கொலைகளுடன் தொடர்புடைய கப்டனை அமெரிக்காவுக்கு அனுப்பிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச

345

 

2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நடந்த ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போக செய்யும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கடற்படை அதிகாரியை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது.

gothapaya_visite_jaffna_08011421

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இந்த குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்திய புலனாய்வுப் பிரிவு பொலிஸார், கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக கடற்படை அதிகாரியான பீ.கே. தஸநாயக்க என்பவர் வெளிநாடு செல்ல தடையுத்தரவை பெற்றிருந்தனர்.

கடற்படையின் நடவடிக்கை பணிப்பாளரான கப்டன் பீ.கே. தஸநாயக்கவை அமெரிக்காவில் கடற்படை பாடநெறி ஒன்றை கற்பதற்காக கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் அங்கு அனுப்பி வைத்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை கொழும்பில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போக செய்தல் போன்ற சம்பவங்கள் தொடர்பில் தஸநாயக்கவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வந்தனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதியும் ஜப்பானுக்கான தூதுவருமான வசந்த கரன்னாகொடவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக இருந்த லெப்டினட் கமாண்டார் சம்பத் முனசிங்கவை கைது செய்து நடத்திய விசாரணைகளில் பீ.கே. தஸநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்ட கொலை, கடத்தல், காணாமல் போக செய்தல் போன்ற சம்பவங்களுடன் வசந்த கரன்னாகொடவிற்கு நேரடியான தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

எனினும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தனது அதிகாரத்தை முறைகேடான முறையில் பயன்படுத்தி போலியான ஆவணங்களை சமர்ப்பித்து தஸநாயக்கவை, அமெரிக்காவில் பாடநெறி ஒன்றுக்காக அனுப்பி வைத்துள்ளார். அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அழுத்தங்களை கொடுத்து தஸநாயக்க வெளிநாடு செல்வதற்காக நடவடிக்கைகளை கோத்தபாய மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் குறித்த விசாரணை சம்பந்தமாக கடற்படை அதிகாரிகளை ஆஜர்ப்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் 6 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தகவல் தருமாறு நீதவான் திலின கமகே, கடற்படையின் சட்டப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

SHARE