குளத்தில் மூழ்கிய 10 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றிய 14 வயது வீரச்சிறுவன்

313

 

குளத்தில் மூழ்கிய 10 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றிய 14 வயது வீரச்சிறுவன்

மும்பையில் மலபார் ஹில் பகுதியில் குளத்தில் விழுந்த 10 வயது சிறுமியை 14 வயது வீரச்சிறுவன் ஒருவன் உயிருடன் மீட்டான்.

அங்குள்ள பங்கங்கா குளக்கரையில் விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுமியான கிருஷ்ணா திடீரென குளத்துக்குள் தவறி விழுந்தாள். நீச்சல் தெரியாத கிருஷ்ணா தண்ணீரில் விழுந்தவுடன் அவளுடன் விளையாடி கொண்டிருந்த மற்றொரு சிறுமி கதறி அழுதவாறு அப்பகுதியில் இருந்தவர்களிடம் முறையிட்டாள். குளத்தில் 25 அடி தண்ணீர் இருந்த நிலையில், சிறுமியை காப்பாற்ற 20க்கும் மேற்பட்டோர் குளத்துக்குள் பாய்ந்தனர். எப்படியாவது சிறுமியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் 14 வயது வீரச்சிறுவனான மோஹித் தால்வியும் குளத்துக்குள் பாய்ந்தான்.

இரண்டு முறை தண்ணீருக்குள் மூழ்கி தேடிய போதும் கிருஷ்ணா அகப்படவில்லை. இதற்குள் பத்து நிமிடங்கள் கடந்துவிட்டது. இந்நிலையில் மூன்றாவது முறையாக தண்ணீருக்குள் சென்ற மோஹித் 25 அடி ஆழத்தில் கிருஷ்ணாவின் கையை கண்டான். உடனடியாக கையை பிடித்து இழுத்து கிருஷ்ணாவை மேலே இழுத்து வந்தான். பின்னர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கிருஷ்ணாவின் உயிரை தீவிர சிகிச்சைக்கு பின் மருத்துவர்கள் காப்பாற்றினார்கள்.

தனது மகள் உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் பேசிய தந்தை அனில் பாஷ்ட்யே கூறுகையில், ‘எனது மகளை உயிருடன் மீட்டுத்தந்த மோஹித்துக்கு என்றும் நன்றியுடையவனாக இருப்பேன் என்றார். இன்னும் ஒரு நிமிடம் தண்ணீருக்குள் இருந்திருந்தால் எனது மகள் உயிர் பிழைத்திருக்க மாட்டாள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று அனில் அச்சத்துடன் கூறினார்.

தன் உயிரை துச்சமென எண்ணி கிருஷ்ணாவை காப்பாற்றிய வீரச்சிறுவன் மோஹித்தை பலரும் பாராட்டியதுடன், மருத்துவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அவனுக்கு வெகுமதி வழங்கி சிறப்பு செய்தனர்.

SHARE