கொஸ்லாந்தை மீரியபெத்த மக்களுக்கு, மென்மேலும் நிவாரண உதவிகள் அவசியமில்லை.
அனுதாப உணர்வால் உந்தப்பட்டு நிவாரண பொருட்களை ஊர்திகளில் கூட்டாகவோ, தனிபட்ட முறையிலோ எடுத்து செல்ல வேண்டாம் என்றும், அவ்விடம் கொண்டு செல்லப்படும் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கு நடைமுறை காரணங்கள் பல தடையாக இருக்கின்றன.
இந்நிலையில், வாழ்விழந்த, வீடிழந்த குடும்பங்களுக்கு பாதுகாப்பான ஸ்தலத்தில் சொந்த நிலமும், அங்கு வாழ வீடும், குழந்தைகளுக்கு கல்வியுமே மீரியபெத்த மக்களின் இன்றைய பிரதான எதிர்பார்ப்புகளாக இருக்கின்றன.
இந்நிலையில் மலையக மக்களின் சொந்தநில, சொந்த வீட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி நிற்கும் அரசியல், சமூக, சட்ட முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
முன்னெடுப்புகள் இலங்கையின் இந்நாள், முன்னாள் ஆட்சியாளர்களை நோக்கி மாத்திரம் அல்ல, இந்த மக்களை இங்கே கொண்டு வந்து, அநாதைகளாக சுதந்திர இலங்கையில் விட்டு போய்விட்ட பிரித்தானிய பேரரசையும், இந்த மக்களை கேளாமல் இலங்கை அரசுடன் ஒப்பந்தங்களை செய்து கொண்ட இந்திய அரசையும் நோக்கியும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இந்த முயற்சிகளுக்கு அனைத்து ஒத்தாசைகளையும் வழங்குமாறு உள்நாட்டு, வெளிநாட்டு உணர்வாளர்களையும், நல்ல உள்ளங்களையும் வேண்டுகிறேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து கொஸ்லாந்தை மீரியபெத்த மக்களை நேரடியாக சந்தித்து களநிலவரங்களை அறிந்து கொண்டு கொழும்பு திரும்பிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது,
இன்றைய நிலவரப்படி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கொஸ்லாந்தை மீரியபெத்த மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற நல்லெண்ணம் காரணமாக, உணர்வால் உந்தப்பட்டு நிவாரண பொருட்களை ஊர்திகளில் கூட்டாகவோ, தனிபட்ட முறையிலோ எடுத்து செல்ல வேண்டாம் என்றும், அவ்விடம் கொண்டு செல்லப்படும் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கு நடைமுறை காரணங்கள் பல தடையாக இருக்கின்றன என்பதையும் தெரிவித்து கொள்கின்றேன்.
மீண்டும் நிவாரண பொருட்கள் அவசியப்படுமானால், அதுதொடர்பாக அங்குள்ள தொண்டுள்ளம் கொண்ட நமது இணைப்பாளர்கள் கண்காணித்து அறிவிப்பார்கள்.
மலையக மக்களின் காணி, வீட்டு குடியிருப்பு உரிமைகள் மற்றும் அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளமை ஆகியவை தொடர்பான உண்மைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும். இந்த பிரச்சினைகள் தேசிய, சர்வதேசியமயப்படுத்தப்பட வேண்டும்.
ஆகவே இவை தொடர்பாக உள்நாட்டு, வெளிநாட்டு மனித உரிமை அமைப்புகள் மற்றும் சிங்கள முற்போக்கு கட்சிகள், மலையக அமைப்புகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் வடகிழக்கு மக்கள் அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும் நோக்கில் செயல்பாடுகளை முன்னெடுக்க நாம் தயாராகி கொண்டிருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.