“கொழும்பில் எனது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த ராஜபக்‌ஷவினர் இந்த நாட்டில் மீண்டும் வெள்ளை வான் போன்ற தீவிரவாத கலாசாரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.” –

149

 

“கொழும்பில் எனது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த ராஜபக்‌ஷவினர் இந்த நாட்டில் மீண்டும் வெள்ளை வான் போன்ற தீவிரவாத கலாசாரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.” –

ravikjdjjdjd5545655

இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார் நிதியமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ரவி கருணாநாயக்க. இந்தச் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவருவதோடு, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு, கொட்டாஞ்சேனை பெனடிக் மைதானத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்த அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள தமது ஆதரவாளர்களைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் ராஜபக்­ஷவின் கரம் இருக்கின்றது. நாட்டில் கடந்த ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னர் சமாதானமான – நிம்மதிமிக்க சூழ்நிலை உருவாகியிருக்கும் நிலையில், ராஜபக்ஷ­வின் நிழல் இவ்வாறான தீவிரவாதச் செயற்பாடுகளின் ஊடாக அவர்களின் செயற்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கின்றன. எனினும், நாங்கள் இதற்கு அஞ்சப்போவதில்லை. சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் உள்ளன. இது குறித்து ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவருவதோடு, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுப்பேன். அன்று வெள்ளைவான் ஊடாக அரங்கேற்றப்பட்ட நாடகமே இன்று இப்படியான செயற்பாடுகளின் ஊடாக முயற்சிக்கப்படுகிறது. எனினும், அன்றைய நிலையை மீண்டும் இந்த நாட்டில் ஏற்படுத்துவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்று நாங்கள் உறுதியாகக் கூறுகின்றோம். ஜனநாயக பலத்தை முறியடிக்கச் செய்யும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் முயற்சிக்கு மக்கள் உதவி வழங்கவேண்டும் எனக் கோருகின்றேன்” – என்றார். இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருபவர்களை அமைச்சர்களான ரோசி சேனநாயக்க, அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்டோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

SHARE