அமெரிக்க விமான நிறுவனங்களில் விபத்து என்பது மிகவும் அரிதாகவே நடக்கும் ஒன்று. 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பினாக்கிள் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் 49 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்திற்குப் பிறகு பாதுகாப்பு வசதிகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு, தற்போது பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் விமானிகளுக்கான பயிற்சி முதல் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வது வரை தனித் தனியாக இருந்த துறைகள் விரிவான திட்டத்தின் மூலம் ஒன்றிணைக்கப்பட இருக்கிறது. காக்பிட் எனப்படும் விமானிகளின் அறையில் ஒரு பார்வையாளரை நியமிப்பது, ஊழியர்களை ஊக்குவிப்பது, பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது தெரிய வந்தால் அதைக் களைய பல வழிகளிலும் விரைந்து செயலாற்றுவது என்று பல முக்கிய அம்சங்கள் இதில் உள்ளன. நாளை இதற்கான இறுதி ஆணை கையெழுத்தாகி வந்ததும் அடுத்த மூன்று ஆண்டுகளில் இத்திட்டத்தின் தேவைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாதுகாப்பு திட்டத்தின்படி விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதன் மூலம் விமான சேவை நிறுவனங்களுக்கு 105 முதல் 242 மில்லியன் டாலர்கள் 10 வருடங்களில் மிச்சமாகும் என்று கணிக்கப்படுகிறது.
விமான நிறுவனங்கள் தீவிரமாக இருந்திருந்தால் 2001 முதல் 2010 வரை நடந்த 123 விபத்துகளை தடுத்திருக்கலாம் என்று மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது