சனல் 4 வெளியிட்ட மற்றொரு போர்க்குற்ற ஆதாரம்

499

 

 

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான மற்றொரு காணொளி ஆதாரத்தை சனல்4 தொலைக்காட்சி நேற்று வெளியிட்டுள்ளது.

பெண் புலிப் போராளிகளின் உடல்களைச் சுற்றி நிற்கும் சிறிலங்காப் படையினரின் நடத்தைகள், அவர்களின் மிருகத்தனமானதும், பாலியல் வன்முறைகளையும் இந்தக் காட்சி விளக்குவதாக உள்ளது என்று சனல்4 குறிப்பிட்டுள்ளது.

இது எப்போது படமாக்கப்பட்டது என்று சரியாகத் தெரியாவிட்டாலும், போரின் இறுதி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் நடந்துள்ளது என்றும் சனல் 4 கூறியுள்ளது.

கைத்தொலைபேசி மூலம், சிறிலங்காப் படைச் சிப்பாய் ஒருவரால் பிடிக்கப்பட்ட இந்தக் காணொளியில், சிங்களத்தில் சிறிலங்காப் படைச் சிப்பாய்கள் பேசுவதையும் கேட்க முடிகிறது.

அவர்களின் சீருடையைக் கொண்டு, சிறப்புப் படைப்பிரிவினராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அவர்கள், புலிப் போராளிகளின் மரணத்தையும், அவர்களின் உடல்கள் மீதான பாலியல் மீறல் செயல்களையும் கொண்டாடும் வகையில், சிரித்து மகிழ்வதையும் இந்தக் காணொளி எடுத்துக் காட்டுகிறது.

இவர்களுக்கு என்ன நடந்தது என்று சரியாகத் தெரியவில்லை.

இவர்கள் போராளிகள் போலத் தோற்றமளித்தாலும், போர்ச்சீருடை அணிந்திருக்கவில்லை என்றாலும், இறந்த நிலையில் உள்ளனர்.

இந்தப் படங்களை முன்னணி தடயவியலாளர், கலாநிதி றிச்சர்ட் ஷெப்பேர்ட் ஆய்வு செய்துள்ளார்.

அவர் இந்தக் காயங்கள் உண்மையானதே என்றும், போலியானது அல்ல என்றும் முடிவுக்கு வந்துள்ளார்.

ஆனால், சடலங்களில் காணப்படும் சில அறிகுறிகள் இவை, போர்முனையில், சண்டை அல்லது பதுங்கித் தாக்குதல் ஒன்றின் போது ஏற்பட்ட காயங்கள் போலத் தோன்றலாம்.

ஆனால்,இவற்றில் குறைந்தது இரண்டு சடலங்களின் தலையில் ஏற்பட்டுள்ள காயங்களைப் பார்க்கும் போது,அதிவேகம் கொண்ட துப்பாக்கியால் சுடப்பட்டதாக தோன்றுகிறது.

இதன்மூலம், இவை படுகொலைகளாக இருப்பதற்கான வாய்ப்புக்களை நிராகரிக்க முடியவில்லை என்ற முடிவுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளியை, பிரித்தானியத் தமிழர் பேரவையே தமக்குத் தந்ததாகவும், சனல்4 தெரிவித்துள்ளது.

எனினும், பிரித்தானிய நீதிமன்றங்களில் பணியாற்றும் சுதந்திரமான, ஒளிப்பட நிபுணர் மூலம் இது ஆராயப்பட்டதாகவும் சனல் 4 குறிப்பிட்டுள்ளது.

இந்தக் காணொளியை ஒவ்வொரு கட்டம் கட்டமாக ஆய்வுக்குட்படுத்திய பின்னர், இதில் எந்த ஏமாற்றுவேலையோ, திரிபுபடுத்தலோ மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்று முடிவுக்கு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இது பெண்களின் மீது இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளுக்கு மற்றொரு ஆதாரமாக அமைந்துள்ளது என்றும் சனல் 4 குறிப்பிட்டுள்ளது.

SHARE