைகளோடு தொடர்புடையவர்கள் நிச்சயம் அடையாளம் காணப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். ஆனால், இந்தத் தாக்குதலைக் காரணம் காட்டி குஜராத்தில் உள்ள எல்லா முஸ்லிம்கள்மீதும் தாக்குதல் தொடுத்ததை எப்படி ஏற்கமுடியும்? குஜராத்தில் முஸ்லிம்கள் வெறும் 9 சதவிகிதம்தான், மிச்சமுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். இந்நிலையில், 2002ல் முஸ்லிம்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன, முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், மற்ற பல கொடூரங்கள் அவர்கள்மீது நிகழ்த்தப்பட்டன.

ஜெர்மனியில் நவம்பர் 1938ல் ஒட்டுமொத்த யூதர்களும் தாக்கப்பட்டனர், பலர் கொல்லப்பட்டனர். அவர்களுடைய வழிபாட்டுத் தலங்கள் கொளுத்தப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டன. பாரிசில் ஒரு ஜெர்மானிய அதிகாரி யூத இளைஞன் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டதன் விளைவாக இது நடந்தது. அப்போதைய நாஜி அரசு இந்நிகழ்வை ‘தன்னிச்சையான’ எதிர்வினை என்றுதான் வருணித்தது. உண்மையில் நாஜிக்கள்தான் திட்டமிட்டு இந்தக் கலவரத்தை அரங்கேற்றினார்கள். 2002 குஜராத் இதைத்தான் எனக்கு நினைவுபடுத்துகிறது.  வரலாற்று ரீதியான வளர்ச்சியின் அடிப்படையில் பார்த்தால் இந்தியா என்பது பெருமளவில் குடியேறிகளின் நாடு. மிகப் பெரும் வேற்றுமைகள் நிறைந்த நாடும்கூட. இந்நாடு ஒன்றுபட்டு இருக்கவேண்டுமானால், வளர்ச்சியை நோக்கி நடைபோடவேண்டுமானால் அதற்கு ஒரே வழி, மதச்சார்பின்மைதான். அனைத்து சமூகங்களையும் பிரிவுகளையும் சேர்ந்த மக்களை ஒன்றுபோல் மதிப்பதுதான். பேரரசர் அக்பரின் அணுகுமுறை இதுதான். மதச்சார்பற்ற அரசியலமைப்புச் சட்டத்தை வழங்கிய நமது தேசத் பிதாக்களின் (நேருவும் அவருடன் இருந்தவர்களும்) அணுகுமுறையும் இதுவேதான். இதனை நாம் பின்பற்றாவிட்டால், வேறுபட்ட மதங்களையும்

images (2)

சாதிகளையும் மொழிகளையும் கொண்ட இந்நாட்டில் ஒருநாள்கூட நம்மால் உயிர்வாழமுடியாது. இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பார்சிக்களுக்கும் ஜைனர்களுக்கும்கூட அது சொந்தமானதுதான். இந்துக்கள் மட்டுமே இங்கே முதல் தரக் குடிமக்கள் என்றும் மற்றவர்கள் மூன்றாம் நிலையில் வாழவேண்டும் என்றும் யாரும் சொல்லிவிடமுடியாது. அனைவரும் சம அளவில் முதல் தரக் குடிமக்களே. அந்த வகையில் 2002ல் குஜராத்தில் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. மோடிமீது படிந்துகிடக்கும் கறையை அரேபியாவிலுள்ள சிறந்த நறுமணங்கள் அனைத்தையும் கொண்டும்கூட சுத்தப்படுத்திவிடமுடியாது.
மோடிக்கும் இந்தக் கொலைகளுக்கும் தொடர்பில்லை என்றும் எந்த நீதிமன்றமும் அவரைக் குற்றவாளி என்று சொல்லவில்லை என்றும் அவருடைய ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள். நமது நீதித்துறை குறித்து நான் எதுவும் சொல்லவிரும்பவில்லை.

ஆனால், 2002 சம்பவங்களுக்கும் மோடிக்கும் தொடர்பில்லை என்பதை நான் ஏற்கமுடியாது. அப்போது அவரே குஜராத்தின் முதலமைச்சராக இருந்தார் என்னும்போது அவருக்கும் மிகப் பெரிய அளவில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எப்படி ஒருவரால் நம்பமுடியும்?

ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். அகமதாபாத்தில் உள்ள சமன்புரா பகுதியில் வசித்த இஹ்சான் ஜாஃப்ரி, ஒரு மதிப்புக்குரிய மூத்த நாடாளுமன்ற உறுப்பினர். முஸ்லிம்கள் அதிகம் வசித்த குல்பர்கா குடியிருப்பில் அவர் வீடு அமைந்திருந்தது. அவருடைய மனைவி ஸாகியாவின் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின்படி பிப்ரவரி 28, 2002 அன்று ஒரு வன்முறை கும்பல் குடியிருப்பில் உள்ள பாதுகாப்புச் சுவர்களை காஸ் சிலிண்டர் கொண்டு சிதறடித்தனர். இஹ்சான் ஜாஃப்ரியை அவர் வீட்டில் இருந்து இழுத்து வந்தார்கள். அவர் உடைகளைக் களைந்து, வாளால் வெட்டி, உயிரோடு கொளுத்தினார்கள். மேலும் பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், அவர்களுடைய குடியிருப்புகள் கொளுத்தப்பட்டன.
சமன்புராவுக்கு ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் ஒரு காவல் நிலையம் அமைந்திருக்கிறது. அங்கிருந்து இரண்டு கி.மீக்கும் குறைவான தொலைவில் அகமதாபாத் காவல் துறை கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ளது. சமன்புராவில் என்ன நடக்கிறது என்று முதல்வருக்குத் தெரியாமல் இருக்கமுடியுமா?

மிருகத்தனமாகக் கொல்லப்பட்ட தன் கணவருக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று அன்று தொடங்கி ஸாகியா ஜாஃப்ரி மூலைக்கு மூலை அலைய ஆரம்பித்தார். மோடிக்கு எதிரான அவருடைய கிரிமினல் வழக்கு மாவட்ட நீதிமன்றத்தால் விசிறியடிக்கப்பட்டது. காரணம் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவால் மோடிக்கு எதிராக எந்தவித ஆதாரங்களையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் உச்ச நீதி மன்றம் அவருடைய மனுவை ஏற்றுக்கொண்டுள்ளது. வழக்கு விசாரணையில் இருப்பதால் இது குறித்து நான் மேலதிகம் எதுவும் பேசப்போவதில்லை. குஜராத் வளர்ச்சியடைந்துள்ளதாக மோடி சொல்லிக்கொள்கிறார். எனவே வளர்ச்சி என்பதன் அர்த்தத்தை அறிந்துகொள்வது அவசியமாகிறது. என்னைப் பொருத்தவரை வளர்ச்சியின் பொருள் ஒன்றுதான். அது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது. பெரும் தொழில் நிறுவனங்களுக்குச் சலுகைகள் அளிப்பதும் சகாய விலையில் அவர்களுக்கு நிலமும் மின்சாரமும் கிடைக்கச் செய்வதும் வளர்ச்சியல்ல. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாத எதுவுமே வளர்ச்சியல்ல.வளர்ச்சியின் கதை

இன்று, 48 சதவிகித குஜராத்தி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள். தேசிய சராசரியைவிட இது அதிகம். குஜராத்தில் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை அதிகம். பிரசவக் கால மரணங்களும் அதிகம். பழங்குடிப் பகுதிகளிலும் பிற்படுத்தப்பட்டோர், அட்டவணைச்சாதியினர் எண்ணிக்கையிலும் 57 சதவிகிதம் வறுமை நிலவுகிறது. சமீபத்தில் ராமச்சந்திர குஹா குறிப்பிட்டதைப் போல், சுற்றுச்சூழல் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது; கல்வியின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது. 2010 யுஎன்டிபி அறிக்கையின்படி, வளர்ச்சிக்கான முக்கியக் கூறுகளான சுகாதாரம், கல்வி, தனிநபர் வருமானம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டால் குஜராத்துக்கு முன்னால் எட்டு இந்திய மாநிலங்கள் இடம்பெறுகின்றன.குஜராத்தில் மோடி வர்த்தகத்துக்கு ஏற்ற சுமூகமான சூழலை ஏற்படுத்தியிருப்பதாகப் பல வர்த்தகத் தலைவர்கள் பலர் சொல்கிறார்கள். இந்தியாவில் வியாபாரிகள் மட்டும்தான் வாழ்கிறார்களா என்ன? நான் இந்திய மக்களைக் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். இந்தியாவின் எதிர்காலத்தின்மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் அனைத்து விஷயங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஜெர்மனியில் 1933ல் ஏற்பட்ட தவறுகள் இங்கும் நிகழும்.

(பிப்ரவரி 15, 2013 தி இந்துவில் வெளியான All the perfumes of Arabia கட்டுரையின் தமிழாக்கம். மார்கண்டேய கட்ஜு, உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி. தற்சமயம், இந்திய பிரஸ் கவுன்
சில் தலைவர்).
* கட்ஜுவின் இந்தக் கட்டுரையைக் கடுமையாக எதிர்த்துள்ளார் பாஜகவின் முன்னணித் தலைவர் அருண் ஜேட்லி. காங்கிரஸ்காரர்களைக் காட்டிலும் அதிகமாக அக்கட்சிக்காக வக்காலத்துக்கு வாங்குபவராக கட்ஜு மாறிவிட்டார்; மேற்கு வங்கம், பிகார், குஜராத் என்று காங்கிரஸ் ஆட்சியில் அல்லாத பகுதிகளை மட்டும் கட்ஜு குறிவைத்து விமரிசிக்கிறார். கட்ஜு தன் பதவியைவிட்டு விலகவேண்டும் என்கிறார் அருண் ஜேட்லி. பதவியைத் துறக்கவேண்டியவர் அருண் ஜேட்லிதான் என்கிறார் கட்ஜு. காங்கிரஸ் ஆட்சியையும் சேர்த்தே தாம் விமரிசித் துள்ளதாகவும் ஜேட்லி உண்மையைத் திரிக்கிறார் என்றும் கட்ஜு பதிலளித்துள்ளார்.

untitled1

SHARE