இன்று காலை 6:30 மணிக்கு மகிந்த ராஜபக்ச தனது இருப்பிடமான அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார். மக்களின் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறி மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார் அதே வேளை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானதும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மைத்திரிபால சிரிசேனவுடன் மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் உரையாடினார். நடைபெற்ற தேர்தல் வன்முறைகளின்றி வெளிப்படையானதாகவே நடத்தப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என்று மைத்திரிபால குழுவினர் உறுதி வழங்கியிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் வறுமை, தற்கொலை, பொருளாதார நெருக்கடி என்பனவே சிங்கள மக்கள் மத்தியில் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஐ.எம்.எப், உலக வங்கி போன்றன இலங்கையில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு அரச செலவீனங்களைக் குறைத்து முழுமையான தனியார் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துமாறு மகிந்த ராஜபக்சவிற்கு அழுத்தங்களை வழங்கியது. போர்க்குற்றவாளியான மகிந்த அதனை நடைமுறைப்படுத்தினார். அதனால் வறுமையும் தற்கொலையும் தலைவிரித்தாடியது. அதே பொருளாதாரக் கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தவிருக்கும் மைத்திரியின் ஆட்சியில் சிங்கள மக்களுக்கு எந்த விமோசனமும் ஏற்படாது. மாறாக சிக்கல்கள் அதிகரிக்கும். ஆக, பேரினவாதக் கருத்துக்களைச் சிங்கள மக்கள் மத்தியில் இன்னும் அதிகமாக விதைக்க வேண்டிய தேவை ஏற்படும்.தேசிய இனப்பிரச்சனை கொழுந்துவிட்டெரியும். வரலாற்றில் இதுவரையில் நடைபெற்றது போன்று பேரினவாத ஆட்சியே நடைபெறும் என்பதால் இலங்கையில் தேசிய இனப்பிரச்சனை தொடரும்.
இதன் மறு விளைவாக தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்புக்கள் தோன்றும். அந்த எதிர்ப்புக்களை எதிர்கொள்வதற்கு அரச துணைக் குழுக்களை நாடவேண்டிய தேவை ஏற்படும்.
ஆக, கருணா, பிள்ளையான், கே.பி, டக்ளஸ் தேவானந்த போன்ற தலைகள் மைத்திரியின் ஆட்சியில் பாதுகாக்கப்படுவர்.