1905இல் நடந்த ஜப்பான் – ரஷ்ய யுத்தத்தில் வெற்றிபெற்ற ஜப்பான் 1910இல் கொரிய தீபகற்பத்தைத் தன் காலனி நாடாக்கிப் பல்வேறு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. முப்பத்தாறாண்டுகள் ஜப்பானின் காலனி ஆதிக்கத்தில் இருந்த கொரியா இரண்டாம் உலகப் போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு, ஜப்பான் சரணடைந்த நாளான ஆகஸ்டு 15, 1945இல் விடுதலை பெற்றது. ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு ஐரோப்பாவைக் குறிப்பாக, ஜெர்மனியைக் கூறுபோட்ட வல்லரசுகளான அமெரிக்காவும் சோவியத்தும் கொரிய தீபகற்பத்தையும் கூறுபோட்டன. அதன்படி, 38ஆம் அட்சரேகைக்கு வடக்கு-தெற்கு எனப் பிரித்து, ஆகஸ்டு 15, 1948இல் தென்கொரியாவைத் தனிநாடாக அமெரிக்கா அறிவித்தது. சோவியத்தின் உதவியோடு செப்டம்பர் 9, 1948இல் வடகொரியா தன்னைக் கம்யூனிசச் சுதந்திர நாடாக அறிவித்தது. இதனால் அறுபதாண்டுகளாகப் பிரிந்த குடும்பங்கள் இன்றுவரை ஒன்றுசேர இயலாமல் ஏங்குகின்றன. ராணுவ பலத்துடன் கொரியாவை இணைப்பதுதான் தன் ஒரே நோக்கம் என்றறிவித்த வடகொரியா தன் ராணுவ பலத்தை அதிரடியாக அதிகரித்தது. ஜூன் 25, 1950இல் வடகொரியாவின் நிறுவனத் தலைவரான ‘பாசமிகு தலைவர்’ கிம் மிமி சங் (15 ஏப்ரல் 1912 – 8 ஜூலை 1994) “நம் தந்தையின் தேசத்தை இணைப்போம்” என்னும் போர் முழக்கத்துடன் வடகொரியப் படைகளைத் தென்கொரியாவுக்கு அனுப்பி மூன்று நாட்களுக்குள் தென்கொரியாவின் தலைநகர் சியோல் உட்படப் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினார். கம்யூனிசச் சித்தாந்தத்தின் எல்லைகள் விரிவாவதைப் பொறுக்காத அமெரிக்கா, ஐ.நாவின் போர்வையில் போரில் குதித்தது. சோவியத் யூனியன் ஐ.நாவைச் சில காலங்களுக்குப் புறக்கணித்ததால் அமெரிக்காவின் ‘கொரிய போர் தீர்மானம்’ தடையின்றி நிறை வேற்றப்பட்டது. வடகொரியாவுக்கு ஆதரவாகச் சீனாவும் போரில் குதித்தது. இந்தப் போரில் மிக் – 21 விமானத்தின் பைலட்டாக இருந்த சீன அதிபர் மா சே துங்கின் மகனும் கொல்லப்பட்டார். 1950-53 வரை நடந்த போரில் இரு கொரியா, சீனா, பிரிட்டனைச் சேர்ந்த 35 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். தற்போது அறுபதாண்டுகளாகியும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறைப்படுத்தாமல் எல்லையில் எப்போதும் பதற்றத்துடன் உள்ள நாடுகள் தென்கொரியாவும் வட கொரியாவும்தான். வடகொரியா கம்யூனிசச் சித்தாந்தத்தின் அடிப்படையில் ‘சுயசார்புக் கொள்கையை’க் கடைபிடிப்பதாக அறிவித்தது. வடகொரியாவுக்குச் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தொடர்ந்து உதவிவருகின்றன. தென்கொரியா தாராளப் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றி அமெரிக்கா, ஜப்பான், பிற மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் முன்னாள் மேற்கு ஜெர்மனியைப் போன்று அசுரவேகத்தில் தன் பொருளாதார வலிமையை அதிகரித்தது. 1988இல் ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக இந்நாடு நடத்தி இதன் பொருளாதார வலிமையை உலகிற்குப் பறைசாற்றியது. கொரிய போரின் ஒப்பந்தமில்லாப் போர்நிறுத்தத்திற்குப் பின்பு அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாட்டுப் படைகள் இக்கொரிய எல்லையில் நிறுத்தப்பட்டன. தற்போதும் சுமார் 28,000 அமெரிக்கப் போர் வீரர்கள் தென்கொரியாவில் முகாமிட்டுள்ளது மட்டுமின்றிப் போரின்போது தென்கொரியப் படைகள், அமெரிக்கத் தளபதியின் கட்டளைபடி தான் செயல்பட வேண்டுமென்று ஒப்பந்தமும் செய்துள்ளது. அமெரிக்கப் படைகள் கொரிய தீபகற்பத்தில் இருப்பது வடகொரியா – சீனாவுக்குப் பெரும் எரிச்சலை உருவாக்கியுள்ளது. தொடரும் சித்தாந்த மோதல்கள், வடகொரியாவின் ராணுவப் பெருக்கம், அமெரிக்கப் படைகளின் மேலாதிக்கம், பரஸ்பர பயம், துர்பிரச்சாரம், சந்தேகம், வெறுப்பு போன்றவை இரு கொரிய இணைப்புக்குத் தடையாக இருப்பது மட்டுமன்றிக் கொரிய தீபகற்பத்தை எப்போதும் பதற்றமான பகுதியாகவே வைத்துள்ளது. அவ்வப்போது மேற்கொள்ளப்படும் சமாதானப் பேச்சுவார்த்தைகள், பரஸ்பர நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சிகளை வெற்றிபெறச் செய்யாமல், ஏதாவது புதிய புதிய பிரச்சினைகள் உருவாகித் தடைக்கற்களை ஏற்படுத்துகின்றன. சுமார் இரண்டரைக் கோடி மக்கள்தொகை கொண்ட வடகொரியாவை அதன் நிறுவனத் தலைவர் (Dear founder leader) கிம் மிமி சங்கின் மறைவிற்குப் பின்பு (ஜூலை 8, 1994) அவருடைய மகன் கிம் ஜா சாங்க் மிமி ஆள்கிறார். ஆனால் இவர் தன் அப்பாவின் அதிபர் பதவியை ஏற்கவில்லை. காரணம் கொரியாவின் புனிதமான அதிபர் பதவி நிரந்தரமாக மறைந்த நிறுவனத் தலைவருக்குரியதென்பது அவர் கருத்து. அங்குள்ள ஆட்சியாளர்கள் கிம் மிமி சங்மீது அந்தளவு மதிப்புவைத்துள்ளனர். அறுபதாண்டுகள் நிலவிய பதற்றமான சூழ்நிலையில் 2010, மார்ச் 26இல் 1200 டன் எடை கொண்ட தென்கொரியப் போர்க் கப்பலைப் பிரச்சினைக்குரிய மஞ்சள் கடல் பகுதியில் வட கொரிய ஏவுகணைகள் தாக்கி மூழ்கடித்ததாகத் தென்கொரியா குற்றம்சாட்டியதால் அப்பிராந்தியத்தில் பெரும் பரபரப்பு உருவாகினது. இத்தாக்குதலில் கப்பலில் இருந்த 240 பேரில் 46 பேர் உயிரிழந்தனர். தென் கொரியக் கப்பலைத் தாங்கள் மூழ்கடிக்கவில்லை என்கிறது வடகொரியா. ஆனால் தென்கொரியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நிபுணர்கள் 26 மே மாதம் சமர்ப்பித்த 400 பக்கங்களைக்கொண்ட ஆய்வறிக்கையில் வடகொரிய நீர்மூழ்கிக் கப்பல்தான் ஏவுகணை மூலம் தென்கொரியக் கப்பலை மூழ்கடித்ததாகக் கூறியது பதற்றத்தை மேலும் அதிகரித்தது. வடகொரியா குற்றத்தை ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்; கப்பலை மூழ்கடித்தவர்களை முறைப்படி விசாரித்துத் தண்டிக்க வேண்டும்; இனிமேல் இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடக்காது என உத்தரவாதம் கொடுக்க வேண்டுமென்ற தென் கொரியாவின் கோரிக்கையை வடகொரியா நிராகரித்துவிட்டது. ஏற்கனவே 2006, 2009இல் இரண்டு அணு ஆயுதங்களை வடகொரியா சோதித்தது சர்வதேச அளவில் பரபரப்பையும் வடகிழக்காசியாவில் பதற்றத்தையும் அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்நாடு அவ்வப்போது சோதிக்கும் ஏவுகணைகள் தென்கொரியா, ஜப்பான், அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டாட்டுவதுபோல் எரிச்சலை ஏற்படுத்திவிடுகின்றது. இந்நிலையில் கப்பல் கவிழ்ப்பு விவகாரம் பூதாகரமாக உருவெடுத்து அப்பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது. போர்மூட்டம் நிறைந்த கொரிய எல்லையில் இரு நாடுகளின் ஆத்திர மூட்டும் பிரச்சாரங்கள் வித்தியாசமானவை, சுவாரசியமானவை, ஆபத்தானவை. வடகொரியா தன் எல்லையில் ஆள் குடியேறாதவாறு சிறந்த கிராமத்தை உருவாக்கியுள்ளதுடன் உலகின் மிகப் பெரிய கொடிக்கம்பத்தையும் நிறுவியுள்ளது. தன் நிறுவனத் தலைவரின் கருத்துகளையும் தந்தையின் தேசத்தை இணைப்போம் என்ற கோஷங்களையும் எல்லையில் மிகப் பிரமாண்டமான மின் அலங்காரத்துடன் அமைத்துள்ளது. இத்துடன் அமெரிக்க எதிர்ப்பு, வெறுப்புப் பிரச்சினைகளையும் வடகொரிய நிர்வாகம் மிகப் பிரமாண்ட அளவில் மக்கள் மத்தியில் செய்து வடகொரிய மக்களை உற்சாகப்படுத்திவருகிறது. 1960இல் இயற்றப்பட்ட ‘அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களுக்குச் சாவு’ ‘Death to the u.s Imperialist Aggressors’ என்னும் பிரபலமான பாட்டு அனைத்து நிகழ்ச்சிகளிலும் பள்ளிகளிலும் மாநாடுகளிலும் பேரணிகளிலும் திரும்பத் திரும்ப இசைக்கப்பட்டு உணர்ச்சியுடன் பாடப்படுகிறது. குறிப்பாக, வடகொரியா தன் அறுபதாம் ஆண்டு நிறைவான 25, ஜூன் 2010 அன்று நடத்திய பேரணியில் இப்பாடல் பிரமாண்டமான இசைக் கருவிகளோடு பாடப்பட்டது. இத்துடன் தென்கொரிய ராணுவமும் அதிகாரிகளும் பொதுமக்களும் அமெரிக்காவின் கைப்பாவை ஆட்சிக்கெதிராகப் போராட வேண்டுமென வடகொரியா பிரச்சாரம் செய்கின்றது. மேலும் தன் எல்லையிலிருந்து தினமும் 6 முதல் 12 மணி நேரத்துக்குக் காதைப் பிளக்கும் ஒலிபெருக்கிகள் மூலம் வடகொரிய நாட்டின் பெருமை, தன் நாட்டுத் தலைவர்களின் புகழ் பற்றிப் பிரச்சாரம் செய்கின்றனர். இத்துடன் வடகொரியத் தலைவர்கள், முக்கிய இடங்களில் வடகொரிய சிறுவர்கள் ராணுவ உடையுடன் அமெரிக்கப் போர் வீரர்களைக் கொல்வது போலவும் அமெரிக்காவின் காங்கிரஸ் கட்டடத்தையும் சுதந்திர தேவி சிலையையும் வடகொரிய ஏவுகணைகள் தகர்த்தெறிவது போன்றும் அமெரிக்காவை ஓடும் ரயிலைப் பார்த்துக் குரைத்துக்கொண்டிருக்கும் வெறிநாயைப் போன்றும் சித்தரித்துப் பல விளம்பரத் தட்டிகளைப் பிரமாண்டமாக வைத்துள்ளனர். தன் நாட்டு மக்களின் பிரச்சினைகள், உலகின் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு அமெரிக்காதான் காரணம் என்னும் கோணத்தில் வடகொரியாவின் பிரச்சாரம் அமைந்துள்ளது. எனவே அமெரிக்காவின் கைப்பாவையாகச் செயல்படும் தென்கொரிய ஆட்சியைத் தூக்கியெறியத் தென்கொரிய மக்களைத் தூண்டிவிடுகிறது வடகொரியாவின் பிரச்சாரம். தென்கொரியாவும் பிரச்சார யுத்தத்தில் சளைத்ததல்ல என்பதை நடைமுறைச் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. 2004இல் தென் கொரியாவின் இரு கொரிய இணைப்பு அமைச்சகத்தின் முயற்சியால் ஒலிபெருக்கிகள் மூலம் எல்லையில் செய்யப்பட்ட பிரச்சாரத்தை இரண்டு நாடுகளும் நிறுத்தியிருந்தன. ஆனால் 24, மே 2010 முதல் தென்கொரியாதான் முதன் முதலாக ஒலிபெருக்கிப் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கி வட கொரியாவுக்கு ஆத்திரமூட்டியது. இருநாட்டு எல்லையில் 14 இடங்களில் தினமும் நான்கு மணிநேரம் மூன்றுமுறை பலகட்சி மக்களாட்சியின் மகிமை, சுயமாக முடிவெடுக்கும் உரிமை, தென்கொரியாவின் வளமை, சுதந்திரத்தின் சிறப்பு, தென்கொரிய அதிபர் லீ மையங் பெக் (Lee Myung – Bak)இன் பேச்சு எனச் சக்தி வாய்ந்த ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிபரப்புவதுடன் எல்லையில் பிரமாண்ட எலக்ட்ரானிக்ஸ் பிரச்சார விளம்பரத் தட்டிகள் வைத்து “வடகொரிய மக்கள் தாராளமாகத் தென்கொரியாவுக்கு வரலாம்” என அழைப்புவிடுத்தும் விளம்பரப்படுத்துகிறது. தென்கொரியாவின் ஆத்திரமூட்டும் பிரச்சார ஒலிபெருக்கிகளைச் சுட்டுத் தள்ளப்போவதாக வட கொரியா அவ்வப்போது மிரட்டுவது பதற்றத்தை மேலும் அதிகரிக்கின்றது. வடகொரிய ராணுவம் ஜப்பானியர்கள் சிலரையும் தென்கொரியர்களையும் அவ்வப்போது கடத்திச் சென்றுள்ளதாக ஜப்பானும் குற்றம் சாட்டிவந்தது. இதைத் தொடர்ந்து மறுத்துவந்த வடகொரியா சமீபத்தில் தாங்கள் 13 ஜப்பானியர்களைக் கடத்தியதாகவும் இதில் எட்டுப் பேர் இறந்துவிட்டதாகவும் கூறி ஐந்து பேரை ஜப்பானிடம் ஒப்படைத்தது. ஆனால் இறந்ததாகக் கூறப்பட்ட எட்டுப் பேரின் மரண அறிக்கையையும் ஆதாரங்களையும் தர வற்புறுத்துவதோடு ஆள்கடத்தல் குறித்து விரிவான மேல்மட்ட விசாரணையும் நடத்த ஜப்பான் வலியுறுத்திவருகிறது. இதனால் வடகொரிய – ஜப்பான் உறவும் சீர்குலைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஜப்பானின் அரசுசாரா வடகொரிய எதிர்ப்பு இயக்கங்கள் தென்கொரிய இயக்கங்களுடன் இணைந்து வடகொரியாவுக்கு எதிராக எரிச்சலூட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. குறிப்பாக 23 ஜூன் 2010 முதல் சுமார் நூறு ராட்சத பலூன்களில் சுமார் 60 லட்சம் பிரச்சாரப் பிரதிகளை வடகொரியாவுக்கு நேராக இரவில் பறக்கவிட்டு மக்கள் வாழும் பகுதிகளில் சிதறவிட்டுப் பிரச்சாரம் செய்கின்றன. வடகொரிய சர்வாதிகார, குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டுமென்றும் கிம் ஜாங் மிமிஇன் ஆட்சியை முடிவுக்குக்கொண்டு வந்தால்தான் அமைதி வழியில் இரு கொரியாவும் இணையுமென்றும் வடகொரியர்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து வளமான எதிர்காலத்தை அனுபவிக்கத் தென்கொரியாக்களும் வரலாமென்றும் வடகொரியாவின் வறுமைக்குத் தற்போதைய தவறான ஆட்சியாளர்கள்தாம் காரணமென்றும் பிரச்சாரப் பிரதிகள் வடகொரிய மக்களைக் கவர்ந்திழுக்க முயல்கின்றன. பல ஆண்டுகளாக நடந்துவந்த பிரச்சாரம் இப்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. தென்கொரியாவின் பிரச்சாரத்தை நம்பி ஆண்டுதோறும் சுமார் 3000 வடகொரியர்கள் சீனா வழியாகத் தென்கொரியாவுக்குள் நுழைகின்றனர். இதுவரை 18,000க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வளமான எதிர்காலத்தை எதிர்பார்த்து அந்நாட்டுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தங்கள் கணவர், பெற்றோர், பிள்ளைகள், உற்றார் மற்றும் சொந்த இடத்தைவிட்டு வந்தவர்கள்தாம். ஆனால் இவர்கள் தென்கொரியாவில் சந்திக்கின்ற சவால்கள் இவர்களின் நிலைமையைப் பரிதாபமாக்கியுள்ளன என்பதுதான் உண்மை. முதலாவதாக, சீனா வழியாகத் தென்கொரியாவுக்குள் நுழைந்த வடகொரியர்களை அவர்கள் இரண்டாம் தர மக்களாகத் தான் கருதுகின்றனர். இரண்டாவதாக சந்தேகத்தின் பேரில் இவர்கள் ராணுவம், உளவுத் துறையின் பல்வேறு சோதனைகளுக்குட்படுத்தப்படுகின்றனர். மூன்றாவதாக, தென்கொரியர்களைவிட வடகொரியர்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. நான்காவதாக, வடகொரியர்களின் எந்தக் கல்வித் தகுதியையும் பட்டங்களையும் தென்கொரிய நிறுவனங்களோ அரசோ அங்கீகரிப்பதில்லை. ஐந்தாவதாக, வடகொரியர்களைக் கண்ணியமான, உயர்வான வேலைக்கும் நியமிப்பதில்லை. விடுதிகள், அலுவலகங்களில் துப்புரவுப்பணி, பணிப் பெண், உதவியாளர் பணிகள்தாம் கொடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் இரு கொரியாக்களும் இணைந்தால் வட கொரியர்கள் கௌரவமாக நடத்தப்படுவார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. இந்த அரசியல் சதுரங்கத்தில் ஒவ்வொரு நாடும் தலைவர்களும் தங்கள் நலனைக் காத்துக்கொள்வதற்காகக் குறுகிய நோக்கத்தில் செயல்படுவது அப்பட்டமான உண்மை. முதலாவது பெரும் சூத்திரக்காரனாகச் செயல்படும் அமெரிக்கா, ஜெர்மனியைப் போன்று வட-தென்கொரியர்கள் இணைய வேண்டுமென்பதுபோல் பல்வேறு பாவனைகளை ஒருபுறம் செய்யும் அதேசமயம் இருநாடுகளும் இணைந்தால் கொரிய தீபகற்பத்தில் அமைதி ஏற்பட்டுத் தன் ராணுவம் கொரியப் பகுதியைவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமென்பதை உணர்ந்து கொரிய தீபகற்பத்தால் அவ்வப்போது பதற்றம் ஏற்படுவதைத்தான் விரும்புகிறது. ஒவ்வொரு பிரச்சினையையும் தன் நலனுக்குச் சாதகமாக மாற்றுவது அமெரிக்காவின் ராஜதந்திரம். முதலாவது, இப்பிரச்சினையைச் சாக்காக வைத்துத் தென்கொரிய ராணுவம், நிர்வாகத்தின் மீதுள்ள தன் கட்டுப்பாட்டை இறுக்கியது அமெரிக்கா. இரண்டாவதாக, தன் கடற்படைகள் கொரிய, சீன, ஜப்பான் கடற்பகுதிகளில் சுதந்திரமாக நடமாடக் கிடைத்த வாய்ப்பாக மாற்றியது. கடந்த ஆண்டு ஜப்பானில் நடந்த பொதுத்தேர்தலில் பிரச்சினைக்குரிய அமெரிக்கக் கடற்படைத் தளத்தை ஒக்கினவா (Okinawa) தீவிலிருந்து மூடுவோம் என்று வாக்குறுதியளித்து வெற்றி பெற்ற ஜப்பானின் ஆளும் கட்சியினர் கொரிய பிரச்சினையால் செய்வதறியாது திகைக்கின்றனர். இதை வைத்து அமெரிக்கப் படைகள் ஜப்பானின் ஒக்கினவா கடற்படைத் தளத்தை மூடவில்லை. இதனால் அவமானமடைந்த ஜப்பானின் ஆளும் ஜனநாயகக் கட்சியின் பிரதமர் யூகியோ ஹடோயாமா (Yukio Hatoyama) 2010 ஜூன் 2இல் தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்தக் கடற்படைத் தளத்தை மூடக் கோரி ஏப்ரல் 25 2010இல் லட்சத்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் பேரணி நடத்தினர் என்பது நினைவுகூரத்தக்கது. இதைப் பற்றியெல்லாம் அமெரிக்காவுக்குக் கவலையில்லை. மூன்றாவதாக, இப்பிரச்சினையைச் சாக்காக வைத்துக் கோடிக்கணக்கான நவீன ஆயுதங்களைத் தென்கொரியா, தைவான் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்து தன் ராணுவத் தளவாட உற்பத்திச் சாலைகள் பெரும் லாபம் சம்பாதிக்கும் வழியை அமெரிக்கா உருவாக்கியது. நான்காவதாக, வடகொரியாவால் ஆபத்து என்னும் போர்வையில் அப்பிராந்தியத்திற்குத் தன் அணு சக்தி விமானம் தாங்கிக் கப்பல்கள், நீர்மூழ்கி மற்றும் பிற போர்க் கப்பல்களைப் போர் ஒத்திகை என்னும் பெயரில் சுதந்திரமாக நடமாடவைத்து, அதை நியாயப்படுத்தி, வடகொரியா, சீனாவை ஆத்திரமூட்டும் செயலைத் தொடர்கிறது அமெரிக்கா. ஐந்தாவதாக, வடகொரியாவின் ஏவுகணைகளால் ஆபத்து என்று காரணங்காட்டி, தென்கொரியா, ஜப்பான், தைவான் நாடுகளுக்குப் பாதுகாப்புக் கவசத்தைக் கொடுப்பதாகக் கூறி அந்நாடுகளில் தன் ஆதிக்கத்தை அதிகப்படுத்தியது. அமெரிக்காவின் பாதுகாப்பு இல்லாமல் இப்பிராந்தியம் அமைதியாக இருக்க இயலாது என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி அப்பகுதியிலும் உலகின் பிறபகுதிகளிலும் தன் மேலாண்மையை நிலைநாட்டும் வாய்ப்பாக இப்பிரச்சினையை மாற்றியது. ஆறாவதாக, வடகொரியாவை ‘பயங்கரவாத நாடு’, ‘சர்வதேசச் சட்டங்களை மதியாத நாடு’ எனப் பிரச்சாரம் செய்து, பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தி, அந்நாட்டைப் பலவீனப்படுத்தும் திட்டத்தையும் நிறை வேற்றிவருகிறது. உலகில் மிகப் பெருமளவில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு வட கொரியா என்பதும் அங்கே அதிகாரிகள் சிலரைத் தவிரப் பொது மக்கள் எவருக்கும் இணையதள வசதியோ சர்வதேசத் தொலைக் காட்சி அலைவரிசைகளைப் பார்க்கும் வாய்ப்போ இல்லை என்பதும் உண்மைதான். ஆனால் மிகைப்படுத்தப்பட்ட அமெரிக்கப் பிரச்சாரம் 1990-2010வரை சுமார் 20 லட்சம் வடகொரியர்கள் வறுமையில் இறந்ததாகக் கூறுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, உலக நாடுகளின் மக்கள்தொகையில் மிக அதிக சதவிகித மக்கள் சிறையில் இருப்பது வடகொரியாவில்தான் என அமெரிக்கா எந்தப் புள்ளிவிவரத்தையும் ஆதாரமாக வைக்காமல் – கூறுகிறது. ஆனால் உண்மை நிலவரம் வேறு. சிறை சம்பந்தப்பட்ட ஐ.நா. ஆய்வாளரான ராய் வால்மெஸ்லே (Roy Walmsley)லண்டன் கிங்ஸ் கல்லூரியிலுள்ள சர்வதேசச் சிறைகள் படிப்பு மையத்தின் சார்பில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் உலக நாடுகளில் மிக அதிக சதவிகித மக்கள் அமெரிக்கச் சிறைகளில்தாம் உள்ளனர் என்று ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. அவர் அளித்துள்ள புள்ளிவிவரத்தின்படி அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் 701 பேர் சிறைச்சாலையிலுள்ளனர். எனவே உலகில் மிக அதிக சத விகிதக் கிரிமினல் குற்றவாளிகளைக் கொண்ட நாடு அமெரிக்கா என்பது தெளிவாகிறது. மிகவும் குறைவான சிறைக்கைதிகளைக் கொண்ட நாடுகள் இந்தியா, டென்மார்க், சுவிட்சர்லாந்து போன்றவை. இந்நாடுகளில் லட்சம் பேருக்கு முறையே 29, 64, 68 பேர் சிறையிலுள்ளனர். உண்மையில் இரு கொரியாக்களும் இணைவதை அமெரிக்கா விரும்பவில்லை. “வட கொரியா இல்லையென்றால் நாங்கள் அதை உருவாக்குவோம், அது இருப்பதால்தான் எங்கள் கப்பற்படைக் கப்பல்கள் ஜப்பான், சீனக் கடல் பகுதிகளில் பனிப்போர் முடிந்த பின்பும் உலவுகின்றன” என்று சீனாவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் கூறியது கருத்தாழமிக்கது. இப்பிரச்சினையைப் பயன்படுத்தி அமெரிக்கப் படைகள் தென்கொரியாவிலிருந்து 2012இல் வெளியேறும் என்ற ஒப்பந்தத்தைக் காற்றில் பறக்கவிட்டு, கொரிய தீபகற்பத்தில் நிரந்தரமாகத் தங்கும் சூழ்நிலையை அமெரிக்கா ஏற்படுத்திவிட்டது. இரண்டாவதாக சீனா “இரு கொரியாக்களும் எங்கள் அண்டை நாடுகள். எனவே 8000 கி.மீ. தொலைவிலுள்ள அமெரிக்காவின் கொள்கைகளுக்கும் எங்கள் அணுகுமுறைகளுக்கும் வித்தியாசமுண்டு” என்ற அதன் வாதம் நியாயமானதுதான். ஆனால் கொரிய பிரச்சினையில், வடகொரிய ஆட்சிக்குத் தொடர்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் அனைத்து உதவிகளையும் செய்து இரு கொரியாக்களையும் இணைக்க அனுமதியாமல், அமெரிக்காவுக்கு நிரந்தரமாக ஓர் எதிரியை வளர்த்து எரிச்சலூட்டுவதோடு, தான் தோன்றித்தனமாக அமெரிக்கா செயல்படுவதைத் தடுக்கும் அரணாகவும் வடகொரியாவைச் சீனா பயன்படுத்திவருவதாக அமெரிக்கா கருதுகிறது. இரு கொரியாவும் இணைந்தால் அரசியல், பாதுகாப்பு ரீதியாகச் சீனாவுக்குத்தான் பெரிய இழப்பு. காரணம், இணைந்த கொரியாவில் பொருளாதாரம், தொழில் மற்றும் மக்கள்தொகையில் குறைந்த நிலையிலுள்ள வட கொரியாவைத் தென்கொரியா எளிதாக ஆதிக்கம் செலுத்தும். எனவே அனைத்துக் கொள்கைகளிலும் அமெரிக்காவின் கைப்பாவையாக அணு ஆயுதங்களுடன் கூடிய இணைந்த கொரியா செயல்பட்டால் சீனாவுக்கு மிகப் பெரிய தலைவலியாக இருக்கும். இத்துடன், இணைந்த கொரியாவுக்கு ‘சீனாவால் ஆபத்து’ என்னும் போர்வையில் அமெரிக்கப் படைகள் சீனாவின் எல்லையில் நிரந்தரமாகத் தங்கி எரிச்சலூட்டும். மேலும் தற்போதைய கிம் ஜாங் மிமிஇன் ஆட்சி வீழ்ச்சியுற்றால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவது சீனா தான். குறிப்பாக, லட்சக்கணக்கான வடகொரியர்கள் அகதிகளாகச் சீனாவுக்குள் நுழைந்து மிகப் பெரிய சமூக, பொருளாதாரப் பிரச்சினையை உருவாக்கும் அபாயமுள்ளது. எனவே எப்பாடுபட்டாவது வடகொரிய ஆட்சியாளர்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் சீனா காய்களை நகர்த்துவது நிர்ப்பந்தமாகிறது. இந்தச் சூழ்நிலையில்தான், கடந்த அறுபதாண்டுகளாக வடகொரியாவைச் சீனா ஆதரித்துவந்தது. ஆனால் 26 ஜூன் 2010இல் தன் அதிகாரபூர்வ சர்வதேச அரசியல் ஆய்வு இதழில் Inhua’s International Affairs Journal முதன்முறையாக ஜூன் 25, 1950இல் வடகொரியா தான் தென்கொரியாமீது படையெடுத்தது என்று வெளிப்படையாக எழுதியது சீனாவின் கொரிய கொள்கை பற்றிப் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சீனாவும் வடகொரியாவும் ‘உதடுகளும் பற்களும் போன்று நெருங்கிய நண்பர்கள்’ என்று மா சே துங் கூறியதை முதலாளித்துவ கொள்கைகளைப் பின்பற்றி வரும் சீனா தொடர்ந்து அவற்றைக் கடை பிடிக்குமா அல்லது வடகொரியாவைத் தன் சுயநலனுக்காகக் கைகழுவிவிடுமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும். மூன்றாவதாக, வடகொரிய நிர்வாகம் இப்பிரச்சினையைப் பயன்படுத்தி அமெரிக்க, தென் கொரிய எதிர்ப்புப் பிரச்சாரங்கள் மூலம் தன் ஆட்சிக்கு மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமான ஆதரவைத் தற்போது பெற்றுவிட்டது. இதனால் மக்கள் தங்களின் அன்றாடப் பிரச்சினைகள், வறுமை, பொருளாதார நெருக்கடிகளை மறந்து, அமெரிக்காதான் தங்கள் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று நம்பவைக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக, சீனா, ரஷ்யாவின் உதவியைப் பெரும் வாய்ப்பாகவும் அமெரிக்கா, தென் கொரியா ஜப்பான் மற்றும் உலக முதலாளித்துவ நாடுகள் அனைத்தையும் தனியாக எதிர்த்து நிற்கும் துணிச்சலுள்ளவர்கள் தாங்கள் என்பதை உறுதிப்படுத்தும் வாய்ப்பாகவும் வடகொரியா இப்பிரச்சினையைப் பயன்படுத்துகிறது. இத்துடன், வடகொரியாவில் தன் குடும்ப ஆட்சியை மூன்றாம் தலை முறையாக நிலைநாட்ட ராணுவம், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் ஆதரவைப் பெற ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார் கிம் ஜாங்க் மிமி. ஆடம்பரப் பொருட்கள் இறக்குமதிக்கு உலக நாடுகள் பொருளாதாரத்தடை மூலம் முட்டுக்கட்டை போட்டதையும் மீறிப் பல நவீன சொகுசு மகிழுந்து வாகனங்களைக் கடத்தல் மூலம் இறக்குமதி செய்து தன் நம்பிக்கையான மூத்த ராணுவ அதிகாரிகளுக்குப் பரிசாகக் கொடுத்ததுடன், ஏப்ரல் 2010இல் பதவி ஓய்வுபெறும் சுமார் 100 ராணுவ அதிகாரிகளுக்குப் பணி நீட்டிப்பும் செய்து ராணுவத்தின் ஆதரவை உறுதிசெய்ய இப்பிரச்சினையை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார் கிம். நான்காவதாக, தென்கொரியாவின் அமெரிக்க ஆதரவு அதிபரான லீ மையாங்-பேங் (Lee Myung – Bak) தன் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி இடைத்தேர்தலில் பொதுமக்கள் ஆதரவைத் தன் கட்சிக்குப் பெறுவதற்கும் தன் அமெரிக்க ஆதரவுக் கொள்கைகளை நியாயப்படுத்தவும் இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். மேலும் சர்வதேசப் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி வட கொரியாவைத் தனிமைப்படுத்திப் பல்வேறு நிர்ப்பந்தங்கள் விதித்து வடகொரிய மக்களை ஆட்சியாளர்களுக்கெதிராகத் தூண்டிவிட்டு இணைப்பை ஏற்படுத்தலாம் என்னும் குறுகிய நோக்கத்தில் கனவு காண்கின்றனர் தென்கொரிய வல்லுனர்கள் சிலர். ஆனால் இவர்களின் உண்மையான நோக்கம் இரு கொரியாக்களையும் இணைப்பதா அல்லது அவ்வப்போது பதற்றத்தை ஏற்படுத்தித் தன் நாட்டு மக்களின் ஆதரவையும் அமெரிக்காவின் ஆதரவையும் பெற்றுத் தேர்தல் ஆதாயம் பெறுவதா என்பதுதான் முக்கியக் கேள்வி. வடகொரியாமீது பொருளாதாரத் தடைகள், துர்ப் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தினால் தென்கொரியாமீது போர் தொடுக்கப்போவதாக வடகொரியா நேரடியாக, கடுமையாக மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, அதிக விரக்தியில் இருக்கும் நபரும் நாடும் எத்தகைய ஆபத்தான முடிவுகளையும் எடுக்க நேரிடும் என்பதை உணர்ந்த தென்கொரிய அதிபர் லீ தன் தீவிரத்தைக் குறைத்துக்கொண்டுள்ளதால் தற்போது பதற்றம் குறைந்துள்ளது. கப்பல் மூழ்கடிப்புப் பிரச்சினையில் உண்மை எதுவாக இருந்தாலும் வடகொரியா எழுப்பிய சில நியாயமான கேள்விகளுக்குத் திருப்திகரமான பதிலைத் தென்கொரியாவோ அமெரிக்காவோ இதுவரை கொடுக்கவில்லை என்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக வடகொரிய, தென் கொரியக் கப்பலைத் தான் மூழ் கடிக்கவில்லையெனத் திட்டவட்டமாக அறிவித்ததோடு, இதன் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதாகவும் கூறுகிறது. முதலாவதாகக் கப்பல் கவிழ்ப்பு நடந்த நாட்களில் ‘பறக்கும் கழுகு’ என்னும் பெயரில் அமெரிக்க – தென்கொரியக் கடற்படைகள் போர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்ததாகவும் இந்தப் பயிற்சியின்போதுதான் அமெரிக்க ஏவுகணைகள் தென்கொரியக் கப்பலை மூழ்கடித்ததாகவும் வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. இத்துடன் தங்கள் நிபுணர்களை நிகழ்ச்சி நடந்த இடத்திற்குச் சென்று ஆராயத் தென்கொரியா – அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து அனுமதிக்க மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. பன்னாட்டு விசாரணைக்கு முன்னால் ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற பிராந்திய நாடுகளின் நிபுணர்களைச் சேர்க்காமல் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சுவீடன் நாட்டு நிபுணர்களை மட்டும் வைத்துத் தயாரித்த 400 பக்க அறிக்கையை ஏற்றுக்கொள்ள இயலாது எனத் திட்டவட்டமாக வடகொரியா அறிவித்து வருகிறது. இத்துடன் வட-தென் கொரிய ராணுவ நிபுணர்கள் கூட்டாக இது குறித்து ஆராய்வோம் என்ற வடகொரியாவின் கோரிக்கையைத் தென்கொரியா மறுத்து வருவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இந்தப் பின்னணியில் ஜூன் 27இல் அமெரிக்கா தலைமையிலான ஐ.நா. ராணுவக் குழுவுடன் கப்பல் மூழ்கடிப்பு குறித்துப் பேச்சுவார்த்தைக்கு வரும்படி விடுக்கப்பட்ட அழைப்பை வடகொரியா ஏளனம்செய்து நிராகரித்தது அமெரிக்காவுக்கு எரிச்சலூட்டியது. 1953 முதல் கொரிய தீபகற்பம் அவ்வப்போது பெரிய, சிறிய அளவில் பதற்றங்களைச் சந்தித்துக்கொண்டேயிருக்கிறது. 1969இல் அமெரிக்க உளவு விமானத்தை வடகொரியா சுட்டு வீழ்த்தியதால் ஆத்திரமடைந்த நிக்சன் விமானத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு கிஸ்ஸிங்கரின் தலையீட்டால் தன் திட்டத்தைக் கைவிட்டார். அவ்வப்போது அமெரிக்கா, வடகொரியாவை மிரட்டிவருகிறது. 1994இல் பில் கிளிண்டன் வட கொரியாவின் அணுசக்தி ஆய்வு மையங்கள்மீது விமானம் – ஏவுகணைகள் மூலம் தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டுக் கடைசி நிமிடத்தில் ரத்துசெய்தார். ஆனால் அவ்வாண்டே இரு கொரிய எல்லைக்கு விஜயம் செய்த கிளிண்டன், “வடகொரியா தென்கொரியாவின் மீது ராணுவத் தாக்குதல்கள் நடத்தினால் அந்நாடே இருக்காது” எனக் கடுமையாக எச்சரித்தது நினைவுகூரத்தக்கது. வடகொரியா 2006, 2009இல் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி நடத்திய அணு ஆயுதச் சோதனைகளும் அவ்வப்போது நடத்தும் ஏவுகணை சோதனைகளும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. இரு கொரிய பிரச்சினையால் அவ்வப்போது அமைதிக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதும் உண்மை. 1971இல் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன. 1972இல் இருநாட்டு அதிகாரிகளும் பரஸ்பர விஜயம் மேற்கொண்டனர். ஆனால் 1973இல் தென்கொரிய அதிபர் பார்க் சாங் லீ (Park Chung – Lee) ஐ.நாவின் உறுப்பினராகத் தன்னிச்சையாக முயற்சி மேற்கொண்டதால் உறவு முறிந்தது. இத்துடன், இரு கொரிய இணைப்பிற்கு ஆதரவு தெரிவித்த தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் கிம் – டியூ – யங்ஐத் (Kim-Dau-Jung) தென்கொரிய உளவுத் துறை கடத்தியதால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் 1984 வரை தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. மீண்டும் 1984இல் இருநாட்டுப் பேச்சுவார்த்தைகள் தொடங்கினாலும் 1986இல் அமெரிக்க ராணுவப் போர் ஒத்திகையில் ஆத்திரமடைந்த வடகொரியா, இருதரப்புப் பேச்சு வார்த்தையை முறித்தது. இத்துடன் 1987இல் தென்கொரிய வர்த்தக விமானம் வடகொரிய உளவாளிகளால் தகர்க்கப்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1988இல் சியோலில் நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டியை இரு நாடுகளும் சேர்ந்து நடத்த வடகொரியா விருப்பம் தெரிவித்ததைத் தென்கொரியா நிராகரித்தது உறவைச் சிக்கலாக்கியது. இதைத் தொடர்ந்து 1990இல் இருநாட்டுப் பிரதமர்களும் முதல் முறையாகச் சந்தித்தாலும் வட கொரிய ஏவுகணைச் சோதனைகள் உறவை மேம்படுத்தவிடவில்லை. 1991இல் வடகொரியா, ஐ.நாவில் உறுப்பினரானாலும் கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்பவில்லை. இந்தப் பின்னணியில் இருபதாண்டுகளுக்கு முன்பு இரு ஜெர்மனியும் அமைதிவழியில் இணைந்ததுபோல் இரு கொரியாக்களையும் இணைக்கும் நோக்கத்தில் தென் கொரியாவின் அதிபர் ரோ-முரோ-ஹான் (Roh-Mro-Hyun) 2003இல் உருவாக்கிய இரு கொரிய இணைப்பு அமைச்சகம் பல்வேறு அமைதி முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக 2004இல் இரு நாட்டு எல்லையிலிருந்து செயல்பட்ட ஒலிபெருக்கிப் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட்டன. அரசியல், பொருளாதார, கலாச்சாரப் பரிவர்த்தனைகள் படிப்படியாகத் தொடங்கின. தென்கொரியா தாராளமான பொருளாதார உதவிகளை வட கொரியாவுக்குச் செய்தது. இத்துடன் பிரிந்துபோன குடும்பங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக இருநாடுகளும் கூட்டாகத் தொழில் மையங்களை அமைத்துச் செயல்பட்டன. ஆனால் அனைத்து முயற்சிகளுக்கும் தற்போது மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளின் மத்தியில் ரஷ்யா 2010 ஜூன் 29 முதல் ஜூலை 9 வரை வோஸ்டாக் (Vostok 2010) என்னும் பெயரில் ஜப்பான் – கொரிய கடற்பகுதியில் நடத்திய பிரமாண்டமான கடற்போர் ஒத்திகைக்கு ஜப்பான் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இந்தப் போர் ஒத்திகை ரஷ்ய அதிபரின் நேரடிப் பார்வையில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிடமிருந்து ரஷ்யா ஆக்கிரமித்த தெற்கு குறில் தீவு (South Kurile Island) பகுதியிலும் இப்போர் ஒத்திகை நடத்தப்பட்டதால் ஜப்பான் ஆத்திரமடைந்துள்ளது. ஜப்பானும் ரஷ்யாவும் இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பின்பும் அமைதி ஒப்பந்தமோ போர் முடிவு ஒப்பந்தமோ செய்யாத நாடுகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தச் சூழ்நிலையில் சுமார் 20,000 போர் வீரர்கள், 70 போர் விமானங்கள், 30 போர்க் கப்பல்கள் கலந்துகொண்ட போர் ஒத்திகையை ரஷ்யா நடத்தியது அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா முதலான நாடுகளுக்குத் தன் வல்லமையை வெளிப்படுத்தும் செயலாக அமைந்துள்ளது. ஜப்பானின் எதிர்ப்பை நிராகரித்த ரஷ்யா அடுத்த போர் ஒத்திகையை 2011இல், ‘நடுமையம் 2011’ (Center 2011) என்னும் பெயரில் நடத்தப்போவதாக அறிவித்ததோடு புதிதாகப் பத்து நவீன அணுசக்தி நீர் மூழ்கிகள் கட்டப்போவதாகவும் அறிவித்துப் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரிய தீபகற்பத்தின் தற்போதைய பதற்றமும் தெற்காசிய நாடுகளிடையே நிலவும் பிரச்சினைகளும் வல்லரசுகளுக்கிடையே நடக்கும் புதிய பனிப்போர்களும் உலகில் பெருகிவரும் ஆயுத உற்பத்தியும் பயங்கரவாதமும் பிற வன்முறைகளும் உலக நாடுகளின் பெரும்பாலான தலைவர்களும் ஆயுதத் தரகர்களும் போர் வெறியர்களும் அமைதியை விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. இந்தச் சூழ் நிலையில் உலக அமைதி என்பது கானல்நீர்தான். |