மனம் மயங்குதே… : டாக்டர் சுபா சார்லஸ்
பிள்ளை வளர்ப்பில் மிகச் சவாலான காலகட்டம் எது எனப் பெற்றோரிடம் கேட்டுப் பாருங்கள். உண்ணாமல், உறங்காமல் குழந்தையை கைக்குள்ளேயே பொத்தி வைத்துப் பார்த்த நாட்களைச் சொல்ல மாட்டார்கள். நேற்று வரை நண்பர்களாக இருந்த பெற்றோரை இன்று எதிரிகளாகப் பார்க்கிற மனோபாவத்துக்கு மாறிய பதின்ம வயதுப் போராட்டத்தையே குறிப்பிடுவார்கள்.
‘பெற்றவர்களை மதிப்பதில்லை’ என்கிற புகாரை அனேகமாக எல்லா பெற்றோருமே கையில் வைத்திருப்பார்கள். பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கும் பெற்றோருக்கு அவர்களைக் கண்டிக்கிற, கட்டுப்படுத்துகிற உரிமை கிடையாதா என்ன? நிச்சயம் உண்டு. ஆனால், அதற்கொரு எல்லையும் உண்டு. குழந்தைகளோ, பெரியவர்களோ ஒவ்வொருவருக்குமே ஒரு தனிமை உண்டு.
அவர்களுக்கு மட்டுமே உரித்தான ரகசியங்களும் உண்டு. பெற்ற பிள்ளைகள் என்பதாலேயே அவர்களது ரகசியங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அந்தரங்கத்தில் தலையிடுவது ஒரு மனிதனைப் பொதுவெளியில் துகிலுரித்து, நிர்வாணப் படுத்திப் பார்க்க நினைப்பதற்குச் சமமானது.
ஷாலினி – அஷோக் இருவரும் ஐ.டி. துறையில் வேலை பார்க்கிற தம்பதியர். ஷ்ரேயா அவர்களது ஒரே மகள். 14 வயது. ‘‘எங்கப் பொண்ணு எங்க கையை விட்டுப் போயிடுவாளோனு பயமா இருக்கு மேடம்…” ஆரம்பிக்கும் போதே ஷாலினிக்கு வார்த்தைகளை முந்திக் கொண்டது கண்ணீர்.
‘‘ரெண்டு பேரும் ஐ.டி.ல வேலை பார்க்கறோம். நாங்க ஓடி ஓடி உழைக்கிறதெல்லாம் எங்க ஒரே பொண்ணுக்காகத்தான். காலையில போனா நைட்டு தான் வீட்டுக்குத் திரும்பறோம். அவ பாதுகாப்பா இருக்கணுமேங்கிறதுக்காக, எங்க சொந்தக்காரப் பையன்கிட்ட அவளைப் பார்த்துக்கிற பொறுப்பை ஒப்படைச்சிருந்தோம். அவன், இவளைவிட 10 வயசுப் பெரியவன். எங்க பொண்ணை குழந்தையிலேருந்து பார்த்துக்கிட்டிருக்கான். அதனால எதுவும் தப்பு நடக்காதுனு நம்பினோம். ஆனா, கொஞ்ச நாளா எங்க பொண்ணு போக்குல மாற்றம் தெரியுது. அவளுக்கு அவன் மேல ஒரு அட்ராக்ஷன் வந்திருக்கோனு சந்தேகமா இருக்கு.
அவன் இருக்கிறப்ப சந்தோஷமா சிரிச்சுப் பேசறா. எப்பப் பார்த்தாலும் யாருக்கோ எஸ்.எம்.எஸ். அனுப்பிட்டே இருக்கா. ஒருநாள் அவளுக்குத் தெரியாம அவ மொபைலை எடுத்துப் பார்த்தேன். அதுல அவ அந்தப் பையனுக்கு அனுப்பின எஸ்.எம்.எஸ்ஸை பார்த்து ஷாக் ஆயிட்டேன். அவளுக்கு அவன் மேல ஒரு ஈடுபாடு இருக்கிறது தெரியுது. இதை எப்படித் தடுக்கறது? அவளுக்கு நாங்க எந்தக் குறையும் வச்சதில்லை. ஒரே பொண்ணுங்கிறதால கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து இளவரசி மாதிரி வச்சிருக்கோம். ஆனாலும், அவ புத்தி ஏன் இப்படிப் போச்சுனுதான் தெரியலை.
அவ எங்களை விட்டுட்டுப் போயிடுவாளோனு பயமா இருக்கு…” ஆரம்பித்த இடத்துக்கே வந்து நிறுத்தினார் ஷாலினி.இந்தக் காலத்துப் பெற்றோருக்கு பிள்ளைகளின் எந்த நடவடிக்கையைப் பார்த்தாலும் பயம்… பதற்றம்… செல்போன் வாங்கிக் கொடுத்தது தப்போ… நெட் கனெக்ஷன் கொடுத்தது தப்பாப் போச்சோ… நண்பர்களிடம் பழக விட்டது தப்பாயிருக்குமோ எனப் புலம்பு வார்கள்.
டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கிற பிள்ளைகளுக்கு இந்த வசதிகளை எல்லாம் தருவதில் தவறில்லை. அதே நேரத்தில் அவர்களது நண்பர்கள் யார், அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டியதும் அவசியம். பருவ வயதில் இருக்கிற தன் மகளோ, மகனோ, அதே வயதுள்ள எதிர்பாலினத்தாரிடம் சாதாரணமாகப் பேசுவதையோ, சிரிப்பதையோ பார்த்தால் கூட பலவித பயங்கரக் கற்பனைக் கோட்டைகளைக் கட்டி, பிள்ளைகளைப் பற்றிய தவறான கணிப்புகளை வளர்த்து விடுவார்கள்.
சில பெற்றோர் ‘அரண்டவன் கண்களுக்கு இருண்ட தெல்லாம் பேய்’ என்கிற மாதிரி பார்க்கிற, கேள்விப்படுகிற எல்லாவற்றையும் சந்தேகப்படுவார்கள். கயிறு கூட பாம்பாகத் தெரியும். பிள்ளைகளைப் பற்றிய தம் கணிப்பு உண்மையானதா, கற்பனையானதா, பயத்தினால் எழுந்ததா என யோசிக்கத் தோன்றாது. ‘எங்க குழந்தைங்களுக்கு நாங்க என்ன குறை வச்சோம்? கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தோமே…’ என பெற்றோர், தம் பிள்ளைகளை நீதிக் கோட்டையில் குற்றவாளியிடம் அவன் செய்த குற்றங்களை பகிரங்கப்படுத்துவது போல அடுக்கடுக்காக சாடுவார்கள்.
தம் பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்க முடியாமல் போனதால் உண்டான குற்ற உணர்வை மழுங்கடிக்கிற வகையில், பல பரிசுப் பொருட்களை அள்ளி வழங்கி, தம் தவறை எளிதாக மறக்கடிக்கச் செய்வார்கள்.‘நானா கேட்டேன்… நீதானே வாங்கித் தந்தே’ என பிள்ளைகள் சீறும் போது, ‘நன்றியே இல்லையே’ என்றும், ‘அன்பே இல்லையே’ என்றும் கண்ணீர் சிந்துவார்கள்.
குழந்தைகள், அதிலும் பதின்ம வயதுப் பிள்ளைகள் ஏங்குவது உயிரற்ற பொருட்களுக்காக அல்ல. காஸ்ட்லியான செல்போனோ, கலக்கலான கேம்ஸோ, கேட்கும்போதெல்லாம் மறுக்காமல் கொடுக்கிற பாக்கெட் மணியோ அவர்களது ஏக்கம் தீர்ப்பதில்லை. அவர்கள் ஏங்குவதெல்லாம் அன்புக்கு. தான் பேசுவதைக் கேட்கிற, பகிர்கிற ஜோக்குகளை ரசித்து சிரிக்கிற, தன் கற்பனை உலகத்தில் தன்னோடு கை கோர்த்து, தான் சொல்கிற கதைகளை ரசிக்கிற ஒரு மனதுக்கு… தனக்கென ஒரு உலகம் விரித்து, அதில் சிறகடிக்க நினைக்கிற வயது டீன் ஏஜ். பல பெற்றோருக்கும் அந்தப் பருவத்தைப் பார்த்து பயமும், பதற்றமும் இருக்கும் அளவுக்கு, அதை லாவகமாகக் கையாளும் பக்குவம் தெரிவதில்லை.
டீன் ஏஜில் பிள்ளைகளுடன் பெற்றோர் நேரம் செலவழிக்க வேண்டியது மிக முக்கியம். அவர்களது உலகத்தில் தங்களையும் ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும்.‘அந்தப் பையனை உனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கா… அவன்கிட்ட எந்த விஷயம் பிடிச்சிருக்கு… ஏன் பிடிச்சிருக்கு… ‘என மகளிடம் பொறுமையாக, அன்பு கலந்த குரலில் ஷாலினி விசாரித்திருக்கலாம். ‘ஆமாம்மா… அவன் என்கிட்ட அன்பா இருக்கானா.. என்னைக் கட்டிப் பிடிச்சுக்கறானா… அப்ப நல்லா இருக்கு. கன்னத்தைப் பிடிச்சுக் கிள்ளும் போது ஜாலியா இருக்கு…’ என மகளும் மனம் திறப்பாள்.
உடனே ‘முளைச்சு மூணு இலை விடலை.. அதுக்குள்ள காதல் கேட்குதா?’ என மகளிடம் கொந்தளிக்காமல், அவள் போக்கிலேயே பேச்சைத் தொடர வேண்டும்.‘அப்படியா… இந்த வயசுல அப்படித்தான் இருக்கும். அதை சீரியஸா எடுத்துக்கக் கூடாது. அதுவே உனக்குத் தெரியாத வேற யாரோ உன்னைத் தொடறதையோ, கட்டிப் பிடிக்கிறதையோ அனுமதிப்பியா? அது உனக்குப் பிடிக்குமா? இல்லையில்லையா? அப்படித்தான் இதுவும். உன் வாழ்க்கையில இன்னும் நிறைய பேரை சந்திக்க வேண்டியிருக்கும்.
இவனைவிட பெட்டரான எத்தனையோ பேரை நீ கிராஸ் பண்ணுவே… இன்னும் உனக்கு வாலிப வயசு நிறைய இருக்கு’ எனப் புரிய வைத்து, ஆண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அறிவியல் கலந்து விளக்கலாம்.பெற்றோர் செய்யவே கூடாத விஷயம் என்ன தெரியுமா? பிள்ளைகளை சந்தேகிப்பது. அவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ அவர்களது மொபைலை சோதிப்பதைப் போன்ற அத்துமீறல் வேறு எதுவும் இருக்காது. ‘நம்ம குழந்தை தப்பு பண்ணாது’ என நம்பித்தான் ஆக வேண்டும். ‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது’ என்கிறது சட்டம்.
ஒருவேளை பெற்றோரின் சந்தேகம் தவறாக இருந்தால், அது அந்தக் குழந்தையைப் பெரிதும் பாதிக்கும். உலகின் மீதே வெறுப்பையும் அவநம்பிக்கையையும் உருவாக்கும்.பல பெற்றோர் கண்டிப்பு, கறார் என்கிற பெயரில் குழந்தைகளின் உடம்பை பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறார்களே தவிர, அவர்களது மனதைப் பாதுகாக்கத் தவறி விடுகிறார்கள். மனது கூடு விட்டுக் கூடு பாயும் குணம் கொண்டது. வீட்டுக்குள் எந்த அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கித் தவிக்கிறதோ, அது கிடைக்காத பட்சத்தில், கிடைக்கிற இடத்தை நோக்கிக் கூடு பாயும்.
பெற்றோர் ‘ஃபால்ட் ஃபைண்டிங் மோடில் (Fault finding mode) பிள்ளைகளின் செயல்பாடு களை நோக்காமல், ‘ஃபேக்ட் ஃபைண்டிங் மோடு’ (Fact finding mode) மனப்பார்வையுடன் அவர்களின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்வது நல்லது. குற்றங்களைக் கண்டுபிடிக்கிற பூதக்கண்ணாடியை அணிந்து கொண்டு பிள்ளைகளைப் பார்ப்பதைத் தவிர்த்து, உண்மைகளை ஆராய்கிற பார்வைக்குப் பெற்றோர் பழக வேண்டும்.
பிள்ளைகளின் உடலைப் பூட்டி வைப்பதன் மூலம் அவர்களைப் பாதுகாக்க முடியாது. மனதை உங்களுக்குப் பக்கத்தில் பத்திரமாக வைத்துக் கொள்ளக் கற்றுக் கொண்டால், உங்கள் மகள் இப்போதில்லை, எப்போதுமே உங்கள் கைகளைவிட்டுப் போக மாட்டாள் என ஆலோசனைகள் சொன்னேன். ஷாலினியின் கண்களில் பயம் விலகி, தெளிவு தெரிந்ததை உணர்ந்தேன்.
பயிற்சி
ஒரு தாவரக் கொடி படர ஆரம்பிக்கிற நிலையில் அதன் வளர்ச்சியை உற்றுக் கவனிக்கிறீர் களா? அதன் வேகமாக வளரும் இளம் நுனித் தண்டு சூழலைத் தேடி ஆராயும். பற்றிக் கொண்டு படர ஏதுவாக பாதுகாப்பான ஒரு இடத்தைத் தேடும். பதின்ம வயதுப் பிள்ளைகளும் கிட்டத்தட்ட கொடி போன்வர்கள்தான். பற்றிப் படர, தோள்சாய வீட்டுக்குள் இடம் கிடைக்காத போது, அவை கிடைக்கிற இடத்தை நோக்கித்தான் அவர்களது தேடல் நீளும்.
வாலிப வயதில் பிள்ளைகளின் அழகையும் பூரிப்பையும் வளர்ச்சியையும் பார்க்கும் போது பெற்றோர் வயிற்றில் அமிலம் சுரப்பது நமது கலாசாரத்தில் இயல்பாகி விட்டது. தன் மகன் மீசை, தாடியுடன், ஆண் குரலுடன் பலசாலியாக வளர்வதைப் பெருமையுடன் பார்க்கும் பெற்றோர், தன் பெண் வாலிபத்தின் அழகில் வளர்ச்சியடைவதை அவள் எல்லா விதங்களிலும் நன்றாக வளர்கிறாள் என்று மன அமைதியுடனும் பெருமையுடனும் பார்ப்பதில்லை. அந்த மனப்போக்கு மாற வேண்டும். பதற்றம் கூடாது.
சந்தேகத்தின் சாயல் கூட அவர்கள் மீது விழக்கூடாது. பிள்ளைகளை சூரியனாகப் பார்க்கப் பழகும் போது, சந்தேகம் என்னும் நிழல் பிள்ளைகளின் மேல் படாது. விதிகளற்ற, எல்லைகளற்ற அன்பையும் பாசத்தையும் அவர்கள் மீது நீங்கள் கொட்ட வேண்டும். தாய், தந்தை யின் கூட்டிலிருந்து சிறகடித்துப் பறந்து தனக்கான கூட்டுக்கு பிள்ளைகள் ஒரு காலத்தில் இடம் மாறுவார்கள். அதுவரை தான் பாதுகாப்பாக வளர்வதற்கு தம் பெற்றோரின் கூடுதான் சிறந்த இடம் என உணர்த்த வேண்டும். அவர்களது உண்மையான, உறுதுணையான நண்பர்களாக, வழிகாட்டியாக மாறும் போது, உங்கள் அன்பான, நேர்மையான போக்கால், நீங்கள் அவர்களது முன்மாதிரிகளாக மாறுவதோடு, அவர்களது மனதும் கூடு பாய நினைக்காது.