எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களாகிய நாம் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்வோம். இவரை ஆதரிப்பது தொடர்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளிடத்திலும் மேற்கொண்ட முடிவிலும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எடுத்துக்கொண்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதே நூற்றுக்கு தொண்ணூறு விகிதமானவர்களின் கருத்தாகவிருந்தது. அதனை உள்வாங்கிக்கொண்டுதான் நாம் இறுதி முடிவிற்கு வந்தோம்
ஒருசிலர் இனப்படுகொலையினை மேற்கொண்டவர்களுக்கு எவ்வாறு வாக்களிப்பது எனக்கேட்கலாம். மஹிந்தவிற்கு வாக்களிப்பதன் மூலம் முள்ளிவாய்க்கால் படுகொலையை நியாயப்படுத்துவது போல் ஆகிவிடும். அதேவேளை மைத்திரிக்கு வாக்களிப்பதனால், கூட்டுக்கட்சியாக அணைவரும் இணைந்திருப்பதனால் அவர்களிடத்திலும் பேசிப்பார்க்கலாம்.
அதற்காக அவர்களை முற்றுமுழுதாக ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்று அர்த்தமல்ல. எமது கட்சி தீர்மானத்தின் அடிப்படையில் எல்லோரும் ஒருமித்த கருத்தை தெரிவித்துவிட்டு ஒருசிலர் மாத்திரம் வெளியில் நின்று கோஷமிடுவது அது தமிழ்மக்கள், தமிழ் பண்பாட்டினை பொறுத்தவரையில் அர்த்தமற்றதாகிவிடும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை உடைத்து ஏற்கனவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் தாம் தலைமைப்பதவியினை எடுக்கலாம் என முயற்சித்து வருகின்றனர். அவர்களுடைய சதித்திட்டங்களுக்கெல்லாம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஏமாந்துவிடாது.
50வருட அரசியலில் நாம் எத்தனையோ சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்துவந்தவர்கள். சமாதான காலத்தில் முளைத்த ஒருசில அரசியல் சாணக்கியம் தெரியாதவர்களின் பேச்சுக்களுக்கெல்லாம் நாம் பதில் வழங்கவேண்டியது உகந்ததல்ல. தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்தியல் அடிப்படையிலேயே மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரிக்க நாம் திடசங்கற்பம் எடுத்துக்கொண்டோம். நாம் அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும், மக்கள் பெரும்பான்மையானோர் மைத்திரிக்கு தான் வாக்களிக்கப்போகின்றார்கள். சிங்கள தேசத்திலும், முஸ்லீம் கட்சிகள் மத்தியிலும் ஆட்சிமாற்றம் வேண்டும் என்ற ஒத்த நிலைப்பாட்டில் அனைவரும் அணி திரண்டுவிட்டனர். நாம் மாத்திரம் தனித்துநின்று எதனையும் சாதித்துவிடமுடியாது. தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம் என பேசிக்கொள்வோமாகவிருந்தால் அரசிற்கு எதிராக ஆயுதமேந்திப்போராட வேண்டும். 2009ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது புனர்வாழ்வில் இருந்தவர்களையும், முகாம்களில் இருந்த மக்களையும் பாரப்பதற்காக நாம் சென்றபோது எம்மை அவர்கள் பார்க்கவிடவில்லை.
ஜனநாயகத்திற்கு எதிரான விடயம் என நாம் இதனைக் கோரிய போதிலும் பாதுகாப்பு அமைச்சரான கோத்தபாய அவர்கள் அதற்கான அனுமதியினை மறுத்;துவிட்டார். வளர்ந்துவரும் அரசியல்வாதிகள் ஒன்றினை சிந்திக்கவேண்டும். 50வருட அரசியல் வாழ்க்கையில் நாம் சென்ற பாதைகளை சொல்வோமாகவிருந்தால் அது வேதனைக்குரியது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை செய்த மஹிந்தவிற்கு வாக்களிப்பதா? அல்லது யாழ் நூலகத்தினை எரித்த ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்திருக்கக்கூடிய, மைத்திரிபால சிறிசேனவின் கட்சிக்கு வாக்கிளிப்பதா? என பார்ககின்றபொழுது, மக்கள் மற்றும் கட்சிகளின் கருத்தும் மைத்திரியினை ஆதரிப்பதாகவிருந்த காரணத்தினால் எமது கட்சியின் தீர்மானம் அதுவாக அறிவிக்கப்பட்டது. இதனை ஒருசிலரின் நட்பாசைக்காக மஹிந்த ராஜபக்ஷவை வெல்லவைத்து தாம் அரசியல் செய்வதற்காகவும், இருவருக்குமே வாக்களிக்கவேண்டாம் புறக்கணியுங்கள் என்றும் பொதுவேட்பாளரை நிறுத்துங்கள் என்றெல்லாம் கூறினார்கள். அது முற்றிலும் தவறான கருத்தாகும். பெரும்பான்மை இனத்தினை கொண்டிருக்கும் சிங்கள தேசம், வடபகுதி மக்கள் வாக்களிக்காமல் போனால் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெல்வதற்கான வாய்ப்புகள் இருக்கினற்ன. மூன்றாவது தடவையாகவும் அவர் ஆட்சியமைப்பாராகவிருந்தால் அது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஆட்சியாகவும், ஹிட்லரின் ஆட்சிக்கு ஒப்பானதாகவும் அமையும்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருந்து முரணான கருத்துக்களை வெளியிடுபவர்கள் அதனை சிந்தித்துப்பார்க்கவேண்டும். ஆகவே தமிழ் மக்களாகிய நாம் ஒரு ஆட்சி மாற்றம் தேவை என்பதற்காகவே மைத்திரிபாலவினை ஆதரித்து வாக்களிப்போம் என்றார் தமிழரசுக்சட்சியின் தலைவரும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா அவர்கள.;