கொழும்பிலும், திருகோணமலையிலும் சிறிலங்கா கடற்படையின் இரகசிய தடுப்பு முகாம்கள் கண்டுபிடிப்பு.

136

கொழும்பிலும், திருகோணமலையிலும் சிறிலங்கா கடற்படையினரின் இரகசியத் தடுப்பு முகாம்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

srilankan-navy

கொழும்பு சைத்திய வீதியில் ‘புட்டு பம்பு’ என்ற பெயரிலும் திருகோணமலை கடற்படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்திரவியல் விஞ்ஞான பீட வளாகத்தில் நிலத்துக்கு கீழ் ‘கன்சைட்’ என்ற பெயரிலும் இந்த இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்துள்ளன.

விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்களை தடுத்து வைப்பதாக குறிப்பிட்டே இந்த இரகசிய முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இரகசிய முகாம்களிலேயே கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான ஆதாரங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ளன.

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவினால், தனது முன்னாள் பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்கவுக்கு எதிராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் கீழ், விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

கோட்டை நீதிவான் நீதிமன்றில் பெறப்பட்ட சிறப்பு அனுமதி மூலம், புலனாய்வுப் பிரிவின் அதிகாரி நிசாந்த டி சில்வா தலைமையிலான குழு, இந்த இரு இரகசிய தடுப்பு முகாம்களையும் ஆய்வு செய்துள்ளது.

திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள நிலத்தடி சிறைக்கூடங்களை உள்ளடக்கிய கன்சைட் எனப்படும் இரகசிய இடம் தற்போது சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த இரகசியத் தடுப்பு முகாம்கள் தொடர்பாக, முன்னர் திருகோணமலை கடற்படைத் தள கட்டளை தளபதியாக இருந்தவரும், தற்போது கடற்படை தலைமையக விநியோக பிரிவுப் பணிப்பாளராக கடமையாற்றுபவருமான கொமாண்டர் கஸ்யப கோத்தாபய போல் உள்ளிட்ட 22 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சாட்சியமளித்துள்ளனர்.

இது தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதிவான் பிரியந்த லியனகேவுக்கும் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

SHARE